கர்நாடக மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு கர்நாடக மாநில மருத்துவப் பொருள்கள் கார்ப்பரேஷன் லிமிடெட் (KSMSCL) சில மருந்துகளை அனுப்பியுள்ளது. இந்த மருந்துகளை வாங்கிய நோயாளிகள் அதிர்ந்து போயுள்ளனர். அந்த மருந்துகளில் கால்நடை பராமரிப்புத் துறையின் லோகோ இருந்துள்ளது. இதைப் பயன்படுத்தலாமா என மக்கள் குழம்பியுள்ளனர்.
எங்கு தவறு நடந்தது?!
மருந்துகளை உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனமான புஷ்கர் பார்மா லிமிடெட் நிறுவனத்திடம் (Pushkar Pharma) இருந்து, மூக்கினுள் செலுத்தப்படுகிற மருந்துகள் (Nasal Solutions) மற்றும் கண் சொட்டு மருந்து உட்பட 62.9 லட்சம் மதிப்பிலான ஏழு வெவ்வேறு மருந்துகளை இந்தாண்டு ஜனவரி மாதம் 5-ம் தேதி கார்ப்பரேஷன் வாங்கி இருந்தது. மாநிலத்தில் உள்ள அனைத்து கிடங்குகளுக்கும் இம்மருந்து தயாரிப்புகள் வழங்கப்பட்டன.
மருந்துகளின் லேபிலில் சுகாதாரத் துறையின் லோகோவிற்கு பதிலாகத் தவறாக கால்நடை பராமரிப்புத் துறையின் லோகோ இருந்ததை அதிகாரிகள் பின்னர் கவனித்துள்ளனர்.
இதனை விசாரித்தபோது, `இது வெறும் அச்சுப்பிழை தான். மருந்துகள் மனித பயன்பாட்டிற்குப் பாதுகாப்பானவை' என்று நிறுவனம் கூறியது.
மருந்துகளைப் பரிசோதித்த அதிகாரிகளும் `லோகோ மட்டுமே தவறாக அச்சிடப்பட்டிருக்கிறது; மருந்துகள் அனைத்து தரங்களையும் பூர்த்தி செய்கின்றன' என்று உறுதியளித்தனர்.
இந்நிலையில் மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்பட்ட 70% க்கும் மேற்பட்ட தவறாக லோகோ அச்சிடப்பட்ட மருந்துகளை கேஎஸ்எம்எஸ்சிஎல் திரும்பப் பெற்றுள்ளது.
என்ன தண்டனை?1…
தங்களது பிழையை நிறுவனம் ஒப்புக்கொண்ட போதும், முழு ஏற்றுமதியை நிராகரிப்பதற்குப் பதிலாக, மீதமுள்ள ஸ்டாக்கில் லோகோவை மறைக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். நிறுவனத்திற்கு வெறும் 1% அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய தவறுக்கு இந்தத் தண்டனையா என மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.
இது குறித்து கேஎஸ்எம்எஸ்சிஎல் நிர்வாக இயக்குநர் சித்தானந்த எஸ் வதரே கூறுகையில், `` லேபிளின் துறையை குறிப்பிடும் லோகோவின் சிறிய பகுதியில் பிழை நடந்துள்ளது. மருந்து தயாரிப்பு குறித்த தகவல்கள் அப்படியே இருக்கின்றன.
அதுமட்டுமல்லாமல் இந்த மருந்துகளுக்குக் கடுமையான பற்றாக்குறை இருப்பதாலும், பொது சுகாதார தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தாலும் லோகோவை மறைக்கும் படி கூறியுள்ளோம். எச்சரிக்கையோடு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment