Doctor Vikatan: எனக்கு ஸ்ட்ரெஸ் (Stress) அதிகமாகும்போதெல்லாம் எதையாவது சாப்பிடுகிறேன். இதனாலேயே கடந்த சில மாதங்களாக என் உடல் எடை அதிகரித்துவிட்டது. ஸ்ட்ரெஸ்ஸாகும்போது சாப்பிடக்கூடாது என நினைத்தாலும் தவிர்க்க முடியவில்லை. இதற்கு என்ன தீர்வு?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மனநல மருத்துவர் சுபா சார்லஸ்.
நம்மில் பலரும் பசித்துச் சாப்பிடுவதில்லை. பசியைத் தவிர பல்வேறு காரணங்களுக்காகச் சாப்பிடுகிறோம். அந்த வகையில் ஸ்ட்ரெஸ்ஸாக இருக்கும்போது பசியே இல்லாவிட்டாலும் சாப்பிடுவது ஒருவகை. அது மனதை ஆசுவாசப்படுத்துவதாக உணர்கிறோம்.
ஸ்ட்ரெஸ் என்பது மனது சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, உடலும் சம்பந்தப்பட்டது. ஸ்ட்ரெஸ் ஆகும்போது அதீதமாக கற்பனை செய்துகொள்வோம். அது ஒரு கட்டத்தில் நெகட்டிவிட்டியை நோக்கி நகரும். எதிர்காலத்தை பற்றிய பயத்தைக் கிளப்பும். கடந்தகாலத்தை பற்றிய கவலையைத் தரும். ஓவர் கற்பனையால் இதயம் படபடவென துடிக்கும். ஓடுவது, டிரெட் மில்லில் நடப்பது, மாடிப்படிகளில் ஏறி, இறங்குவது என உடற்பயிற்சிகள் செய்யும்போது இதயம் வேகமாகத் துடிக்கும். பிறகு நார்மலாகும். இது ஆரோக்கியமானது.
அதுவே, எதுவுமே செய்யாமல் உட்கார்ந்திருப்போம்... ஆனாலும் எதற்கோ பயந்து ஓடுகிற மாதிரி இதயம் வேகமாகத் துடிக்கும். ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள் அதிகரிக்கும். மூச்சுவிடுவதில் மாற்றம் உண்டாகும். உங்கள் செயல்திறன் குறையும். அப்படிப்பட்ட நேரத்தில் ஓர் உணவைப் பார்க்கும்போது உடனே சாப்பிடத் தோன்றும். அப்படிச் சாப்பிடும்போது தற்காலிகமாக நம்மை நாமே ஸ்ட்ரெஸ்ஸிலிருந்து விடுவித்துக்கொள்கிற மாதிரி உணர்வோம். உணவுக்கும் உளவியலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இப்படி ஸ்ட்ரெஸ்ஸாக இருக்கும்போது எதையாவது சாப்பிடுவது, அதிக சர்க்கரை சேர்த்து காபி, டீ குடிப்பது போன்ற பழக்கமுள்ளவர்களுக்கு எளிதில் எடை கூடும். அடுத்த முறை இப்படிச் செய்யக்கூடாது என நினைத்தாலும் அவர்களையும் அறியாமல் அடுத்த முறை ஸ்ட்ரெஸ்ஸாகும்போதும் அப்படித்தான் சாப்பிடுவார்கள்.
இதைத் தடுக்க, வீட்டில் நொறுக்குத்தீனிகள், ரெடிமேடு உணவுகளை வாங்கி வைப்பதைத் தவிருங்கள். உணவைக் குறைப்பதால் உடல்நலம் கூடும் என்பதை உணருங்கள். ஸ்ட்ரெஸ்ஸாக உணர்ந்து, எதையாவது சாப்பிடத் தோன்றினால், முதல் வேலையாக குளிர்ந்த நீர் குடியுங்கள். சளி பிடிக்குமே, தொண்டைக் கரகரப்பு வருமே என்றெல்லாம் யோசிக்காமல் குடியுங்கள். இரண்டாவது மூளை எனச் சொல்லக்கூடிய வயிற்றை இந்தக் குளிர்ந்த நீர் இதமாக்கும். அது பசியல்ல, ஸ்ட்ரெஸ்ஸால் ஏற்படுகிற வயிற்றுச் சுருக்கம் என்பதை உணர்த்தும்.
எனவே, அடுத்தமுறை ஸ்ட்ரெஸ் ஆகும்போது இந்த விஷயங்களை நினைவில் கொள்ளுங்கள். ஸ்ட்ரெஸ்ஸாக உணரும்போது சாப்பிடுவது என்பது உங்களையே நீங்கள் ஏமாற்றிக்கொள்கிற செயல் என்பதை மனதில் பதிய வையுங்கள். ஸ்ட்ரெஸ்ஸாக இருக்கும்போது சாப்பிடுகிற இந்தப் பழக்கம் எந்த வகையிலும் உங்கள் ஸ்ட்ரெஸ்ஸை போக்கப் போவதில்லை, மாறாக, உங்கள் உடல்நலத்தையே பாதிக்கப்போகிறது என்பதையும் மறந்துவிடாதீர்கள். குளிர்ந்த நீர் அல்லது சாதாரண தண்ணீர் குடியுங்கள். சிறிது அவல் மெல்லலாம். இனிப்புள்ள உணவுகளைச் சாப்பிடாதீர்கள். அந்த உணவுகளுக்கு அடிக் ஷனை ஏற்படுத்தும் தன்மை உண்டு.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment