Doctor Vikatan: நான் தினமும் இருவேளை பல் துலக்குகிறேன். ஆனாலும் எனக்கு எப்போதும் வாய் துர்நாற்றம் இருக்கிறது. சில நேரம் அது மற்றவர்களை முகம் சுளிக்கவைப்பதையும் பார்க்கிறேன். இந்தப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு இருக்கிறதா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன்
காலையில் எழுந்ததும் எல்லோருமே வாய் துர்நாற்றத்தை உணர்வார்கள். இதற்கு 'ஹாலிட்டோசிஸ் ' (halitosis) என்று பெயர். நம் வாய்க்குள் பாக்டீரியா கிருமிகள் இருக்கும். அந்தக் கிருமிகள், வாயில் எஞ்சியிருக்கும் உணவுத் துகள்களை, சல்பர் உருவாக்கும்படி மாற்றிவிடும். இது வாய் துர்நாற்றத்தை உருவாக்கும். பல் துலக்கியதும், இந்த நாற்றம் தானாகச் சரியாகிவிடும்.
சிலசமயங்களில், பூண்டு, வெங்காயம் சேர்த்த உணவுகளைச் சாப்பிடுவதாலும் வாய் துர்நாற்றம் வரும். தவிர, ஆல்கஹால் மற்றும் சிகரெட் பழக்கங்களாலும் வாய் துர்நாற்றம் ஏற்படலாம்.
இப்படி எந்தக் காரணமும் இல்லாமலும் சிலருக்கு வாய் துர்நாற்றம் வரும். மேற்குறிப்பிட்ட காரணங்களால் வாய் துர்நாற்றம் இல்லை என்று தெரிந்தால், சரியாகப் பல் துலக்குகிறீர்களா என்று கவனியுங்கள். தினமும் இரு வேளைகள் பல் துலக்க வேண்டும். பற்களில் சொத்தை இருக்கிறதா என்பதையும் பாருங்கள்.
அடுத்ததாக, போதுமான அளவு தண்ணீர் குடிக்கிறீர்களா என்று பாருங்கள். உடலில் நீர்வறட்சி ஏற்பட்டாலும், அது வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தலாம்.
விரதம் இருப்பவர்களுக்கு வாய் துர்நாற்றம் இருக்கும். வயிற்றில் புண் இருந்தாலும் வாய் துர்நாற்றம் வரலாம். உடலில் நீர் வறட்சி ஏற்படாமல் பார்த்துக் கொள்வது, வாய் சுகாதாரத்தைப் பேணுவது, சரியான உணவுப்பழக்கத்தைப் பின்பற்றுவது போன்றவற்றின் மூலம் இந்தப் பிரச்னையில் இருந்து விலகி இருக்கலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment