Doctor Vikatan: சர்க்கரை நோயாளிகளுக்கு நாவல் பழம் நல்லது என்பது உண்மையா? எத்தனை பழங்கள் எடுத்துக்கொள்ளலாம்? நாவல் பழக் கொட்டையைப் பொடித்து தண்ணீரில் கலக்கிக் குடித்தால் சர்க்கரை கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பது உண்மையா?
பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார்
பொதுவாக நீரிழிவு நோயாளிகளை எல்லாப் பழங்களையும் எடுத்துக்கொள்ள அறிவுறுத்த மாட்டோம். அவர்கள் சாப்பிட அனுமதிக்கப்படுகிற பழங்களில் முக்கியமான ஒன்று நாவல்பழம், நாவல் பழம் கிடைக்கும் சீசனில், ஒரு நாளைக்கு 3 முதல் 4 பழங்கள் வரை சாப்பிடலாம்.
முடிந்த அளவுக்கு அந்தக் காலத்தில் அதிகம் கிடைத்த நாட்டு நாவல் பழமாகப் பார்த்துச் சாப்பிடுவது மிகவும் சிறந்தது. ஒருவேளை அது கிடைக்கவில்லை என்ற பட்சத்தில் தற்போது சந்தையில் கிடைக்கிற நாவல்பழத்தையும் சாப்பிடலாம். நாவல்பழத்தில் 'ஜம்போலின்' (Jambolin) என்ற வேதிப்பொருள் இருக்கிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் உப பாதிப்புகளைத் தடுக்கும் தன்மை கொண்டது இந்த வேதிப்பொருள்.
பளிச்சென்ற நிறத்தில் இருக்கும் காய்கறி, பழங்கள் எல்லாவற்றிலுமே பாலிபினால் (Polyphenol ) அதிகமிருக்கும். ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி இன்ஃப்ளமேட்டரி தன்மைகள் கொண்ட அவை, நீரிழிவு நோயாளிகளின் ஆரோக்கியத்துக்கு உதவக்கூடியவை. நீரிழிவால் ஏற்படும் பாலிடிப்சியா (Polydipsia) எனப்படும் நீர்வேட்கையைத் தடுக்கும் தன்மை நாவல் பழத்துக்கு உண்டு என்று சித்த மருத்துவத்தில் சொல்லப்படுகிறது. அந்த வகையில், நாவல்பழத்தின் துவர்ப்புச் சுவைக்கு தாகத்தைத் தணிக்கும் தன்மை உண்டு.
இதே தன்மை நாவல்பழக் கொட்டைக்கும் உண்டு. நாவல்பழக் கொட்டைகளைக் காயவைத்துப் பொடித்ததை அரை டீஸ்பூன் அளவுக்கு தண்ணீரில் கரைத்து அவ்வப்போது எடுத்துக்கொள்ளலாம். நாவல்பழம் நீரிழிவுக்கு நல்லது என்பதால் இதை மட்டுமே சாப்பிடுவதால் நீரிழிவு குணமாகிவிடும் என நினைக்க வேண்டாம். நீரிழிவாளர்கள் எடுக்கக்கூடிய மருந்து மற்றும் சிகிச்சைகளோடு வாய்ப்பு கிடைக்கும்போது நாவல் பழத்தையும் சாப்பிடலாம். எனவே, பிற சிகிச்சைகள், உணவுக்கட்டுப்பாடு, வாழ்வியல் மாற்றங்கள் போன்றவற்றோடு நாவல் பழம் சாப்பிடுவதையும் சேர்த்துச் செய்யும்போது நிச்சயம் கூடுதல் பலன் கிடைக்கும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment