Doctor Vikatan: Pre- diabetes உள்ளவர்கள் சாப்பிடவேண்டிய உணவுகள் பற்றி தெரிவிக்கவும். Pre diabetes நிலையை உணவுப்பழக்கத்தின் மூலம் ரிவர்ஸ் செய்ய முடியுமா?
puviarasu punnaghai, விகடன் இணையத்திலிருந்து
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் ரேச்சல் தீப்தி
ப்ரீ டயாபடிஸ் (Pre diabetes) எனப்படும் சர்க்கரைநோய்க்கு முந்தைய நிலையில், வாழ்வியல் மாற்றங்களும், உடற்பயிற்சிகளும் மிக முக்கியமாகப் பின்பற்றப்பட வேண்டும். வாக்கிங், ஜாகிங், யோகா, ஜிம் பயிற்சிகள் போன்று ஏதேனும் ஒரு பயிற்சியை தினமும் 30 முதல் 45 நிமிடங்கள் செய்ய வேண்டும். தூக்கம் முறையாக இருக்க வேண்டியது முக்கியம். இரவு 10 மணிக்குத் தூங்கச் சென்று காலை 6 மணிக்கு எழுந்திருக்க வேண்டும்.
ப்ரீடயாபடிஸ் நிலையில் உள்ளவர்களுக்கு போதுமான தூக்கம் இல்லாவிட்டால், அது நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும். ப்ரீ டயாபடிஸ் நிலையில் சிலர் அதிக உடல்பருமனுடன் இருப்பதையும் பார்க்கிறோம். சராசரி எடையில் இருப்பவர்கள் அதிகபட்ச ஸ்ட்ரெஸ்ஸுடன் வருவதையும் பார்க்கிறோம். இந்த இரண்டுமே சரியானதல்ல. இவர்கள் உணவுப்பழக்கத்தில் அக்கறை செலுத்த வேண்டும். பாலிஷ் செய்யப்பட்ட அரிசி மற்றும் தானியங்கள் சாப்பிடுவதைத் தவிர்த்து, பாலிஷ் செய்யாத முழுத்தானியங்களைச் சேர்த்துக் கொள்ளலாம்.
சிவப்பரிசி, பழுப்பரிசி, ஸ்டீல் கட் ஓட்ஸ், கீன்வா போன்றவற்றில் நார்ச்சத்தும் பிற சத்துகளும் நிறைந்திருக்கும். இவற்றை உணவுப்பழக்கத்தில் முறைப்படுத்திக் கொண்டால், சப்ளிமென்ட்டுகளின் தேவையின்றியே அனைத்து ஊட்டச்சத்துகளையும் பெறலாம்.
காய்கறிகள் மற்றும் பழங்களின் மூலம் கிடைக்கும் நார்ச்சத்து இவர்களுக்கு மிக முக்கியம். ஒரு நாளைக்கு ஒரு பழம் சாப்பிட்டாலே போதுமானது. மாவுச்சத்தில்லாத காய்கறிகளை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். பிற காய்கறிகளை காலை உணவின்போது 200 கிராம், மதிய உணவின்போது 200 கிராம், இரவு உணவுடன் 200 கிராம் என பிரித்து எடுத்துக்கொள்ள வேண்டும். கீரைகள், புரொக்கோலி, காலிஃபிளவர், வெங்காயம், தக்காளி, குடமிளகாய், வெள்ளரிக்காய் போன்றவை மிகவும் நல்லவை. நீர்ச்சத்து நிறைந்த சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவை சர்க்கரைநோயாளிகள் அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டியவை.
இவர்களுக்குப் புரதச்சத்து மிகமிக முக்கியமானது. அது சைவம் அல்லது அசைவம் என எந்தப் புரதமாகவும் இருக்கலாம். இதையும் மூன்று வேளை உணவோடும் எடுக்க வேண்டும். அசைவத்தில் சிக்கன், மீன், மட்டன், முட்டை போன்றவற்றிலிருந்து புரதம் கிடைக்கும். சைவ உணவுக்காரர்கள் வெள்ளை மற்றும் கறுப்பு கொண்டைக்கடலை, ராஜ்மா, பட்டாணி போன்றவற்றிலிருந்து புரதச்சத்தைப் பெறலாம். இப்படி உணவுப்பழக்கத்தை மாற்றி அமைத்துக்கொண்டால், ரத்தச் சர்க்கரை அளவானது சராசரியாக மாறும். சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள், அரிசிக்கு பதில் முழு தானியங்கள், பாலிஷ் செய்யப்படாத அரிசி எடுத்துக்கொள்ள வேண்டும்.
சோடா, சர்க்கரை சேர்த்த ஜூஸ், வெள்ளை பிரெட், அரிசி மாவு, அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகள், எண்ணெய் உணவுகள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். குறைந்தது 3 மாதங்களுக்கு இப்படிப்பட்ட உணவுப்பழக்கத்தைப் பின்பற்றினாலே, ப்ரீடயாபடிக் நிலையை நிச்சயம் ரிவர்ஸ் செய்ய முடியும். ப்ரீ டயாபடிஸ் என்பது டயாபடிஸ் என்ற நிலைக்கு முன்னேறாமல் தடுக்க முடியும்.
இவற்றுடன் வெந்தயம் ஊறவைத்த தண்ணீர், லவங்கம் சேர்த்துக் கொதிக்கவைத்த தண்ணீர், சீரகம், சோம்பு சேர்த்த தண்ணீர் போன்றவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம். ப்ரீ டயாபடிஸ் நிலையில் உள்ளவர்களுக்கென பிரத்யேக உணவுப்பழக்கம் எதுவும் இல்லை. மேற்குறிப்பிட்டபடி பேலன்ஸ்டு உணவுப்பழக்கத்தைப் பின்பற்றினாலே போதுமானது. கூடவே, ரீஃபைண்டு ஆயில் உபயோகத்தைத் தவிர்த்துவிட்டு, செக்கில் ஆட்டிய எண்ணெய் பயன்படுத்தலாம். நட்ஸ், சீட்ஸ் போன்றவற்றின் மூலம் நல்ல கொழுப்பை அதிகரித்துக்கொள்ள வேண்டும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment