Doctor Vikatan: பற்கள் துருத்திக் கொண்டிருந்தால் அவற்றைச் சரியாக்க க்ளிப் போடும் வழக்கம் இன்றும் நடைமுறையில் இருக்கிறதா.... க்ளிப் போட்டது தெரியாதபடி லேட்டஸ்ட் சிகிச்சைகள் ஏதும் உள்ளனவா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவர் கீர்த்தனா அஷோக்
துருத்திக்கொண்டிருக்கும் பற்களை சரிசெய்வது பல் மருத்துவப் பிரிவில் ஆர்த்தோடாண்டிக்ஸ் (Orthodontics) என்ற பிரிவின் கீழ் வரும். இது குறித்த விழிப்புணர்வு இன்று இளைஞர்களிடம் அதிகமாகவே இருக்கிறது. சமீபத்திய தரவுகளின்படி, பெண்களைவிடவும், ஆண்கள் இந்தச் சிகிச்சைக்கு முன்வருவது அதிகம் என்பது தெரிய வந்திருக்கிறது. பெரியவர்கள் செய்து கொள்ளும் 'அடல்ட் ஆர்த்தோடாண்டிக்ஸ்' சிகிச்சைகள் சமீபகாலத்தில் ரொம்பவே பிரபலமாகி வருகின்றன. 50 ப்ளஸ் வயதில் உள்ளோர்கூட, பற்களின் இடையில் இடைவெளி இருப்பதாகவும், பற்கள் முன்னே துருத்திக் கொண்டிருப்பதாகவும் அதைச் சரிசெய்யக் கோரி மருத்துவர்களை நாடி வருவது அதிகரித்திருக்கிறது.
ஆரத்தோடாண்டிக்ஸ் சிகிச்சை பொதுவாக பல லெவல்களில் செய்யப்படும். பற்களை நேராக்குவது அல்லது சரியான வரிசைக்குக் கொண்டு வருவது. அடுத்து புன்னகையை சரிசெய்வதோடு, கடிக்கும்போது பற்கள் சரியாகச் சேரும்படியான சிகிச்சை, மூன்றாவதாக, தாடை அளவில் உள்ள பிரச்னைகளைச் சரிசெய்வது, கடைசியாக, ஹேபிட் பிரேக்கிங் தெரபி.... அதாவது சில குழந்தைகள் விரல் சப்புவார்கள். ஒரு வயதுக்குள் நிறுத்த வேண்டிய அந்தப் பழக்கம் சில குழந்தைகளுக்கு ஏழெட்டு வயதாகியும் தொடரும். அதனால் தாடையின் அமைப்பே மாறிப்போகும். விரல் சப்பும் பழக்கத்தை நிறுத்தவும் ஆர்த்தோடாண்டிக்ஸில் சிகிச்சைகள் உள்ளன.
அதேபோல பேசும்போது நாக்கை மேல் பல்லுடன் இடித்துப்பேசுவது, உதடுகளைக் கடித்துக்கொண்டே இருப்பது, இரவு நேரங்களில் பற்களை நறநறவென கடிப்பது போன்ற பல பிரச்னைகள் பலருக்கும் உண்டு. இவை பற்களை மட்டுமன்றி, தாடை, முகத்தசைகள் என பலதையும் பாதிக்கும். இதுபோன்ற பழக்கங்களை நிறுத்தச் செய்ய பிரத்யேக கருவிகள் பொருத்தி சரிசெய்யும் நவீன சிகிச்சைகள், இன்று பல் மருத்துவத்தில் உள்ளன.
பற்களுக்கான சிகிச்சைகளில் லேட்டஸ்ட்டாக நிறைய முன்னேற்றங்கள் வந்துள்ளன. பற்களுக்குப் போடும் க்ளிப் தொடங்கி, அதை ஒட்டவைக்கும் பாண்டிங் ஏஜென்ட் (bonding agent ) வரை நிறைய முன்னேற்றங்கள் வந்துள்ளன. 3டி இமேஜிங் டெக்னிக்குகள் வந்துள்ளன. அதைவைத்து தாடை எலும்புகளில் பிரச்னை உள்ளதா என்றுகூட தெரிந்துகொள்ள இன்று மருத்துவ வசதிகள் உள்ளன. வெறும் எக்ஸ்ரே வை மட்டும் நம்பியிருக்க வேண்டாம். அதேபோல டிஜிட்டல் இம்ப்ரெஷன் முறையில் டூத் பிரஷ் போன்ற ஒன்றில் கேமராவை பொருத்தி, சம்பந்தப்பட்ட நபரின் வாயில் வைத்து உடனடியாக ஸ்கேன் செய்ய முடியும். இதில் பேஷன்ட்டுக்கு எந்த அசௌகர்யமும் இருக்காது.
பற்களுக்குப் பொருத்தும் க்ளிப்பில் மெட்டல், செராமிக், லிங்குவல் பிரேசஸ் (Lingual braces ) எனப்படும் பற்களுக்குப் பின்புறம் பொருத்துவது என பல வகை உண்டு. க்ளிப் போட்டது வெளியே தெரியவேகூடாது என நினைப்பவர்களுக்கு பற்களுக்குப் பின்னால் பொருத்தும் இன்விசிபிள் பிரேசஸ் பொருத்தமாக இருக்கும். ஆனால், இந்த வகையில் சில குறைகள் இருப்பதையும் மறுப்பதற்கில்லை. நாக்கில் குத்துவது, சரியாகச் சுத்தம் செய்ய முடியாதது போன்ற சில பிரச்னைகள் இதில் இருக்கும். லேட்டஸ்ட்டாக க்ளியர் அலைனர்ஸ் (clear aligners) என்பவை ரொம்பவே பிரபலம். டிரான்ஸ்பரன்ட்டாக, பற்களின் வடிவத்திலேயே பொருத்திக்கொள்ளக்கூடியது இது. இதையும் தாண்டி, 'செல்ஃப் லைகேட்டிங் பிரேசஸ்' ( Self-Ligating Braces ) என ஒன்றும் வந்துள்ளது.
பற்களில் க்ளிப் பொருத்திய பிறகு ஒவ்வொரு மாதமும் உங்கள் பல் மருத்துவர் எலாஸ்டிக் பேண்டு போன்ற ஒன்றை மாட்டிவிடுவார். அதுவே செல்ஃப் லைகேட்டிங்கில், ஸ்லைடிங் மெக்கானிசத்தில் அதிலுள்ள ஒயரானது க்ளிப்புடன் தானாகவே போய் இணைந்துகொள்ளும். இதைப் பொருத்திக்கொள்ளும் நிலையில், மாதந்தோறும் மருத்துவரைத் தேடிப்போக வேண்டிய அவசியமிருக்காது.
சிகிச்சையைத் தொடங்கும் முன்பே ஒரு நபருக்கு எந்தப் பல்லை எந்தக் கோணத்தில், எத்தனை மில்லிமீட்டர் நகர்த்தினால் அவர்களது சிரிப்பும் தோற்றமும் எப்படியிருக்கும் என்பதை முன்கூட்டியே தெரிந்துகொள்ளும் சாஃப்ட்வேர்கள் வந்துள்ளன. அக்ஸ்லரேட்டடு ஆர்த்தோடாண்டிக்ஸ் (Accelerated Orthodontics) என்ற நவீன சிகிச்சையும் இன்று பிரபலம். அதாவது ஒரு வருடத்துக்கெல்லாம் என்னால் க்ளிப் போட முடியாது, ஐந்தாறு மாதங்கள்தான் முடியும் என்பவர்களுக்கு பற்களை சீக்கிரமே நகரவைக்க, மைக்ரோ ஆஸ்டியோ பெர்ஃபரேஷன் ( Micro-osteoperforations ) அல்லது ஹைஃப்ரீக்வன்சி வைப்ரேஷன் (High frequency vibration) மாதிரியான நவீன சிகிச்சைகள் உள்ளன. எனவே, உங்களுடைய பிரச்னை என்ன, அதற்கான சரியான சிகிச்சை என்ன என்பதை பல் மருத்துவரை நேரில் அணுகித் தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் பல் அமைப்பு, அதை சரி செய்வதற்கான சாத்தியக்கூறுகளைப் பார்த்து மருத்துவர் உங்களுக்கான சிகிச்சையைப் பரிந்துரைப்பார்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment