Doctor Vikatan: எனக்கு கடந்த சில மாதங்களாக கடுமையான கழுத்து வலி இருக்கிறது. ஜெல், ஆயின்மென்ட், வலி நிவாரணி எல்லாவற்றையும் முயற்சி செய்து பார்த்த பிறகும் வலி குறையவில்லை. தலையணை இல்லாமல் படுத்து உறங்கினால் கழுத்து வலி குறையும் என்று சிலர் சொல்கிறார்கள். அது எந்த அளவுக்கு உண்மை?
பதில் சொல்கிறார் சேலத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ்.
முதலில் உங்களுக்கு ஏற்பட்டுள்ள கழுத்துவலிக்கான காரணம் கண்டுபிடிக்கப்பட வேண்டும். எலும்பு, மூட்டு மருத்துவரையோ, வலி நிர்வாக மருத்துவரையோ அணுகினால், அவர் 'ஸ்பைனல் மவுஸ்' (Spinal Mouse) என்ற பிரத்யேக கருவியின் உதவியோடு கழுத்துப் பிரச்னைக்கான தீர்வைக் கண்டுபிடிக்கலாம். அதன் பிறகு சிகிச்சையை மருத்துவர் முடிவுசெய்வார்.
பொதுவாக நூறு பேரில் 80 பேருக்கு கழுத்து பின்பக்கமாக வளையும் தன்மை இல்லாமல் இருப்பதைப் பார்க்க முடிகிறது. இந்தக் காரணத்தால் கழுத்துவலி வந்திருக்கும் பட்சத்தில், பாதிக்கப்பட்ட நபர்கள், சாதாரண தலையணை உபயோகிப்பதைவிடவும், செர்வைகல் பில்லோ (Cervical Pillow ) எனப்படும் கழுத்துக்கான பிரத்யேக தலையணையைப் பயன்படுத்துவது சரியாக இருக்கும். நம் கழுத்துப் பகுதியானது ஆங்கில எழுத்து C போன்று வளையும். பின்பக்கம் வளையாத தன்மையால், இந்த C வடிவ வளைவும் மாறிப் போய், நம் கழுத்தானது ஸ்ட்ரெயிட்டாக மாறிவிடுகிறது.
இப்படி ஸ்ட்ரெயிட்டாக மாறிய கழுத்தை, மீண்டும் பழைய வளைவுக்குத் திருப்ப செர்வைகல் பில்லோ உதவியாக இருக்கும். உங்கள் தோள்பட்டை முடியும் இடத்தில் ஒரு ஸ்கேலை தலையை நோக்கிப் பிடித்துக் கொள்ளுங்கள். அதிலிருந்து அதே பக்கத்தின் காது மடலுக்கும், ஸ்கேலுக்குமான இடைவெளியை அளந்து கொள்ளுங்கள். அதுதான் உங்களுக்கான தலையணையின் அகலமாக இருக்க வேண்டும். அதைவிட அகலமான தலையணை பயன்படுத்தினாலும் கழுத்துப் பகுதி பாதிக்கப்பட்டு, வலி அதிகரிக்கும். எனவே, சரியான அகலம் கொண்ட செர்வைகல் தலையணையின் மூலம் கழுத்தின் இயல்பான வளைவை நம்மால் தக்கவைக்க முடியும்.
செர்வைகல் பில்லோ வாங்க இயலாதவர்கள் சாதாரண டர்கி டவலையோ அல்லது சாஃப்ட்டான பெட்ஷீட்டையோ ரோல் செய்து, மேற்குறிப்பிட்ட அகலத்தைக் கணக்கிட்டு மடித்து கழுத்துக்குக் கீழ் வைத்துக்கொண்டு படுப்பது மிகவும் சிறந்தது. இந்த ஸ்பெஷல் தலையணை உபயோகிப்பது மட்டுமன்றி, மருத்துவர் சொல்லித்தரும் கழுத்துக்கான பயிற்சிகளையும் செய்யும்போது வலியிலிருந்து எளிதில் மீளலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment