டெல்டா மாவட்டங்களில் நெல் வயலில் நாற்றுகளை பறித்து நடுவதற்கு முன் ஒரு கட்டு நாற்றை எடுத்து சாலையில் வைத்து வணங்குவது தமிழக விவசாயிகள் வழக்கம். சாலை வழியாக செல்பவர்கள் நாற்று கட்டை வணங்கி காசு போட்டுவிட்டு செல்வார்கள். இதே போல் நாற்றாங்காலில் நாற்றை பறித்து கட்டு கட்டும் ஆண்களும், நடவு பணியில் ஈடுபடும் பெண்களும் களைப்பு ஏற்படாமல் இருக்க நாட்டுப்புற பாடல்களை பாடுவார்கள். குறிப்பாக தங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்வுகளை பாடலாக்கி நட்டுப்புறப் பாடலாக பாடுவார்கள். சினிமா மற்றும் நையாண்டி பாடல்களையும் பாடுவார்கள்.
அப்படி பாடும் விவசாய கூலித்தொழிலாளர்களின் குரல் வளம் அற்புதமாக இருக்கும். இவை தமிழக விவசாயிகள் பின்பற்றும் பழக்கவழக்கங்களில் ஒன்று. மேலும் அவர்களது வாழ்க்கையிலும் பின்னி பிணைந்துள்ளது. கடிமான வேலையை கூட ரசித்து செய்யக்கூடியவர்கள் தமிழக விவசாயிகள். இந்நிலையில் பல ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் விவசாயத் தொழிலாளர்கள் பற்றாக்குறை தமிழகத்தில் நிலவி வருகிறது .குறிப்பாக டெல்டாவில்ஒரு புறம் நடவு தொடங்கி அறுவடை வரை அனைத்திற்கும் இயந்திரங்கள் பயன்படுத்துவதும் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் தமிழகத்தில் விவசாயத் தொழிலாளர்கள் பற்றாக்குறை நிலவுவதால் வட மாநிலத்திலிருந்து தொழிலாளர்களை அழைத்து வந்து விவசாய பணிகள் செய்து வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாகவே இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் போர்வெல் தண்ணீரை பயன்படுத்தி குறுவை சாகுபடி செய்கின்ற விவசாயிகள், விவசாய பணிகளை தொடங்கியுள்ளனர். மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவிலிருந்து குழுவாக வந்த தொழிலாளர்கள் வயல்களில் நடவு செய்து வருகின்றனர். மயிலாடுதுறை அருகே உள்ள நல்லத்துக்குடி கிராமத்தில் 12 வட மாநிலத் தொழிலாளர்கள் இந்தியில் பாடல் பாடி நடவு பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் தமிழக விவசாயத் தொழிலாளர்கள் பின்பற்றும் பழக்க வழக்கங்களையும் அவர்கள் பின்பற்றத் தொடங்கியிருப்பதாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். இது குறித்து விவசாயிகள் சிலரிடம் பேசினோம், “மயிலாடுதுறை பகுதியில் போர்வெல் மூலம் குறுவை சாகுபடிக்கான நடவு பணிகள் தொடங்கியுள்ளன. நம்மூரில் விவசாய பணிகளுக்கான ஆட்கள் கிடைப்பதில் பெரும் சிரமம் இருக்கிறது. இதனால் நினைத்த நேரத்திற்கு விவ்சாய பணிகள் செய்ய முடியாமல் நடவு தள்ளிப்போகும் நிலையும் ஏற்படுகிறது.
இதை தவிர்ப்பதற்காக வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களை விவசாய பணிகளுக்கு பயன்படுத்த ஆரம்பித்து விட்டோம். உள்ளூர் விவசாய தொழிலாளர்கள் ஏக்கர் ஒன்றுக்கு களைபறிக் கூலி ரூ.4,000, நடவுக்கூலி ரூ.4,000 என மொத்தம் ரூ.8,000 கேட்கின்றனர். வட மாநிலத் தொழிலாளர்கள் ஒரு ஏக்கருக்கு இரண்டுக்கும் சேர்த்து ரூ.4,500 பெற்றுக் கொள்கின்றனர். கூடுதலாக வேலை தந்தாலும் செய்து தருகின்றனர். குறித்த நேரத்தில் வேலை நடக்கிறது, செலவும் குறைகிறது என்பதால் பலரும் வடமாநிலத் தொழிலாளர்கள் வைத்து விவசாய பணிகளை செய்து வருகின்றனர். நம்மூர் ஆள்களை விவசாய பணிகளை நேர்த்தியாக செய்வதற்கு பழகிவிட்ட அவர்கள் பாடல் பாடிக்கொண்டே நடவுப்பணிகளை செய்கின்றனர்கள்” என தெரிவித்தனர்.
இது குறித்து வட மாநிலத் தொழிலாளர்களில் ஒருவர், “தமிழ் பேசத் தெரிந்த எங்க ஊரை சேர்ந்த ஏஜென்ட் ஒருவர் மூலமாக விவசாய பணிகள் செய்வதற்கு இங்கு வந்துள்ளோம். கடந்த ஆண்டும் இதே போல் வந்தோம். தமிழர்களின் துல்லியமான பணிகளை அறிந்து அதற்கேற்றார் போல் நாங்கள் விவசாய பணிகளை செய்கிறோம். இந்தி சினிமாவில் உள்ள பக்தி மற்றும் விவசாயம் சார்ந்த பாடல்களை பாடியபடி வேலை செய்கிறோம். இதனால் எங்களுக்கு களைப்பு தெரியவில்லை “என்றார்.
Comments
Post a Comment