Doctor Vikatan: என் வயது 50. இரவு நேரத்தில் தொண்டை வறண்டு போவதாக உணர்கிறேன். அதற்காக தண்ணீர் குடித்தால் இரண்டு மணி நேரத்தில் சிறுநீர் கழிக்க வேண்டியுள்ளது. தூக்கம் கெட்டுப் போகிறது. இதற்கான தீர்வு என்ன?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்
இரவு நேரத்தில் ஏற்படும் தொண்டை வறட்சிக்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஜலதோஷம், சைனஸ் தொற்று, அலர்ஜி போன்ற பிரச்னைகள் இருந்தால் இரவு நேரத்தில் தொண்டை வறண்டு போகிற மாதிரி இருக்கும். உடனே சிறிது தண்ணீர் குடிக்க வேண்டும் போன்ற உணர்வு ஏற்படும்.
சிலருக்கு வாயைத் திறந்துகொண்டு தூங்கும் பழக்கம் இருக்கும். அந்தப் பழக்கத்தாலும் இரவில் தொண்டை வறட்சி ஏற்படலாம். சைனஸ், குறட்டை, 'அப்ஸ்ரக்ட்டிவ் ஸ்லீப் ஆப்னியா' (Obstructive sleep apnea) பாதிப்பு என வாயைத் திறந்துகொண்டே தூங்கும் பழக்கத்துக்கும் பல காரணங்கள் இருக்கலாம். ஒருவேளை நாவறட்சி ஏற்படுகிறது என்றால், அது உடலில் நீர்ச்சத்து குறைவதன் அறிகுறியாகவும் இருக்கலாம். அதற்கு நாள் முழுவதும் தண்ணீர் குடிக்க வேண்டும். இரவு நேரத்தில் மட்டும் தண்ணீர் குடிப்பது சரியானதல்ல. அப்படிக் குடித்தால் சிறுநீர் கழிக்கும் உந்துதல் நிச்சயம் வரும். நீங்கள் குறிப்பிட்டுள்ளதுபோல தூக்கமும் பாதிக்கப்படும்.
எனவே, பகல் வேளை முழுவதும் அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் குடித்துக்கொண்டே இருக்க வேண்டும். இரவில் 7 அல்லது 8 மணிக்கு மேல் தண்ணீர் குடிப்பதை நிறுத்திவிடுவது நல்லது. அதன் பிறகு தாகம் எடுத்தால் சிறிதளவு மட்டுமே தண்ணீர் குடிக்கலாம். எனவே, இந்தப் பழக்கத்தை சில நாள்கள் பின்பற்றிப் பாருங்கள். உடலில் நீர்வறட்சி ஏற்படாது என்பதால் இரவில் நாக்கும் வறண்டு போகாது. தண்ணீர் குடிப்பதால் அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அதனால் தூக்கம் பாதிப்பது போன்ற பிரச்னைகளையும் தவிர்க்கலாம்.
ஒருவேளை உங்களுக்கு ஏற்படும் தொண்டை வறட்சிக்கு சைனஸ், குறட்டை, வாயைத் திறந்து தூங்கும் பழக்கம் என மேற்குறிப்பிட்ட வேறு காரணங்கள் இருப்பின், மருத்துவரின் ஆலோசனையோடு அவற்றுக்கான தீர்வுகளைப் பெறவும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment