Doctor Vikatan: வருடத்தில் பெரும்பாலான நாள்களில் சன் ஸ்கிரீன், ஃபேஸ்வாஷ், மாய்ஸ்ச்சரைசர் எல்லாம் உபயோகிக்கிறோம். சம்மர் சீசனில் அவற்றையே தொடர்ந்து உபயோகிக்கலாமா.... வெயிலுக்கேற்றபடி வேறு மாற்ற வேண்டுமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா
கோடையின் தாக்கத்திலிருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாக்க, வெறும் சன் ஸ்கிரீனை மட்டும் மாற்றினால் போதாது. கிளென்சரில் இருந்தே மாற்றங்களைச் செய்ய வேண்டும். பருக்கள் வரும் சருமம் என்றால் சாலிசிலிக் ஆசிட் உள்ள கிளென்சர் பயன்படுத்த வேண்டும். ரொம்பவும் சென்சிட்டிவ்வான சருமம் கொண்டவர்கள், லாக்டிக் ஆசிட் உள்ள கிளென்சர் பயன்படுத்தலாம்.
அடுத்து மாய்ச்ச்சரைஸர்... இது ஜெல் வடிவிலோ, நீர் வடிவிலோ, லோஷன் வடிவிலோ இருக்கும்படி தேர்ந்தெடுங்கள். முன்பெல்லாம் சன் ஸ்கிரீன் பயன்படுத்தும்போது உடனடியாக ஒருவித சூடான உணர்வு ஏற்படும். அதைத் தடவியதும் வியர்த்துக் கொட்டும். அப்படியில்லாமல் இப்போது கூலிங் தன்மையைக் கொடுக்கும் சன் ஸ்கிரீன்கள் கிடைக்கின்றன. உங்கள் சருமத்துக்குப் பொருத்தமானதை மருத்துவரிடம் கேட்டு வாங்கிப் பயன்படுத்துங்கள்.
அதற்கு மேல் பவுடர் போடலாம். டால்கம் பவுடர் என்பது கூடுதல் சன் ஸ்கிரீன் போல செயல்படும். எண்ணெய் வழியாமலும் தடுக்கும்.
இரவில் முகத்தை நன்கு கழுவிவிட்டு, வாரத்தில் ஒரு நாள் எக்ஸ்ஃபோலியேட் (exfoliate) செய்யலாம். நிறைய பேருக்கு வெயில் காலத்தில் நெற்றி, மூக்கு உள்ளிட்ட பல பகுதிகளிலும் பொரிப்பொரியாக வரும். அளவுக்கதிக சீபம் உற்பத்திதான் இதற்கு காரணம். முதுகிலும் மார்புப்பகுதியிலும் பொடுகு காணப்படும். எனவே, ஒருநாள்விட்டு ஒருநாள் தலைக்குக் குளிக்க வேண்டும். ஜிம் போகிறவர்கள் தினமுமே தலைக்குக் குளிக்க வேண்டும்.
முகத்துக்கு மட்டும் சன் ஸ்கிரீன் உபயோகிப்பது போதாது. உடல், கை, கால்கள் என வெயில்படும் எல்லா இடங்களுக்கும் சன் ஸ்கிரீன் அவசியம். அதற்காக முகத்துக்கு உபயோகிக்கும் அதே சன் ஸ்கிரீனை உடலுக்கும் பயன்படுத்துவது கட்டுப்படியாகாது. உடலுக்கான சன் ஸ்கிரீன் அதிலும் வாட்டர் ரெசிஸ்டன்ட்டாக பார்த்து வாங்குங்கள். குடை, ஸ்கார்ஃப் உபயோகிக்கத் தயங்காதீர்கள். தரமான, காட்டன் உடைகளை மட்டும் அணியுங்கள். சிந்தெடிக் உடைகளை அணிவதால், அக்குள் பகுதிகளில் கட்டிகள்கூட வரலாம்.
புறப்பூச்சுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை உணவுக்கும் கொடுங்கள். மஞ்சள், பச்சை, ஆரஞ்சு, சிவப்பு என பல வண்ணக் காய்கறிகள், பழங்களைச் சாப்பிடுங்கள். அவற்றிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் சருமத்தைப் பாதுகாக்கும். கோடையில் மஞ்சள் தடவுவது, மஞ்சள் கலந்த அழகு சாதனங்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். மஞ்சள் மிகச் சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட் என்பதில் சந்தேகமில்லை.
குடிக்கும் பாலில் தொடங்கி, சமைக்கும் உணவுகள் வரை மஞ்சள் சேர்த்துக்கொள்ளுங்கள். ஆனால், வெளியே சருமத்தில் பூசுவதில் கவனம் தேவை. மஞ்சள் சூரிய ஒளியை ஈர்க்கும் தன்மை கொண்டது. அதைத் தடவுவதால், வேண்டாம் என நினைத்த சூரியஒளியை நாமே தேடிப் போவதுபோலாகி விடும்.
எனவே, மற்ற நாள்களில் உபயோகிக்கும் அழகு சாதனங்களுக்கு சற்று ஓய்வு கொடுத்துவிட்டு, சம்மர் சீசனுக்கேற்ற பிரத்யேக ஃபேஸ்வாஷ், சன்ஸ்கிரீன் என எல்லாவற்றையும் மாற்றி உபயோகிப்பது சருமத்தைக் காக்கும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment