'எக்கா, சேர் எடுத்துக்கிறேன்..' என்று பக்கத்து வீட்டு சிவா பரபரப்பாக எங்கள் வீட்டுக்கு வந்தால், அன்று அவனின் அக்கா முத்துச்செல்வியை யாரோ பெண் பார்க்க வருகிறார்கள் என்று அர்த்தம். சிவாவின் அம்மா வந்து, என் அம்மாவின் செயினையும், நல்ல புடவையையும் இரவல் வாங்கிச் செல்லும்போது, பெண் பார்க்க வருவது உறுதியாகி விடும். இது என்னுடைய 6 வயதிலிருந்து 8 வயது வரை தொடர்கதையாக நான் பார்த்த சம்பவம். முத்துச்செல்வி அக்காவிற்கு அப்போது 23 வயதிருக்கும். அவளைப் பெண் பார்க்க வரும்போது, நானும் அவளின் தம்பி சிவாவும் உள்ளே நடப்பதை ஜன்னல் வழியாக எட்டிப் பார்ப்போம். தலையை குனிந்து, லேசாக சிரித்துக்கொண்டே முத்துச்செல்வி அக்கா நடந்து வந்து தண்ணீர் கொடுப்பாள். சிறிது நேரத்தில் எல்லாம் மாப்பிள்ளை வீட்டார் கிளம்பிவிடுவார்கள்... `ஊருக்குப் போயி கடுதாசி போடுறோம்னு சொன்னாங்க... இன்னும் போடல, பொறந்தது பொறந்துச்சு கொஞ்சம் கலரா பொறந்திருக்கக் கூடாது... எப்படி கரை சேர்க்கப்போறோம்னு தெரியல' என முத்து அக்காவின் அம்மா அடுத்த சில நாளில் வீட்டில் வந்து அழாத குறையாகப் புலம்பி விட்டுச் செல்வார்.
அடுத்த முறை முத்து அக்காவை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வந்தபோது, நான் முதலில் மாப்பிள்ளையைத்தான் பார்த்தேன்... மாப்பிள்ளை நிறமாக இல்லை, கசங்கிய சிவப்பு சட்டை, வெளுத்துப்போன பேன்ட், உயிரை விடும் நிலையில் இருந்த செருப்பு, நெற்றியில் குங்குமம், வியர்த்து வடிந்த முகம்... அந்த மாப்பிள்ளையும் கடுதாசி போடுவதாகத்தான் சொல்லிச்சென்றார். ஓர் ஆண், பெண் பார்க்க வரும்போது, ஏன் எந்த மெனக்கெடல்களும் செய்யவேண்டியதில்லை... ஆனால், ஒரு பெண் தன்னை அழகுப்படுத்தி, பொய்யான சிரிப்புடன், அலங்காரத்துடன் பொம்மைபோல் நிற்பதை இந்தச் சமூகம் ஏன் பழக்கப்படுத்தியது..?
அப்போது எனக்கு பத்து வயது. அந்த முறை முத்து அக்காவிடம் அவளின் தோழிகள் பேசுவதைக் கேட்டேன்...'எதுக்குல பொண்ணுப்பாக்குறப்போ தலை குனிஞ்சே வர்ற்'னு கேட்க... 'இல்ல... வர்ற மாப்பிள்ளையை எனக்குப் பிடிக்கும், கல்யாணம் பண்ணிக்கிட்டா நல்லா இருக்கும்னு ஆசைப்படுவேன். ஆனா, அந்த மாப்பிள்ளைக்கு என்னைப் பிடிக்காது... மணமேடை கனவை எத்தனை முறை கலைக்கிறது...அதுதான் எதுக்கு ஆசையை வளர்த்துக்கிட்டுனு குனிஞ்சு நடக்குறேன். அதை வெட்கம்னு நினைச்சுப்பாங்க. விரக்தில இருக்கும்போது வெட்கமா வரும்...எல்லாரும் என் நிறத்தைத்தான் சொல்றாங்க' என்று குளமாக தேங்கிய முத்து அக்காவின் கண்கள் எதையோ தேடும்.. 'நீ அழகாதானக்கா இருக்க' என நான் சொன்னதற்கு, என்ன நினைத்து என்னைக் கட்டிப்பிடித்து அழுதாள் என இப்போது வரை எனக்குத் தெரியாது... அந்த இறுக்கத்திலிருந்து இன்னும் என்னால் மீள முடியவில்லை.
அடுத்த ஆறுமாசங்களில் முத்து அக்காவிற்கு திருமணம். இரண்டாம்தாரமாக வாழ்க்கைப்பட்டாள். அவளைவிட மாப்பிள்ளைக்கு 18 வயது அதிகம்... அதையும் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டாள். தன்னுடைய 35 வயதில் கணவனை இழந்து தனி மரமானாள்... அவளின் நிறத்திற்காக மொத்த வாழ்க்கையையும் காவு வாங்கிக்கொண்டது இந்தச் சமூகம்... அதற்கு அவர்கள் வைத்த பெயர் விதி.
பெண் பார்க்கும் படலத்தின்போது முத்து அக்கா முகத்திலிருந்த போலியான சிரிப்பைகூட இப்போது பார்க்கமுடியவில்லை. அதனால் கறுப்பாக, வியர்வை வடிந்த, தெத்துப் பல்லுடன் இருக்கும் பெண்களைப் பார்க்கும் போதெல்லாம் நான் முத்து அக்காவை நினைத்துக்கொள்வதுண்டு. அவர்களைப் பார்த்து, 'நீங்க அழகா இருக்கீங்க' என்று மறக்காமல் சொல்லிவிடுவேன். அப்போது முகத்தில் தவழும் புன்னகை என்னை ஏதோ செய்திருக்கிறது. இந்தத் தலைமுறை பெண்கள் இதை எதிர்கொள்ளவில்லை தான்... ஆனால், 'கல்யாணத்துக்கு முன்னாடி வெயிட்டை குறைக்கச் சொல்லுங்க, ஃபேஷியல், ஸ்கின் கேர் பண்ணலாம்ல...பொண்ணு கொஞ்சம் வெயிட் போட்டா நல்லா இருக்கும்' என்ற வார்த்தை அம்புகளை எதிர்கொள்கிறார்கள்.
நானும் என் நிறத்திற்காக கேலி கிண்டல்களுக்கு உள்ளாகியிருக்கிறேன். என் மகள் நிறமாக இருக்கிறாள் என்பதற்காக, 'நீ தான் இந்தப் புள்ளைக்கு அம்மாவா?' என்ற கேள்வியை முன் வைத்திருக்கிறார்கள். கலராக இருக்கும் என் தோழியைப் பார்த்து, 'கலரு, ஆனா, முகம் லட்சணமா இல்லையே ' என்று சொல்லியிருக்கிறார்கள். ஒல்லியாக இருக்கும் என் அக்காவைப் பார்த்து, 'வீட்ல சோறு போடலையா' என்ற கேள்வியைக் கேட்டிருக்கிறார்கள். பருமனாக இருக்கும் என் தோழியை பெண் பார்க்க வந்தவர்கள், 'தைராய்டு பிரச்னை இருக்கா, பீரீயட்ஸ் எல்லாம் சரியா வருதா' என்ற கேள்வியை எல்லார் முன்னிலையிலும் கேட்டிருக்கிறார்கள். ஓர் ஆணின் விந்தணு குறித்த கேள்வியை பெண் வீட்டாரால் இவ்வளவு எளிதாகக் கேட்டுவிட முடியுமா ? இவர்கள் எதிர்பார்ப்பதுபோல் எல்லாம் சரியாக இருக்கும் பெண்ணே கிடைத்தாலும்கூட , குழந்தைப்பேற்றுக்குப் பின் அவள் உடலும் மாற்றங்களைச் சந்திக்கும் என்பதுதானே இயற்கை... அப்போதும் விமர்சனங்கள் தொடர்கின்றன தானே...
பெண்ணை அழகுக்காகவும் ஆண்களை வீரத்திற்காகவும் வர்ணிக்கும் வார்த்தைகளை இதிகாச காலத்திலிருந்து பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். இங்கு எந்தப் பெண்ணும் தான் அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பிறப்பதில்லை. தான் வளரும் சூழலையும், தான் பார்க்கும், கேட்கும் விஷயங்களையும் வைத்துதான் கண்ணாடியை பார்க்கத் தொடங்குகிறாள். நீங்களும், நானும்கூட ஒரு பெண் கண்ணாடியைப் பார்க்க காரணமாக இருந்திருக்கலாம். கண்ணாடி பார்த்தே அவள் காலம் நகர்கிறது... 4 வயதில் தனக்காக கண்ணாடி பார்க்கத்தொடங்கி, 70 வயதிலும் அழகைத் தக்கவைக்க போராடுகிறார்கள். அதற்காக ஆண்களுக்கு பாடி ஷேமிங் நிகழவேயில்லை என்ற கருத்தை முன்வைக்கவில்லை. ஆனால், ஒப்பீட்டளவில் ஆண்களை விட பெண்களே அதிகம் பாடி ஷேமிங்கை எதிர்கொள்கிறார்கள். ' என்னடா மீசை வளரல, பொம்பள மாதிரி இருக்க', ' நெஞ்ச நிமித்தி நட, பொம்பள மாதிரி ஏன் குனியுற', ' நீ என்ன பிள்ளையா பெத்துருக்க, இவ்வளவு பெரிய தொப்ப விழுந்துருக்கு' - இப்படி ஆண்களுக்கு நடக்கும் பாடிஷேமிங்கூட பெண்களை மையப்படுத்தியிருக்கும் வார்த்தைகளாகவே இருக்கின்றன..
'பாடி ஷேமிங் பற்றிய உரையாடல் வரும்பொதெல்லாம் விளையாட்டுக்குப் பேசுற வார்த்தையை கூட பாடி ஷேமிங்னு எடுத்துக்கிட்டா எப்படி?' னு நண்பர்கள் நிறைய முறை கேட்டிருக்கிறார்கள். ஒரு, இரு முறை வார்த்தைக்காக கறுப்பா இருக்க, குண்டா இருக்க என்று சொல்வதையெல்லாம் இங்கு எந்தப் பெண்ணும் சீரியஸாக எடுத்துக்கொள்வதில்லை. பல போராட்டங்களைக் கடந்தவர்களுக்கு அது பெரிய தடுப்புச்சுவராகவும் இருக்காது. ஆனால், தொடர்ந்து அது பேசு பொருளாக மாறும் போதுதான், அவளின் வளர்ச்சி ஏணியில் ஒரு படி காணாமல் போகிறது. இதை நினைத்து அவமானப்பட வேண்டியவர்கள் பெண்கள் அல்ல... அவர்களை அடக்க வேறு வழி தெரியாமல், உடம்பு, அழகு என்பதைப் பிடித்து தொங்கும் இந்தச் சமுதாயம் தான் பெண்களை அழகு என்ற வட்டத்திற்குள் தள்ளி, பாடி ஷேமிங் என்ற புள்ளிக்குள் சுருக்காமல் அவர்களின் தோற்றம் குறித்த உங்கள் கருத்தை கண்களாலும், மனதாலும், வார்த்தைகளாலும், செயல்களாலும் வெளிப்படுத்தாமல் இருக்க வேண்டும். அவர்கள் உயர பறப்பதைப் பார்த்து உங்கள் கண்களும் நிச்சயம் விரியும்... அழகா இருக்க என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல், ஸ்மார்ட்டா இருக்க, தைரியமா இருக்க, உன்ன மாதிரி யோசிக்க முடியுமா?' இது போன்ற வார்த்தைகளை உங்கள் வீட்டில் இருக்கும் பெண்களிடம் ஒரு முறையாவது சொல்லிப் பாருங்களேன்... அவர்களின் சிறகுகள் இன்னும் உயரமாக,வேகமாகவும் பறக்கும்.
Comments
Post a Comment