நியூயார்க்கின் லாங் ஐலேண்டை சேர்ந்த 5 வயது சிறுவன் ஜோர்டன் மரோட்டா. இந்தச் சிறுவன் பிறக்கும்போதே இடது கையின்றி பிறந்திருக்கிறார்.
இந்தநிலையில் சிறுவனுக்கு மூளையின் கட்டளைக்கு இணங்கி இயற்கையாகச் செயல்படும் வகையில் அயன் மேன் தீமில் (bionic Hero Arm) மருத்துவர்கள் கையைப் பொருத்தியுள்ளனர். இதன் மூலம் உலகில் சிறிய வயதில் `பயோனிக் ஹீரோ ஆர்ம்' பெறும் நபர் என்ற பெருமையை ஜோர்டன் பெற்றுள்ளார்.
சிறுவனுக்குப் பிடித்த சூப்பர் ஹீரோ கதாபாத்திரம் அயர்ன் மேன் என்பதால், இந்தக் கையை அப்படியே அச்சு அசலாக அயர்ன் மேன் திரைப்படத்தில் வரும் கைகளைப் போலவே சிவப்பு மற்றும் கோல்டன் நிறத்தில் வடிவமைத்துள்ளனர்.
சிறுவனின் இடது கை முடியும் இடத்திலிருந்து இந்தக் கை பொருத்தப்படுகிறது. கை தசைச் சுருக்கங்களைக் கண்டறிய மின்முனைகள் மற்றும் சென்சார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. எளிதாக இந்தக் கையை இணைந்து பிரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கையை `நப்பி’ என்று குடும்பத்தினர் செல்லமாக அழைக்கின்றனர்.
இது பேட்டரி மூலம் இயங்கக்கூடியது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 14 மணி நேரம் வரை செயல்படும் என்று கூறுகின்றனர். பொதுவாகவே இந்த அட்வான்ஸ்டு செயற்கை கைகள் ஏழு அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுடைய குழந்தைகளுக்கு வழங்கப்படும்.
இருந்தாலும், ஓபன் பயோனிக்ஸ் நிறுவனத்தில் சான்றளிக்கப்பட்ட செயற்கை மற்றும் எலும்பு முறிவு நிபுணரான டேனியல் கிரீன், சிறுவனின் உடல் வளர்ச்சியும், உணர்வு ரீதியான வளர்ச்சியும் சிறப்பாக இருந்ததால் இந்தக் கைகள் அவருக்கு அளிக்கப்பட்டதாகக் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் அந்தக் கையை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதையும் சிறுவனுக்கு கற்றுக் கொடுப்பது எளிதாக இருந்தது என்றார்.
இதன் மூலம் உலகிலேயே மிகச் சிறிய வயதில் பயோனிக் ஹீரோ ஆர்ம் பெறும் சிறப்பினை ஜோர்டன் பெற்றார். இதற்கு முன்பு லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த ஆறு வயது சிறுவன் ஹீரோ ஆர்ம் பயன்படுத்தினார்.
ஜோர்டானின் தாய் ஆஷ்லே மரோட்டா, தன் மகன் இரு கைகளையும் பயன்படுத்தி விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், இந்த ஹீரோ ஆர்ம் தன் மகனுக்கு நம்பிக்கையைக் கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
Comments
Post a Comment