Doctor Vikatan: திடீரென ஏற்படும் வாய்வுப்பிடிப்பு, அஜீரணத்துக்கு ஆண்டாசிட்ஸ் (antacids) எடுத்துக்கொள்வது தான் தீர்வா? உடனடி நிவாரணத்துக்கு உதவக்கூடிய எளிமையான வீட்டு வைத்தியங்கள் சொல்ல முடியுமா?
பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார்
செரிமானத்துக்கான ஆண்டாசிட்ஸ் (antacids ) மருந்துகள் எடுத்துக்கொள்ளும் பழக்கம், கடந்த பத்தாண்டுகளில் அதிகரித்திருப்பதைப் பார்க்கிறோம். முந்தைய காலத்தில் எல்லாம், செரிமானப் பிரச்னை ஏற்பட்டால் சிறிதளவு சீரகத்தையோ, சோம்பு, ஓமம் போன்றவற்றையோ நீரில் கொதிக்கவைத்துக் குடிக்கும் பழக்கம் இருந்தது.
பெரிய விருந்துகளில் வயிறு முட்ட சாப்பிட்ட பிறகு அஜீரண கோளாறு ஏற்படாமலிருக்க, சீரகம் கொதிக்க வைத்த நீர் குடிப்பார்கள். அதுவே கோடைக்காலம் என்றால் சீரகத்தை ஊறவைத்த தண்ணீரைக் குடிப்பார்கள். இவையே ஆண்டாசிட் மருந்துகளைப் போன்ற பலன்களைத் தந்தன. இவற்றில் உள்ள ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி மைக்ரோபியல் தன்மைகளின் காரணமாக, வயிற்றுப் புண்கள் வராமலும் உதவின.
ஆனால், இந்தக் காலத்தில் விளம்பரங்களைப் பார்த்தும், மருத்துவரின் பரிந்துரையின்றியும் செரிமானத்துக்கான மாத்திரைகள், மருந்துகளை வாங்கிப் பயன்படுத்துவது எளிதாகிவிட்டது. ஆண்டாசிட் மருந்துகள் என்பவை, வலிக்கான மாத்திரைகள் எடுக்கும்போது சேர்த்து எடுக்க வேண்டியவை. தாங்க முடியாத அளவுக்கு வயிற்றுப்புண்கள் இருக்கும் நிலையில் மருத்துவர்கள் இந்த மருந்துகளை குறிப்பிட்ட அளவு, குறிப்பிட்ட நாள்களுக்கு மட்டும் பரிந்துரைப்பார்கள்.
ஆண்டாசிட் மருந்துகள் பற்றிய தகவல்களை நீங்கள் இணையத்தில் தேடிப் பார்த்தாலே அவற்றின் பக்க விளைவுகளைத் தெரிந்துகொள்வீர்கள். எனவே, மருத்துவரின் பரிந்துரையின்றி ஆண்டாசிட் மருந்துகளை எடுக்கவே கூடாது. அஜீரண பிரச்னைகளுக்கு எளிய முறையில் தீர்வு காண பல வழிகள் உள்ளன.
அதிகம் சாப்பிட்டுவிட்டதாக உணர்ந்தால், அடுத்தவேளை சாப்பாட்டைத் தவிர்த்துவிடுவதுகூட அஜீரண பிரச்னையிலிருந்து விடுதலை தரும். மேற்குறிப்பிட்ட சீரகம், ஓமம், சோம்புத் தண்ணீரும் உதவும்.
சித்த மருத்துவத்தில் சீரகச் சூரணம், ஏலாதிச் சூரணம் போன்றவை செரிமான பிரச்னைகளுக்கான மருந்துகளாகப் பரிந்துரைக்கப்படுபவை. இவற்றை கைவசம் வீட்டில் வைத்திருக்கலாம். அஜீரணம் ஏற்படும்போது இவற்றில் அரை டீஸ்பூன் சாப்பிட்டாலே உடனடியாக நிவாரணம் கிடைப்பதை உணர்வீர்கள்.
முன்கூட்டியே ஆண்டாசிட் மருந்துகளை எடுத்துக்கொண்டு விருந்துகளுக்குப் போகிறவர்களும் இருக்கிறார்கள். எப்போதும் கையில் செரிமானத்துக்கான மாத்திரை, மருந்துகளை வைத்திருப்போரும் இருக்கிறார்கள். இந்தச் சூழல் நிச்சயம் மாற வேண்டும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment