நாள் ஒன்றுக்கு ஒரு பேரீச்சம்பழம்தான் உணவு; பூட்டிய வீட்டில் இறந்துகிடந்த சகோதரர்கள்! - பின்னணி என்ன?
கோவாவில் பூட்டிய வீட்டில் இரண்டு பட்டதாரி சகோதரர்கள் இறந்துகிடந்த சம்பவம் தொடர்பாக போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் வெளிவந்திருக்கும் தகவல், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவத்தில், உயிரிழந்த சகோதரர்களின் பெயர்கள் முகமது ஜுபர் கான் (29) மற்றும் ஆஃபான் கான் (27). இவர்களின் தாய் ருக்ஸானா கான் மற்றும் தந்தை நசீர் கான். தந்தை கர்நாடகாவில் துணிக்கடை ஒன்றை நடத்திவருகிறார். இதில், மூத்த சகோதரர் இன்ஜினியர். இவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. இளைய சகோதரர் பி.காம் பட்டதாரி. இருவரும் சமீபத்தில் தங்களின் பெற்றோருடன் மார்கோ நகரத்துக்கு குடியேறினார்.
மூத்த சகோதரரின் மனைவி தன் குழந்தைகளுடன், இவர்களுடன் மார்கோவுக்கு குடியேறவில்லை. மேலும், சகோதரர்கள் இருவரும் மார்கோவுக்கு குடியேறிய பிறகு வேலை கிடைக்காமல் வீட்டிலேயே இருந்தனர். இதற்கிடையில், தன்னுடைய மனைவி மற்றும் மகன்களின் வித்தியாசமான உணவுமுறை காரணமாக நசீர் கான், அதே மார்கோ நகரத்தில் வேறொரு பகுதிக்கு தனியாகக் குடிபெயர்ந்தார். அதாவது, தாய் மற்றும் மகன்கள் என மூவரும் ஒரு நாளைக்கு ஒரேயொரு பேரீச்சம்பழத்தை மட்டுமே உணவாக எடுத்துக்கொண்டிருக்கின்றனர். இதனால் தனியாகச் சென்ற நசீர் கான் தன் மனைவி, மகன்களை அவ்வப்போது காண வந்துகொண்டிருந்தார். இருப்பினும், வீட்டுக்குள் அனுமதிக்கப்படவில்லை.
இந்த நிலையில், கடந்த புதனன்று வீட்டினுள் சகோதரர்கள் இறந்து கிடப்பதாகத் தகவலறிந்த போலீஸார், உடனடியாக வீட்டுக்கு வந்து கதவை உடைத்து இறந்தவர்களின் உடலை மீட்டனர். அதோடு, மயக்க நிலையில் கிடந்த தாயை மீட்ட போலீஸ் அதிகாரிகள் அவரை உள்ளூர் மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தாய், மன நலத்தைப் பரிசோதிக்க கோவா மருத்துவக் கல்லூரிக்கு பரிந்துரைக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.
பின்னர், சகோதரர்களின் இறப்புக்கான காரணம் குறித்து பேசிய தெற்கு கோவா காவல்துறை கண்காணிப்பாளர் சுனிதா சாவந்த், `பிரேத பரிசோதனையில் ஊட்டச்சத்துக் குறைபாடுதான் கரணம் என்று தெரியவந்திருக்கிறது' என்று கூறினார். இருப்பினும், தாயார் சிகிச்சையில் இருப்பதால் அவரின் வாக்குமூலத்துக்காக போலீஸார் காத்திருக்கின்றனர்.
Comments
Post a Comment