Doctor Vikatan: என் வயது 29. சமீபத்தில்தான் திருமணமானது. எனக்கு தாம்பத்திய உறவுக்குப் பிறகும், பீரியட்ஸ் நாள்களிலும் வெஜைனா பகுதியில் ஒருவித மோசமான வாடை வருகிறது. இது பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது. இப்படி வாடை வீச என்ன காரணம்... இதிலிருந்து மீள சிகிச்சைகள் உண்டா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.
நம்முடைய வாய்ப்பகுதியில் உமிழ்நீர் சுரக்கும். அதனால் வாய்ப்பகுதி எப்போதும் ஈரத்தன்மையுடன் இருப்பதைப் போலவே, பெண்களுக்கு வெஜைனா பகுதியும் ஈரத்தன்மையுடன் இருக்கும். அந்தப் பகுதியில் உள்ள சுரப்பிகள் மற்றும் நிணநீர் கணுக்கள் காரணமாக, அங்கே அத்தகைய ஈரப்பதம் இருந்துகொண்டே இருக்கும்.
இப்படிச் சுரக்கும் எல்லா கசிவுகளுமே அசாதாரணமானவையல்ல. உடலின் கீழ்ப்புறத்தில் இருப்பதாலும், வெளிச்சம் படாமல் இருப்பதாலும் அங்கே பாக்டீரியாக்களும் இருக்கும். வெஜைனாவுக்கென்று இப்படித்தான் பிரத்யேக வாடை இருக்கும் என்று நம்மால் சொல்ல முடியாது. பெரும்பாலான நேரங்களில் வெஜைனாவின் வாடையை நாம் உணர்வதில்லை. காலையில் எழுந்து பல் துலக்காதபோதுதான் வாய் துர்நாற்றம் என்பதை நாம் உணர்வோம். அதேபோல, வெஜைனா பகுதியில் ஏதேனும் தொற்றோ, அசாதாரணமான கசிவோ ஏற்படும்போதுதான் அந்த வாடையை உங்களால் உணர முடியும்.
அப்படி வித்தியாசமான வாடையை உணரும்போது, அதை நீக்க சென்ட், வெஜைனல் வாஷ் போன்றவற்றைப் பயன்படுத்தும் பழக்கம் சமீப காலமாக அதிகரித்திருக்கிறது. உங்கள் மருத்துவர் உங்களைப் பரிசோதித்துவிட்டு இதுபோன்ற தயாரிப்புகளை உபயோகிக்கச் சொல்லியிருந்தால் மட்டும்தான் உபயோகிக்க வேண்டும். வெஜைனா பகுதியில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் இருக்கும். இதுபோன்ற பொருள்களைப் பயன்படுத்துவதால், நல்ல பாக்டீரியாக்கள் அழிந்து, வெஜைனா பகுதியில் ஈஸ்ட் அல்லது பூஞ்சைத் தொற்று எளிதில் பரவ ஏதுவாகும்.
மீன் போன்ற வாடை, அழுகிய இறைச்சி வாடை போன்று வந்தால் அது 'பாக்டீரியல் வெஜைனோசிஸ்' (Bacterial vaginosis) என்ற இன்ஃபெக்ஷனின் அறிகுறிதான். இந்தத் தொற்றுடன் ஒருவித வெள்ளைநிற கசிவும் இருக்கும். அடுத்தநிலையில் அது மஞ்சள் அல்லது பச்சை நிறக் கசிவாகவோ, நுரையுடனோ மாறும். இது அசாதாரணமானது. இதற்கு சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம். அடுத்து டாம்பூன் உபயோகிக்கும் பெண்கள், அதை அகற்ற மறந்துவிட்ட நிலையிலும் வெஜைனாவிலிருந்து மோசமான வாடை வரலாம். சாதாரண நாப்கினையை பல மணி நேரம் மாற்றாத நிலையில் வாடையை எழுப்பும்.
எனவே, அந்தரங்க உறுப்பு சுகாதாரம் என்பது மிகவும் முக்கியம். பீரியட்ஸ் நாள்களில் ஒருவித மெட்டல் வாடை வீசக் காரணம், ரத்தத்தில் உள்ள இரும்புச்சத்து. அதேபோல தாம்பத்திய உறவுக்குப் பிறகும் வாடை வரலாம். இவை குறித்து பயப்பட வேண்டியதில்லை. வெஜைனாவை வெதுவெதுப்பான நீரால் கழுவினாலே போதுமானது. வாசனை திரவங்கள், வாசனையான சோப் போன்றவற்றைப் பயன்படுத்தக் கூடாது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment