Doctor Vikatan: கோடைக்காலத்தில் ஜூஸ், பால் போன்றவற்றில் சிலர் ஊறவைத்த பாதாம் பிசின் சேர்த்துக் குடிப்பதைப் பார்க்க முடிகிறது. இதை எல்லோரும் எடுத்துக்கொள்ளலாமா? குழந்தைகளுக்கும் கொடுக்கலாமா?
பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்
பாதாம் பிசினுக்கு உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் தன்மை கொண்டது. வட இந்தியர்களிடம் பாதாம் பிசின் பயன்பாடு மிகவும் அதிகமாக இருப்பதைப் பார்க்கலாம்.
பிரசவமான பெண்களுக்கு அங்கே, உடனடியாக கோந்து லட்டு கொடுப்பார்கள். அவர்களின் உடல் வலிமையை அதிகரிக்கும் என்றும், தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் என்றும் கொடுக்கப்படும் இந்த மல்ட்டி கிரெயின் லட்டில், பாதாம் பிசின்தான் பிரதானமாகச் சேர்க்கப்படும். பாதாம் பிசின், தசைகளை வலிமையாக்கும், உடலைக் குளிர்ச்சியாக வைக்கும்.
கோடைக்காலத்தில் சர்பத், ஜூஸ் போன்றவற்றில் இந்த பாதாம் பிசினைச் சேர்க்கலாம். தவிர, ஜெலட்டின் அசைவம் என அதைத் தவிர்ப்போர், ஜெலட்டின் பயன்படுத்திச் செய்கிற உணவுகளில், அதற்கான மாற்றாக பாதாம் பிசின் பயன்படுத்தலாம். நீர்க்கடுப்பு எனப்படும் யூரினரி இன்ஃபெக்ஷனால் பாதிக்கப் படுவோருக்கும் பாதாம் பிசின் நிவாரணம் தரும்.
இதை எந்த வடிவத்தில், எந்த உணவுடன் எடுத்துக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்து, எடைக்குறைப்பு மற்றும் எடை அதிகரிப்பு என இரண்டுக்குமே உதவும். எந்த வயதினரும் இதை எடுத்துக் கொள்ளலாம். ரொம்பவும் சிறிய குழந்தைகளுக்கு மட்டும் கொடுக்க வேண்டாம். அடிக்கடி சளி, வீஸிங் பிரச்னைகளால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கும் இதைத் தவிர்க்கலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment