அனைத்துப் பற்களும் சீராக ஒரே நிறத்தில் இல்லாமல், அங்கங்கே கறை பிடித்தது போலவும், வெள்ளை நிறப் புள்ளிகள் இருப்பது போல பல் அமைப்பு இருப்பதைப் பார்த்திருப்போம். குறிப்பிட்ட சில பகுதிகளில் உள்ள மக்களுக்கு இந்தப் பிரச்னை பொதுவாகக் காணப்படுகிறது. இதனை மருத்துவ சொற்களில் ஃப்ளூரோசிஸ் (Fluorosis) என்கின்றனர். இதுபற்றிய கூடுதல் விவரங்களை அளிக்கிறார் சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவர் ஏக்தா.
ஃப்ளூரைடு (Fluoride) என்பது இயற்கையாக உருவாகும் ஒருவகை தாதுப்பொருள் (mineral). இது நிலத்தடி நீரில் காணப்படலாம். நாம் சாப்பிடும் பால், சர்க்கரை உள்ளிட்ட சில உணவுகளிலும் குறைந்த அளவில் காணப்படும். இவற்றை நாம் எடுத்துக்கொள்ளும்போது ஃப்ளூரைடு உடலின் உள்ளே செல்கிறது. நம் உடல் அளவுக்கு அதிகமாக ஃப்ளூரைடை கிரகிக்கும்போது ஏற்படும் பிரச்னைதான் ஃப்ளூரோசிஸ். இந்தப் பிரச்னை பற்களிலும் (Dental Fluorosis) அல்லது எலும்பிலும் (Skeletal Fluorosis) ஏற்படலாம்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை...
பற்களில் வெள்ளை நிற புள்ளிகள், பழுப்பு நிறமாக மாறுவது, பற்களின் மேலே உள்ள லேயரான எனாமல் நீங்கி உடைவது (Chipping) போன்றவை இதற்கான அறிகுறிகள். சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்தப் பிரச்னையால் பாதிக்கப்படலாம். பற்களில் ஏற்படும் ஃப்ளுரோசிஸ் பிரச்னையை லேசான, மிதமான, தீவிர பாதிப்பு என்று மூன்றாகப் பிரிக்கலாம்.
லேசான பாதிப்பு எனும்போது பற்களில் வெள்ளை நிறப்புள்ளிகள் மட்டுமே காணப்படும். சிலருக்கு ஒரே ஒரு பல்லில் ஓரிடத்தில் மட்டுமே காணப்படலாம். மற்ற பற்களைவிட அந்தப் பல் சற்று அடர் நிறத்திலும் காணப்படலாம். மீதமுள்ள பற்கள் இயல்பான நிறத்தில் இறக்கும். மிதமான பாதிப்பு எனும்போது பற்கள் பழுப்பு நிறமாக மாறும். சில பற்களில் மேடு பள்ளங்கள் போல தோன்றும் சீரற்ற மேற்பரப்பு காணப்படும். சீரற்ற மேற்பரப்பு இருப்பதால் பற்களின் மேல் பாறை படிந்திருப்பது போன்ற உணர்வு ஏற்படும். தீவிரநிலையில் பாதிக்கப்பட்ட பல்லின் வலிமை குறைந்து அது உடைய ஆரம்பிக்கும்.
பற்களில் ஃப்ளூரோசிஸ் (Fluorosis) பிரச்னை ஏற்படுவதில் ஒரே ஒரு நன்மை உண்டு. லேசான, மிதமான பாதிப்பு உள்ளவர்களுக்கு எளிதாக பற்சொத்தை ஏற்படாது. இதுபோன்ற பாதிப்புள்ளவர்கள் முறையாக பிரஷ் செய்து வாய் சுகாதாரத்தைப் பேணினால் பற்சொத்தை எளிதில் தாக்காது. ஆனால், ஈறு சார்ந்த நோய்கள், பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.
பற்களின் நிறம், தோற்றத்தை சரி செய்வதற்காக சிகிச்சை மேற்கொள்ளப்படும். ஆனால், உடலின் உள்ளே இருக்கும் பிரச்னைக்குத் தீர்வு காண முடியாது. பற்கள் உடைந்த, உடையும் நிலையில் இருந்தால் அதற்கு மேல் ஒரு கவர் போல பொருத்தி (Crowning) சிகிச்சை அளிக்கப்படும். இது பல் மேலும் சேதமடையாமல் தடுக்கும்.
ஃப்ளூரோசிஸ் பிரச்னை இருக்கும் குழந்தைகள் ஃப்ளூரைடு சேர்க்கப்படாத டூத் பேஸ்ட் பயன்படுத்த வேண்டும். இந்தப் பிரச்னை இல்லாத ஆரோக்கியமான குழந்தைகள் பயன்படுத்தும் டூத் பேஸ்டில் குறிப்பிட்ட அளவு ஃப்ளூரைடு இருக்க வேண்டும். காரணம், ஃப்ளூரைடு என்ற தாது, பல்லின் மேலே படிந்து பல் சொத்தையாவதைத் தடுக்கும்.
தருமபுரி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருக்கும் நிலத்தடி நீரில் இயற்கையாகவே அதிகமாக ஃப்ளூரைடு காணப்படும். ஒட்டுமொத்தமாக அந்தப் பகுதியில் இந்தப் பிரச்னையைத் தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீரைக் கொதிக்க வைத்தால்கூட ஃப்ளூரைடு நீங்காது. வீடுகளில் இருக்கும் தண்ணீரில் சிறிது படிகாரம் போட்டு சிறிது நேரம் வைக்கும்போது அடியில் ஒரு லேயர் போல படியும். அதற்குப் பிறகு அந்த நீரை வடிகட்டி (மட்டுமே) பயன்படு்த்தலாம்.
இந்த முறையில் சுத்தம் செய்யும்போதும் தண்ணீரில் இருக்கும் ஃப்ளூரைடு முழுவதுமாக நீங்காது. குறிப்பிட்ட அளவு ஃப்ளூரைடு தண்ணீரில் காணப்படும். ஆனால், அது பற்களை பாதிக்கும் அளவுக்கு பிரச்னையை ஏற்படுத்தாது என்பதால் இதைப் பின்பற்றலாம்" என்றார்.
பற்கள் பாதுகாப்பு, சிகிச்சை, வாய் சுகாதாரம் தொடர்பான சந்தேகங்களுக்கு விடைகளையும் ஆலோசனைகளையும் அளிக்கும் Happy Teeth தொடர் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வெளியாகும்.
பற்கள் பராமரிப்பு பற்றி உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், கமென்ட்ஸில் தெரிவிக்கவும். உங்கள் கேள்விகளுக்கு பல் மருத்துவர்கள் பதில் அளிப்பார்கள்.
Comments
Post a Comment