Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்.
ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம்.
ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம்.
போதுமான அளவு தூக்கம் இருப்பதை உறுதிபடுத்தச் சொல்லுங்கள். தூக்கமின்மைக்கும் இதயநலன் பாதிக்கப்படுவதற்கும் நெருங்கிய தொடர்புண்டு. அவருக்கு சிகரெட், மது பழக்கங்கள் இருந்தால் உடனடியாக நிறுத்தச் சொல்லுங்கள். ஹார்ட் அட்டாக் பாதிப்புக்குப் பிறகு உங்கள் நண்பருக்கு மருத்துவர் சில மருந்துகளை நிச்சயம் பரிந்துரைத்திருப்பார். அவற்றை எந்தக் காரணம் கொண்டும் தவறாமல் எடுத்துக்கொள்ளச் சொல்லுங்கள். ஒருவேளை அந்த மருந்துகளால் ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்படுவதாக உணர்ந்தால் அவரை தாமாக மருந்துகளை நிறுத்தச் சொல்லாதீர்கள். மருத்துவரிடம் ஆலோசனை பெறச் சொல்லுங்கள்.
மருந்து, மாத்திரைகள் தவிர்த்து, மாரடைப்பின் தீவிரத்தைப் பொறுத்து, சிலருக்கு மருத்துவர்கள் ஸ்டென்ட் பொருத்துவது போன்ற சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படலாம். இதயத்தின் ரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளின் எண்ணிக்கை, அவற்றின் சதவிகிதம் ஆகியவற்றைப் பொறுத்து பிற சிகிச்சைகளை மருத்துவர் பரிந்துரைப்பார். அவை குறித்தும் மருத்துவரிடம் பேசி தெளிவு பெறச் சொல்லுங்கள்.
உடல்நலம் நன்றாக இருக்கிறதா என அவ்வப்போது பரிசோதித்துக் கொள்ளாமல், ஏதேனும் பிரச்னை வந்தாலோ, அது தீவிரமானாலோ மட்டுமே மருத்துவரைப் பார்க்கும் மனநிலை பலருக்கும் உண்டு. ஹார்ட் அட்டாக் (heart attack) வந்தவர்கள் அப்படி இருக்கக்கூடாது. அடிக்கடி மருத்துவரை அணுகி, இதயநலன் எப்படி இருக்கிறது என்பதைப் பரிசோதனைகளின் மூலம் தெரிந்துகொள்வது அவசியம். இதன் மூலம், இன்னொரு முறை ஹார்ட் அட்டாக் வருவதைத் தவிர்க்கவும் முடியும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment