Doctor Vikatan: சிறுநீரகக் கல் ( Kidney stones ) பிரச்னை உள்ளவர்கள், கீரைகள் மற்றும் தக்காளி சாப்பிடக்கூடாது என்று கேள்விப்பட்டேன். அது எந்த அளவுக்கு உண்மை?
பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்
நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடித்து, உடலை நீர் வறட்சியின்றி வைத்துக்கொள்ளாவிட்டால், சிறுநீரகக் கல் பிரச்னை மீண்டும், மீண்டும் தொடரும். கிட்னி ஸ்டோன்ஸ் வராமலிருக்க சில வகை உணவுகளைத் தவிர்க்க வேண்டியதும் அவசியம்.
கிட்னி ஸ்டோன்ஸ் என்பவை ஆக்ஸலேட் கற்களைக் குறிக்கும். கீரைகளில் சிறுநீரகக் கற்களை உருவாக்கும் ஆக்ஸலேட் அதிகம். அதாவது 100 கிராம் கீரையில் 755 மில்லிகிராம் அளவுக்கு ஆக்ஸலேட் (Oxalates) இருக்கும். எனவே, கிட்னி ஸ்டோன் பிரச்னை உள்ளவர்கள், கீரை, குறிப்பாக பசலைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதைத் தவிர்ப்பதே நல்லது. சிறுநீரகக் கல் பாதிப்புள்ளவர்கள், தக்காளி எடுத்துக்கொள்ளலாமா என்ற கேள்வியும் பலருக்கு உண்டு. தக்காளி சாஸில் 17 மில்லிகிராம் ஆக்ஸலேட் உள்ளது. எனவே, வாரத்தில் 3 நாள்களுக்கு மட்டும் தக்காளி சேர்த்துக்கொள்ளலாம். தக்காளி சாஸ் சாப்பிடுவதைத் தவிர்ப்பதே பாதுகாப்பானது.
அரிசித் தவிட்டில் 281 மில்லிகிராம் அளவுக்கு ஆக்ஸலேட் உள்ளதால் அதையும் தவிர்க்கவும். அவகேடோ, பேரீச்சம்பழம், கிவி, ப்ரூன் மற்றும் அத்திப் பழங்களிலும் ஆக்ஸலேட் அளவு அதிகம் என்பதால் இவற்றையும் தவிர்ப்பதே சிறந்தது. இவற்றுக்கு பதில் ஆரஞ்சுப் பழம் சாப்பிடலாம். சிட்ரஸ் பழங்கள் எல்லாமே சாப்பிடலாம். பால், யோகர்ட், சீஸ் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். தினசரி கீரை சாப்பிடுவது ஆரோக்கியமானது என்ற எண்ணத்தில் அதை அளவுக்கதிகமாகச் சாப்பிட வேண்டாம். ஆரோக்கியமான உணவு என்றாலும் அளவோடு சாப்பிடுவதுதான் சரியானது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment