`புண்பட்ட மனதைப் புகவிட்டு ஆற்று’ எனக் கேள்விப்பட்டிருப்போம். இங்கு புக என்பதைப் பலரும் புகையிலை எனத் தவறாக எடுத்துக் கொள்கின்றனர். உண்மையில் மனம் புண்பட்டிருக்கையில், நமக்குப் பிடித்த வேறொரு செயலில் மனதினை புகவிட்டு ஆற்றிக் கொள்ள வேண்டும் என்பதே அதன் அர்த்தம்.
புகையிலை புற்றுநோயை ஏற்படுத்தும், உயிரைக் கொல்லும் என விளம்பரப்படுத்தும் சிகரெட் அட்டை படங்கள் பிரயோஜனம் இல்லாமலே போய்விடுகின்றன. இன்றைய காலகட்டத்தில் பெண்களும் புகை பிடிக்கின்றனர்.
ஆனால், புகைப்பழக்கத்தைக் கைவிடுகையில் ஆண்களை விட பெண்கள் சிரமப்படுவதாகவும், கடினமாக உணர்வதாகவும் கென்டக்கி பல்கலைக்கழகம் (University of Kentucky) நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது.
சாலி பாஸ் என்பவரின் தலைமையில் ஆராய்ச்சியாளர்கள் குழு இந்த ஆய்வை மேற்கொண்டது. அதில் பெண்களின் பாலின ஹார்மோனான ஈஸ்ட்ரோஜென், நிகோடினுக்கு அடிமையாவதில் முக்கிய பங்கு வகிப்பதாக ஆய்வு கூறுகிறது.
அதாவது, ஆண்களை விட பெண்கள் புகையிலையிலுள்ள நிகோட்டினுக்கு (Nicotine) வேகமாக அடிமையாகிவிடுகின்றனர். மூளையிலுள்ள ஆல்ஃபாக்டோமெடின் என்ற புரதத்தின் உற்பத்தியை நிகோடின் குறைக்கிறது. ஈஸ்ட்ரோஜென் ஆல்ஃபாக்டோமெடின் உற்பத்தியை அதிகரிக்கிறது. ஆல்ஃபாக்டோமெடின், ஈஸ்ட்ரோஜென், நிகோடின் இந்த மூன்று கூறுகளுக்கும் இடையே தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது. இதனால் பெண்கள் நிகோட்டினுக்கு அடிமையாகின்றனர். அதனால் புகைபிடிக்கும் பழக்கத்தைக் கைவிடுவது அவர்களுக்குக் கடினமாகவுள்ளது.
இது குறித்து சாலி பாஸ் கூறுகையில், ``ஆல்ஃபாக்டோமெடின்கள் மூலம் ஈஸ்ட்ரோஜென், நிகோடின் நுகர்வை இயக்குகிறது என்பதை நாம் உறுதிப்படுத்த முடிந்தால், அந்த விளைவைத் தடுக்கக்கூடிய மருந்துகளை நாம் வடிவமைக்க முடியும். இந்த மருந்துகள் பெண்கள் நிகோட்டின் பழக்கத்திலிருந்து வெளிவருவதை எளிதாக்கும். ஆண்களை விட பெண்களுக்கு நிகோடினுக்கு அடிமையாவதில் அதிக நாட்டம் இருப்பதாகவும், அதை விட்டுவிடுவதில் சிரமம் இருப்பதாகவும் தெரிகிறது. எங்களது வேலை நிகோட்டின் பயன்பாடு பெண்களை எவ்வாறு பாதிக்கிறது, அடிமையாக்குகிறது என்பதை அறிந்து, நிகோட்டின் அடிக்ஷனுக்கு சிகிச்சை அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது’’ என்றார்.
Comments
Post a Comment