தமிழ் திரைப்பட துணை நடிகர் விஜய் விஷ்வா, தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் நீலகிரிக்கு சுற்றுலா சென்றிருக்கிறார். குன்னூர் நகரில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் நேற்று மதியம் உணவருந்த சென்றிருக்கிறார். உணவகத்தில் அவர்களுக்கு வழங்கப்பட்ட தக்காளி சாஸில் புழுக்கள் உயிருடன் நெளிவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார். மேலும், அந்த சாஸ் பாட்டிலை திறந்து பார்த்தபோது உள்ளே புழுக்கள் இருந்ததைக் கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து சம்பந்தப்பட்ட உணவக நிர்வாகத்திடம் உடனடியாக முறையிட்ட நிலையில், அலட்சியமாக பதில் அளித்ததாகக் கூறப்படுகிறது.
அதையடுத்து, நீலகிரி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு புகார் அளித்திருக்கிறார். அரசு தரப்பிலும் முறையான நடவடிக்கைகள் இல்லையென்பதால் புழுக்கள் நிறைந்த சாஸ் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக தற்போது கடுமையான விவாதம் எழத்தொடங்கியுள்ள நிலையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து தெரிவித்துள்ள துணை நடிகர் விஜய் விஷ்வா," விலை உயர்ந்த உணவகம் என்ற பெயரில் அதிக கட்டணம் வசூலித்தும் இப்படி அலட்சியமாக இருக்கிறார்கள். புகார் தெரிவித்தும் பயனில்லை. வாடிக்கையாளர்கள் தான் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் " என தெரிவித்துள்ளார்.
இது குறித்து தெரிவித்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் , "குன்னூரில் இயங்கி வரும் மெக் ஐவர் என்ற தனியார் உணவகத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. கடையில் வழங்கப்பட்ட தக்காளி சாஸில் புழுக்கள் இருந்தது குறித்து வாடிக்கையாளர் தெரிவித்த பின்னரே தெரியவந்ததாக கூறியிருக்கிறார்கள். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். அலட்சியமாக செயல்பட்ட உணவகம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.
Comments
Post a Comment