`மாற்றான்' படத்தின் மூலம் ஒட்டிப்பிறந்த இரட்டையர்களின் வாழ்க்கை குறித்து பலரும் அறிந்திருப்போம்.
1996-ல் தி ஓப்ரா வின்ஃப்ரே ஷோவில் தோன்றியதற்குப் பிறகு மிகவும் பிரபலமானவர்கள் ஒட்டிப்பிறந்த இரட்டையர்களான அப்பி மற்றும் பிரிட்டானி ஹென்சல். ஒரே உடலில் இரு தலைகள் ஒன்றாக ஒட்டியிருக்கும்படியான அரிய வடிவில் (Dicephalus conjoined twins) இவர்கள் உள்ளனர்.
இவர்கள் ரத்த ஓட்டம் மற்றும் இடுப்புக்குக் கீழே உள்ள அனைத்து உறுப்புகளையும் ஒன்றாகப் பகிர்ந்துகொள்கிறார்கள். அப்பி வலது கை மற்றும் காலைக் கட்டுப்படுத்துகிறார், பிரிட்டானி இடதுபுறத்தைக் கட்டுப்படுத்துகிறார்.
இவர்கள் 1990-ல் பிறந்தனர். அறுவைசிகிச்சை மூலம் இருவரும் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று மருத்துவர்கள் கூற, இவர்களின் பெற்றோரும் குழந்தைகளைப் பிரிக்கும் அறுவைசிகிச்சை வேண்டாமென்று முடிவு செய்துள்ளனர்.
இரட்டையர்களில் ஒருவரான அப்பி 2021-ல் அமெரிக்க ராணுவ வீரரான ஜோஷ் பவுலிங்கை திருமணம் செய்துகொண்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களின் திருமணத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைராலாகி வருகின்றன. அந்த வீடியோவில் ஜோஷ் பவுலிங்குடன் இரட்டையர்கள் நடனமாடுவது போன்ற காட்சிகள் உள்ளன.
அமெரிக்காவின் மின்னசோட்டாவில் வசித்து வரும் இந்த இரட்டையர்கள் இப்போது ஐந்தாவது கிரேடு ஆசிரியர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.
2,00,000 பிறப்புகளில் ஒன்றில் மட்டுமே இந்த பாதிப்பு உண்டாகிறது. ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஏறக்குறைய 70 சதவிகித்தினர் பெண்களாக உள்ளனர், இப்படி பிறக்கும் பெரும்பாலானவர்கள் இறந்து பிறக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment