Doctor Vikatan: எனக்கு மதிய நேரத்தில் லேசாக தலைவலி ஆரம்பித்து மாலை நேரத்தில் அதிகரித்து இரவு ஒன்பது மணிக்கு உச்சத்தை அடைகிறது. வாந்தி எடுத்து குடல் சுத்தமான பிறகு தான் குறைகிறது. தலைவலி ஆரம்பிக்கும்போதே நான் பாராசிட்டமால் மாத்திரை எடுத்துக்கொள்வேன். அப்படி எடுத்துக் கொண்டால் அரை மணி நேரத்தில் தலைவலி சரியாகி விடுகிறது. மாதம் ஒருமுறை இதுபோல் தலைவலி வருகிறது. இதற்கு என்ன காரணம்.. தீர்வு என்ன?
-kjprakash123, விகடன் இணையத்திலிருந்து.
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மற்றும் நோய்க்குறியியல் மருத்துவர் மோனிகா.
தலைவலியில் பல வகைகள் உள்ளன. டீஹைட்ரேஷன் (Dehydration) எனப்படும் உடலில் நீர்வறட்சி ஏற்பட்டாலும் தலைவலி வரலாம். கண் பார்வையில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தாலும் அதன் அறிகுறியாக தலைவலி வரலாம். பவர் அதிகமானாலோ, குறைந்தாலோ, பார்வை மங்கினாலோ தலைவலிக்கலாம். பார்வையில் பிரச்னை இருப்பதை அலட்சியப்படுத்திவிட்டோ, அறியாமலோ, கண்ணாடி அணியாமல் இருப்பவர்களுக்கும் அடிக்கடி தலைவலி ஏற்படலாம்.
சிலருக்கு ஒரு பக்கம் வலிக்கிற ஒற்றைத் தலைவலி (மைக்ரேன்) ஏற்படலாம். இந்த வகை தலைவலியில் வாந்தி வரும். வாந்தி எடுத்து முடிக்கிறவரை தலைவலி தொடரும். டென்ஷன் தலைவலி என சிலருக்கு வரும். ஸ்ட்ரெஸ் காரணமாக ஏற்படுகிற இந்தத் தலைவலி, மதியம் தொடங்கி, மாலை, இரவு நெருங்க, நெருங்க அதிகமாகும். மூளையில் ஏதேனும் பிரச்னை இருப்பதன் அறிகுறியாகவும் தலைவலி உணரப்படலாம்.
வெயிலில், வெளியில் நீண்ட நேரம் அலைந்து, வியர்வை அதிகம் வெளியேறி, தண்ணீரே குடிக்காதவர்களுக்கு உடலில் நீர் வறட்சி ஏற்பட்டிருக்கும். எனவே, இவர்கள் தலைவலி ஏற்படும்போது அதை நீர்வறட்சியின் அறிகுறியாகப் புரிந்துகொள்ளலாம். ஒரு பக்கம் தலைவலியை உணர்பவர்கள், நரம்பியல் மருத்துவரை அணுகி, அது ஒற்றைத் தலைவலியா என்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.
மருத்துவர்கள், செரட்டோனின் இன்ஹிபிட்டர்ஸ் (serotonin inhibitors) என்ற மருந்துகளைப் பரிந்துரைப்பார்கள். அதுதான் முதல் சிகிச்சையாக இருக்கும். அந்த மருந்தில் தலைவலி குணமாவது தெரிந்தாலே, அது மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலி என உறுதியாகும்.
குறிப்பிட்ட இடைவெளிகளில் கண் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். பார்வைக் குறைபாடுகள் இருந்தால் சிகிச்சை எடுப்பது, கண்ணாடி அணிவது போன்றவற்றைப் பின்பற்றினாலே தலைவலி சரியாவதை உணரலாம். காரணம் அறியாத தலைவலியாக இருந்தால், நரம்பியல் மருத்துவரின் பரிந்துரையோடு எம்ஆர்ஐ பரிசோதனை மேற்கொள்ள வேண்டியிருக்கும். என்ன பிரச்னை என்பதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்படும்.
தலைவலி வரும்போது ஒவ்வொரு முறையும் நீங்களாக பாராசிட்டமால் (Paracetamol ) மாத்திரை எடுப்பது மிகவும் தவறு. உங்கள் தலைவலிக்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை மேற்கொள்வதுதான் சரியானது. நீங்களாக சுய மருத்துவம் மேற்கொள்ளக்கூடாது. நீண்டகாலமாக பாராசிட்டமால் எடுப்பது கல்லீரல், கிட்னி உள்ளிட்ட உறுப்புகளுக்கு நல்லதல்ல என்பதால் அதன் உபயோகத்தைத் தவிர்க்க வேண்டியது அவசியம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment