Doctor Vikatan: மதியம் ஒரு மணிக்கு உணவு உண்ட பிறகு நான்கு மணிக்கு பசி ஏற்படுகிறது. அந்த நேரத்தில் நொறுக்குத்தீனிகள் எதையாவது சாப்பிட்டால், இரவு நேரத்தில் பசி எடுப்பதில்லை. இடைப்பட்ட நேரத்தில் என்ன சாப்பிடலாம்... எவ்வளவு சாப்பிடலாம்?
பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்
இடைப்பட்ட நேரத்தில் பசி எடுக்கும்போது நீங்கள் பழங்கள் சாப்பிடலாம். அது ஆரோக்கியமானதாக இருக்கும். பழங்கள் சாப்பிடுவதால் உடல் எடையும் கூடாது. வயிறு நிறைந்த உணர்வையும் பெறுவீர்கள்.
ஆனால், சிலருக்கு சூடாக ஏதேனும் சாப்பிட்டால்தான் சாப்பிட்ட திருப்தியே ஏற்படும். அவர்கள், கைப்பிடி அளவு வேர்க்கடலையை வறுத்துச் சாப்பிடலாம். அது வேண்டாம் என்பவர்கள் அரிசிப் பொரியை வறுத்துவிட்டு, அதில் மஞ்சள் தூள், வேர்க்கடலை, பச்சை மிளகாய், கறிவேப்பிலை எல்லாம் சேர்த்து மொறுமொறுப்பாகச் சாப்பிடலாம். அரிசிப் பொரியில் செய்கிற மண்டகி என்ற உணவு கர்நாடகாவில் மிகவும் பிரபலம். அரிசிப் பொரியை தண்ணீரில் நனைத்துப் பிழிந்துவிட்டு அதில் விருப்பமான மசாலா சேர்த்துச் சாப்பிடுவார்கள். இதுவும் வயிற்றுக்கு இதமாக இருக்கும்.
அவலில் தயாரிக்கப்படும் மிக்ஸர் சாப்பிடலாம். சிவப்பு அவலை எண்ணெயில் பொரிக்காமல், லேசாக எண்ணெய் விட்டு வறுத்துச் சாப்பிடலாம். உலர் பழங்கள் சாப்பிடுவதும் சிறந்த உணவாக இருக்கும். வால்நட்ஸ், பாதாம் தலா ஐந்து, இரண்டு பேரீச்சம் பழம். மற்றும் இரண்டு அத்திப்பழம் (நறுக்கியது) என எல்லாவற்றையும் கலந்து சாப்பிடலாம். இத்துடன் டிரை ரோஸ்ட் செய்த கார்ன்ஃப்ளேக்ஸ் சேர்த்தும் சாப்பிடலாம். நேரமும் வசதியும் இருந்தால் ஸ்மூத்தி செய்து குடிக்கலாம்.
மேற்குறிப்பிட்ட உணவுகளுடன் ஒரு கப் கிரீன் டீ எடுத்துக் கொள்ளலாம். உணவு இடைவேளைகளுக்கு இடையில் இப்படி மிகவும் மிதமான உணவுகளைச் சாப்பிட்டால் பிரச்னை இல்லை. பசியைத் தணிப்பதாக நினைத்துக்கொண்டு மினி டிபன், பஜ்ஜி, போண்டா போன்ற உணவுகளைச் சாப்பிட்டால் அடுத்த வேளை சாப்பிட முடியாது. செரிமானம் பாதிக்கப்படும். உடல் எடையும் அதிகரிக்கும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment