எவரெஸ்ட் நிறுவனத்தின் மசாலா தயாரிப்புகள் சிங்கப்பூர், ஹாங்காங்கில் தடை செய்யப்படவில்லை என எவரெஸ்ட் நிறுவனம் கூறியுள்ளது.
சோதனையும் அதிர்ச்சியும்...
சமீபத்தில் எம்.டி.ஹெச் மற்றும் எவரெஸ்ட் ஆகிய இந்திய நிறுவனங்களின் மசாலா தயாரிப்புகளை ஹாங்காங் உணவுப் பாதுகாப்பு மையம் சோதனை செய்தது. ஹாங்காங்கின் சிம் ஷா சூயிலுள்ள மூன்று கடைகளில் இருந்த இந்நிறுவனங்களின் மசாலா மாதிரிகளை சோதனைக்கு உட்படுத்தியது.
சோதனையில் அதிர்ச்சியளிக்கும் வகையில் எம்.டி.ஹெச் நிறுவனத்தின் தயாரிப்புகளான மெட்ராஸ் கறித்தூள், சாம்பார் மசாலா, குழம்புப் பொடி மற்றும் எவரெஸ்ட் நிறுவனத்தின் மீன் குழம்புப் பொடி ஆகியவற்றில் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய எத்திலீன் ஆக்ஸைடு என்ற பூச்சிக்கொல்லி சேர்க்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இந்தத் தயாரிப்புகளை சமையலில் சேர்த்து உண்ணும் போது உடல் நல பிரச்னைகள் உண்டாவதோடு, புற்றுநோய் வருவதற்கான ஆபத்துகளும் உள்ளன.
அதிரடி நடவடிக்கை…
இதனையடுத்து சம்பந்தப்பட்ட விற்பனையாளர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு, விற்பனைக்கு கடைகளில் வைக்கப்பட்டிருந்த பொருள்களை அகற்ற வலியுறுத்தப்பட்டது. அதோடு இந்த இரண்டு இந்திய பிராண்டுகளின் மசாலா பொருள்களை வாங்க வேண்டாம் எனத் தனது நாட்டு மக்களை ஹாங்காங் எச்சரித்தது.
ஹாங்காங் உணவுப் பாதுகாப்பு மையத்தின் இந்த எச்சரிக்கையை கவனத்தில் கொண்ட சிங்கப்பூர் அரசும் அந்நாட்டில் ஏற்றுமதி செய்த மசாலா பொருள்களை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு அறிவித்தது. இந்நிலையில், இந்தியாவிலும் இம்மசாலா பொருள்களை சோதனை செய்யும்படி பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
எவரெஸ்ட் நிறுவனத்தின் பதிலென்ன?!...
இந்தக் களேபரங்கள் ஒரு புறம் நடந்து கொண்டிருக்க எவரெஸ்ட் ஃபுட் புராடக்ட்ஸ் தன் அனைத்து தயாரிப்புகளும் பாதுகாப்பானவை மற்றும் உயர் தரம் வாய்ந்தவை என்று வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து எவரெஸ்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``எவரெஸ்ட்டின் தயாரிப்புகள் எந்த நாட்டிலும் தடை செய்யப்படவில்லை. 60 எவரெஸ்ட் தயாரிப்புகளில் ஒன்று மட்டுமே ஆய்வு செய்யப்பட்டது. இது ஒரு நடைமுறையேயன்றி, தடை அல்ல.
எங்கள் தயாரிப்புகள் பாதுகாப்பானவை மற்றும் உயர் தரம் வாய்ந்தவை என்பதை நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு உறுதியளிக்கிறோம்.
எங்கள் தயாரிப்புகள் அனைத்தும் கடுமையான தரக் கட்டுப்பாடு சோதனைகளுக்கு உட்படுகின்றன. இந்திய ஸ்பைஸ் போர்டு ஆய்வகங்களில் (Spice Board of India) இருந்து ஒப்புதல் பெற்ற பின்னரே ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்படுகின்றன'' என்று நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
குழந்தைகளுக்கான இருமல் மருந்து, செரிலாக், தற்போது மசாலாக்கள் என தொடர்ந்து இந்திய தயாரிப்புகள் மீதான உலக நாடுகளின் நம்பிக்கை தொடர்ச்சியாக குறைந்து கொண்டே வருகிறது.
உணவே மருந்து என்ற நிலை மாறி, உணவில் விஷத்தை கலப்பதை என்னவென்று சொல்வது?!
Comments
Post a Comment