Doctor Vikatan: இஸ்லாமியர்களின் உணவுகளில் பிரதானமாக இடம்பெறும் கடல்பாசியை எல்லோரும் சாப்பிடலாமா.... அது உடல் எடையைக் குறைக்குமா... நோன்பிருக்கும்போது அதைச் சாப்பிடுவதால் என்ன பலன்?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர்.
சைனா கிராஸ் எனப்படும் சீனப்புல் வகையைச் சேர்ந்ததுதான் கடல்பாசி. இதை எல்லோருமே சாப்பிடலாம். வயிற்றுப் புண்களை ஆற்றும் தன்மை கொண்டது. ரமலான் நோன்பிருப்பவர்களின் உணவுப் பட்டியலில் கடல்பாசி கட்டாயம் இடம்பெறும். கடல்பாசி இல்லாத நாளே இல்லை என்ற அளவுக்கு அவர்கள் தினமுமே இதைச் சேர்த்துக் கொள்வார்கள்.
நாள் முழுவதும் நோன்பிருந்துவிட்டு, உணவு சாப்பிடும்போது, வயிறு புண்ணாகாமல் தடுக்க, கடல்பாசி சேர்த்துக்கொள்வார்கள். இதில் கலோரி பெரியதாக இல்லை என்பதால் இவ்வளவுதான் சாப்பிட வேண்டும் என எந்த வரையறையும் இல்லை.
கடல்பாசி என்பது நம் குடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. கொஞ்சமாகச் சாப்பிட்டாலும் வயிறு நிறைந்த உணர்வைத் தரும். சிறுகுடலைத் தூண்டிவிட்டு, செரிமான இயக்கத்தை எளிதாக்கும். மலச்சிக்கல் பிரச்னை வராமலிருக்கவும் கடல்பாசி உதவுகிறது. மலச்சிக்கல் பிரச்னைக்கு மருந்துகள், மலமிளக்கிகள் எடுத்துக்கொள்வோர், அவற்றுக்கு பதில் கடல்பாசி எடுத்துக் கொள்ளலாம். எந்தவிதப் பக்கவிளைவும் இல்லாமல், மலத்தை இளக்கி வெளியேறச் செய்வதில் கடல்பாசி பெரிய அளவில் உதவும்.
சீன மக்கள் பசி உணர்வைக் கட்டுப்படுத்த கடல்பாசி பயன்படுத்துவார்கள். கடல்பாசியில் கலோரி மிகக் குறைவு என்பது இதன் இன்னொரு ப்ளஸ். இளநீர் சேர்த்து புட்டிங் போன்று செய்து சாப்பிடலாம். ஆரோக்கியத்துக்கும் நல்லது, கலோரியும் கூடாது.
கடல்பாசி என்பது எடைக்குறைப்புக்கு உதவுமா என்பது குறித்து இன்னும் முழுமையான ஆய்வு முடிவுகள் வரவில்லை. கடல்பாசியை நாம் எப்படிச் சமைத்துச் சாப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்தது அது. பால், சர்க்கரை போன்றவை சேர்த்துச் செய்து சாப்பிடும்போது எடையை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment