அழகான, அறிவான, திறமையான பெண் வேண்டும் என்று சொல்பவர்கள் ஒரு காலகட்டத்தில் பெண் கிடைத்தால் போதும் என்ற நிலைக்கு வந்துவிடுகிறார்கள். இன்றைய காலகட்டத்தில் திருமண வரன் கிடைப்பதே பெரிய விஷயம் தான்.
கூர்ந்து கவனித்தால் சில வருடங்களுக்கு முன்பு திருமணத்திற்கு பெண் தேடுகையில், `படித்த பெண்கள் வேண்டாம். எழுத்துக் கூட்டிப் படிக்கும் அளவுக்கு கல்வியறிவுள்ள கிராமத்துப் பெண்கள் போதும்' என்று இருந்தனர். இந்த நிலை `படித்திருக்கலாம்; ஆனால், வேலைக்குச் செல்லும் பெண்கள் வேண்டாம்' என்ற கட்டத்திற்கு மாறியது.
அதுவே `வேலைக்குப் போகலாம், நர்ஸ், டீச்சர் என்றால் ஓகே, மற்ற வேலை பார்க்கும் பெண்கள் வேண்டாம்' என அடுத்த கட்டத்திற்கு நிலை நகர்ந்தது. இப்போது பொருளாதார ரீதியாக சப்போர்ட் செய்து வேலைக்குச் செல்லும் பெண்களைப் பலர் தேடுகின்றனர்.
பொதுவாகவே பெண்களின் கனவுகளையும் ஆசைகளையும் மட்டம் தட்டி சோஷியல் மீடியாவில் பதிவிடுவது அதிக லைக்குகளை அள்ளித் தரும் என்ற போக்கு இருக்கிறது. அப்படி சூரத்தைச் சேர்ந்த ஒருவர் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவிட்டிருந்தார்.
அதில், ``அதிகம் படித்த வேலை செய்யும் பெண்களைத் திருமணம் செய்வது, உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் மிக மோசமான முடிவுகளில் ஒன்றாக இருக்கும்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.
தனது தனிப்பட்ட வாழ்வின் கருத்துகளை ஒட்டுமொத்த சமூகத்தின் உரிமையையும் இழிவுபடுத்தும் வகையில் பதிவிடுவதை என்னவென்று சொல்வது... இவரின் பதிவு நெட்டிசன்கள் மத்தியில் கவனம் பெற்றது.
`நீங்கள் மனைவியைத் தேடவில்லை, அடிமையைத் தேடுகிறீர்கள்'… `இது உண்மையல்ல, இது நபருக்கு நபர் மாறுபடும். என் மனைவி நன்றாகப் படித்தவள், சுதந்திரமானவள், ஆனால், நாங்கள் ஒருவரையொருவர் சமமாக மதிக்கிறோம். ஆணோ பெண்ணோ திருமணம் செய்வதற்கு முன்பு ஒரு நபரின் குணம் மற்றும் மனதைப் பார்க்க வேண்டும்' என கமென்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
Comments
Post a Comment