கருவுறும் பெண்கள் அனைவரும் குழந்தையைப் பெற்றெடுப்பதில்லை. எதிர்பாராத விதமாக சில குழந்தைகள் கருவிலேயே இறந்துவிடுகின்றன. காலங்கள் போகப் போக இறந்த குழந்தையின் நினைவுகள் பெற்றோரைத் தாண்டி யாருக்கும் தெரிவதில்லை.
தோன்றாமலே மறைந்து போன உயிரின் நினைவுகள் யாரும் அறியாமலேயே மறைந்து போகின்றன. இந்நிலையில் இங்கிலாந்து அரசு`Baby loss Certificate’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
24 வாரங்களுக்கு முன்பு வரை கர்ப்பமாக இருந்து, குழந்தையை இழந்த பெற்றோருக்கு இந்தச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. கர்ப்ப காலத்தில் நேரிடும் குழந்தையின் இழப்பை முறையாக அங்கீகரிக்க இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
`Baby loss Certificate’ பெறத் தகுதியானவர்கள் யார்?!
கர்ப்பமாகி 24 வாரங்களுக்கு முன்பு குழந்தையை இழந்த இங்கிலாந்து பெண்கள் தங்கள் குழந்தையை நினைவுகூர்வதற்கான சான்றிதழைப் பெற விண்ணப்பிக்கலாம். இச்சான்றிதழைப் பெற 16 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவராக இருக்க வேண்டும்.
அதோடு சான்றிதழுக்காக விண்ணப்பிப்பவர்கள் செப்டம்பர் 1, 2018 அன்று அல்லது அதற்குப் பிறகு குழந்தையை இழந்திருக்க வேண்டும். இதற்காக எந்தவித மருத்துவ ஆதாரத்தையும் வழங்கத் தேவையில்லை. குழந்தையின் இழப்பானது மருத்துவக் குழு அல்லது மருத்துவரால் பதிவு செய்யப்படாவிட்டாலும் விண்ணப்பிக்கலாம். இந்தத் திட்டத்திற்கு அப்பகுதி பெண்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்திருக்கிறது.
என் நினைவுபெட்டியில் சிறு உயிரை சேமிக்கிறேன்...
இது குறித்து கர்ப்பமாக இருந்தபோது குழந்தையை இழந்த லாரா என்ற பெண் கூறுகையில், ``2020-ல் எனக்குக் கருச்சிதைவு ஏற்பட்டது. இது என்னையும் என் கணவரையும் பாதித்தது, இது நாங்கள் அடிக்கடி பேசும் விஷயமல்ல. ஆனால், இறந்த என் குழந்தையை என்னால் மறக்கவே முடியாது. அந்த இழப்பு என்னில் ஒரு பகுதி.
கர்ப்பத்தில் ஏற்பட்ட இழப்பு குறித்து என் குழந்தைகளுடன் மிகவும் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் பேச விரும்புகிறேன். என்னை மகனுக்கு தற்போது 6 வயதாகிறது. எனது வயிற்றில் ஒரு சிறிய குழந்தை, அவனது சகோதரன் அல்லது சகோதரி இருந்தது அவனுக்குத் தெரியும்.
நம் குழந்தை இருந்ததை நிரூபிக்கும் அதிகாரபூர்வ ஆவணத்தை வைத்திருப்பது, வரவிருக்கும் ஆண்டுகளில் பேசுவதற்கும், நம் நினைவகப் பெட்டியில் வைத்திருப்பதற்கும் முக்கியமானது’’ என்றார்.
வெல்ஷ் மற்றும் வடக்கு அயர்லாந்து அரசாங்கங்கள் குழந்தை இழப்பு சான்றிதழ்களை அறிமுகப்படுத்துவது குறித்துப் பரிசீலித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது...
Baby loss Certificate குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், கமென்டில் சொல்லுங்கள்!
Comments
Post a Comment