Doctor Vikatan: சீசன் மாறும்போது, அதாவது குளிர்காலத்திலும் மழைக்காலத்திலும் சளி பிடித்துக்கொள்வது இயல்பானது. ஆனால், எனக்கு கொளுத்தும் கோடையில்கூட அடிக்கடி ஜலதோஷம் பிடித்துக்கொள்கிறது. இதற்கு என்ன காரணம்... இதைத் தவிர்க்க வழி உண்டா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்
ஜலதோஷம் பிடிப்பதற்கான முக்கிய காரணம், வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகள்தான். அதிலும் பெரும்பாலும் வைரஸ் தொற்றுதான் ஜலதோஷத்தை ஏற்படுத்தும். இந்த இரண்டு தொற்றுகள் தவிர்த்து, அரிதாக சிலருக்கு பூஞ்சைத் தொற்று (Fungal infection) காரணமாகவும் சளி பிடிக்கலாம்.
வைரஸ்களில் லட்சக்கணக்கான வகைகள் உண்டு. அவற்றில் கோடைக்காலத்தில் சில வைரஸ்களும், குளிர்காலத்தில் சில வைரஸ்களும் ஆக்டிவ்வாக இருக்கும். திடீரென சளி பிடித்துக்கொள்வது, சைனஸ் பிரச்னை, காதுகளில் ஒருவித அசௌகர்யம், தொண்டைக் கரகரப்பு மற்றும் எரிச்சல், இருமல்... இவையெல்லாம் வைரஸ் தொற்றுகளின் பொதுவான மற்றும் முக்கியமான அறிகுறிகள். கோடையில் வெயில்தான் கொளுத்தி எடுக்கிறதே... பிறகு ஏன் ஜலதோஷம் பிடிக்கிறது என்ற கேள்வி பலருக்கும் உண்டு.
கோடைக்காலத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் வைரஸ்கள்தான் கோடையிலும் சளி, இருமலை ஏற்படுத்துகின்றன. உதாரணத்துக்கு, என்டெரோ வைரஸ்கள் ( Enterovirus) கோடையில் ஆக்டிவ்வாக இருப்பதால், அதிகம் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தும். அதுவே, குளிர் காலத்தில் ரைனோ வைரஸ்கள் (Rhinovirus) ஆக்டிவ்வாக இருப்பதால், அந்த சீசனில் அவை பாதிப்புகளை ஏற்படுத்தும்.
என்டெரோ வைரஸானது சுவாசப்பாதையை பாதித்து சளி, இருமல் போன்ற அறிகுறிகளையும் ஏற்படுத்தலாம். வயிற்றுப்பகுதியை பாதித்து வயிற்றுப்போக்கு, அஜீரணம் போன்றவற்றையும் ஏற்படுத்தலாம். கோடையில் இந்த வைரஸ் தொற்றிலிருந்து தப்பிக்க, சத்தான உணவுகளைச் சாப்பிடுவது, நிறைய தண்ணீர் குடிப்பது, போதுமான அளவு தூங்குவது, உடற்பயிற்சி செய்வது போன்றவற்றின் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். கோடையில் ஏற்படும் இத்தகைய வைரஸ் தொற்றானது அதிகபட்சமாக மூன்று- நான்கு நாள்கள் இருந்துவிட்டு, தானாகவே சரியாகிவிடும்.
நோய் எதிர்ப்பு சக்தியை நன்றாக வைத்துக்கொள்வதுதான் இதிலிருந்து விடுபடும் ஒரே வழி. சளி, இருமல் வந்தாலே உடனே ஆன்டிபயாடிக் மருந்துகளை நீங்களாக வாங்கிப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். ஆன்டிபயாடிக்ஸ் என்பவை பாக்டீரியா தொற்றுகளுக்குப் பயன்படுத்த வேண்டியவை. தேவையில்லாமல் அவற்றை உபயோகிப்பதைத் தவிர்க்கவும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment