Doctor Vikatan: என் வயது 58. எனக்கு ஹெர்னியா பாதித்திருப்பதாக மருத்துவர் சொல்கிறார். ஹெர்னியா என்றால் என்ன....அதற்கு ஆபரேஷன் செய்வதுதான் தீர்வா?
-Abdul Rasheed, விகடன் இணையத்திலிருந்து
பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி
ஏதேனும் ஓர் உறுப்பு, ஒரு தசை அல்லது திசுவில் உள்ள திறந்த பகுதி வழியே, பலவீனம் காரணமாக வெளியே தள்ளப்பட்டு வருவதையே 'ஹெர்னியா' (Hernia) என்கிறோம். உதாரணத்துக்கு, குடல் பகுதியானது நம் வயிற்றுப்பகுதியின் சுவர்களின் பலவீனம் காரணமாக வெளியே தள்ளப்பட்டு வரலாம். அதை 'ஹெர்னியா' என்று சொல்வோம்.
ஹெர்னியா பாதிப்பானது நம் வயிற்றுக்கும் நெஞ்சுப் பகுதிக்கும் இடையில் வரும். சில நேரங்களில் இடுப்பும் தொடையும் சேருமிடத்திலும் வரலாம். பெரும்பாலும் இந்த பாதிப்பானது ஆரம்பநிலையிலேயே எந்தப் பிரச்னையையும் தரப்போவதில்லை. போகப்போக சில பிரச்னைகள் வரலாம். அதற்காக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் ஏற்படலாம்.
ஹெர்னியா பாதிப்பில் பல வகைகள் உள்ளன. நீங்கள் எந்த வகை குறித்துக் கேட்டிருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. ஆனால், பொதுவாக ஹெர்னியா என்றாலே ஒரு வீக்கம் இருக்கும். உதாரணத்துக்கு, இன்குயினல் ஹெர்னியா (Inguinal hernia) என்ற வகையில் இடுப்பெலும்பும் தொடைப்பகுதியும் இணையும் இடத்தில் வீக்கம் வரலாம். இந்த வீக்கமானது படுக்கும்போது காணாமல் போய்விடும். எழுந்திருக்கும்போது, உடலை வளைக்கும்போது, இருமும்போது அந்த இடத்தில் வலி மற்றும் அசௌகர்யத்தை ஏற்படுத்தலாம்.
'ஹயட்டல் ஹெர்னியா' ( Hiatal hernia ) என்ற வகையில் மார்புக்கும் வயிற்றுக்கும் இடையிலான உதரவிதானம் எனப்படும் பகுதி வழியே வயிறானது நுழைந்து, மார்புப்பகுதியை ஊடுருவும். உதரவிதான தசையானது நம் சுவாசத்திற்கு மிகவும் முக்கியமானது. வயிறு மற்றும் மார்புப்பகுதியைப் பிரிப்பதும் இந்த உதரவிதானம்தான். இந்த வகை ஹெர்னியா குழந்தைகளை பிறவியிலேயே பாதிக்கலாம். மற்றபடி 50 வயதுக்கு மேலானவர்களை அதிகம் பாதிக்கும் பிரச்னை இது.
மிகவும் பரவலாக பாதிக்கும் ஹெர்னியா வகை 'அம்பிலிகல் ஹெர்னியா' ( Umbilical hernia). இது பெரும்பாலும் குழந்தைகளை பாதிக்கும். தொப்புளுக்கு அருகில் உள்ள வயிற்றுச்சுவரின் தசைகள் பலவீனமாக இருந்து, அதன் விளைவாக சிறுகுடல் வெளித்தள்ளப்படுவதைக் குறிப்பது இது. வயிற்றுச்சுவர் தசைகள் வலிமையடையும்போது இந்தப் பிரச்னை தானாகவே சரியாக வாய்ப்புகள் உண்டு. சில நேரங்களில் பெரியவர்களையும் இது பாதிக்கலாம். உடல்பருமன், கர்ப்பகாலம், வயிற்றில் நீர்கோப்பது போன்றவற்றால் வயிற்றுச்சுவர் தசைகள் பலவீனமடைந்து இந்தப் பிரச்னை பாதிக்கலாம்.
இன்னொரு வகை, 'இன்சிஷனல் ஹெர்னியா' (Incisional hernia). சிசேரியன் மாதிரியான அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தால், அந்த இடத்தின் தழும்பு மற்றும் பலவீனம் காரணமாக வரும் பாதிப்பு இது. தீவிரமான உடற்பயிற்சி அல்லது அளவுக்கதிகமாக எடை தூக்குவது போன்றவற்றாலும் ஹெர்னியா பாதிக்கலாம். சிலருக்கு எப்போதும் இருமல் இருப்பதாலும் வரலாம். ஒன்றுக்கு மேலான கர்ப்பத்தைச் சுமப்பதாலும் வரலாம்.
ஹெர்னியா பாதிப்புக்கு அறுவை சிகிச்சைதான் தீர்வு. ஆனால், அதன் அளவு, அதனால் ஏற்படும் வலி உள்ளிட்ட அசௌகர்யங்கள் ஆகியவற்றைப் பொறுத்தே அறுவை சிகிச்சை தேவையா என முடிவு செய்யப்படும். சில நேரங்களில் இன்னும் சில காலம் பொறுத்துக்கொள்ளலாம், பிரச்னை தீவிரமானால் பார்த்துக்கொள்ளலாம் என்ற நிலையில் அறுவை சிகிச்சையைத் தள்ளிப்போடலாம்.
அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியம். ஸ்கேன் மூலம் இதை உறுதிசெய்யலாம். கவனிக்காமல் விட்டாலும் இது சில நேரங்களில் பிரச்னையை ஏற்படுத்தலாம். அது உயிருக்கே ஆபத்தாகவும் முடியலாம் என்பதால் இதை அணுகுவதில் அலட்சியமும் வேண்டாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment