உடலை கவனிக்காமல் ஓடிக்கொண்டே இருந்தால், ஒரு நாள் உடல் சொல்வதைக் கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவோம்...
பிரபல ரியல் எஸ்டேட் தளமான ஹவுசிங்.காமின் (Housing.com) தலைமை நிர்வாக அதிகாரி துருவ் அகர்வாலா இரண்டு ஆண்டுகளில் 71 கிலோ எடையைக் குறைத்தது குறித்து இன்டெர்வியூ ஒன்றில் பேசியுள்ளார்.
ஒரு நாள் அவர் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டபோது, நெஞ்செரிச்சல் ஏற்பட்டிருக்கிறது. அதனை அவர் தவறாக மாரடைப்பு என்று எண்ணி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்திருக்கிறார். அந்தச் சமயத்தில் அவரின் உடல் எடை 151.7 கிலோவாக இருந்தது. நீரிழிவு நோயின் பாதிப்புக்கு முந்தைய நிலையில் இருந்தார். அதோடு 4 வருடங்களாக உயர் ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் ஆகியவற்றுக்காக மருந்துகளை உட்கொண்டிருக்கிறார்.
எடைக்குறைப்பின் தீவிரத்தை இந்தச் சம்பவம் அவருக்கு எடுத்துரைக்க, தனது எடை குறைக்கும் பயணத்தில் ஈடுபட ஆரம்பித்தார். உடற்பயிற்சி, உணவுப் பழக்க வழக்கங்களை மாற்றினார். சிங்கப்பூரில் ஒரு தனிப்பட்ட பயிற்சியாளருடன் வாரத்திற்கு மூன்று முறை உடல் வலிமைக்கான (strength-training) பயிற்சிகளை எடுத்துக் கொண்டார். ஒரு நாளைக்கு 12,000 படிகள் ஏறினார்.
உணவு உட்கொள்ளலிலும் மிகப்பெரிய மாற்றத்தைச் செய்தார். தினசரி உணவில் 1,700 கலோரிகளை குறைத்தார். மது மற்றும் பதப்படுத்தப்பட்ட, வறுத்த உணவுகளை அறவே தவிர்த்தார். புரத உணவுகளைச் சேர்த்துக் கொண்டார். மதியத்தில் 200-300 மில்லி அளவு பருப்பு, 150 முதல் 180 கிராம் சமைத்த காய்கறிகள், ரொட்டி உண்பார். இரவில் வறுக்கப்பட்ட கோழி அல்லது மீன் அல்லது சூப் குடிப்பார்.
நான்கு மாதங்கள் உடற்பயிற்சி செய்து 20 கிலோ எடையைக் குறைத்தார். மனதில் புதுவித தெம்பும், சுற்றியிருந்தவர்களின் பாராட்டும் கிடைக்கவே, தொடர்ந்து எடையைக் குறைக்கும் நோக்கத்தில், 2023-ல் ரன்னிங் மற்றும் நீச்சல் பயிற்சிகளை எடுத்தார். இரண்டு வருடங்களிலேயே 71 கிலோ எடையைக் குறைத்தார்.
இது குறித்து துருவ் அகர்வாலா கூறுகையில், ``ஒரு நாள் நான் உடல் எடையைக் குறைப்பேன், ஒரு நாள் ஃபிட்டாக மாறுவேன் என மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் சேரும் வரை எண்ணிக் கொண்டே இருந்தேன். மருத்துவமனை படுக்கையில் படுத்திருந்த அந்தத் தருணத்தை நான் தெளிவாக நினைவில் வைத்திருக்கிறேன். அந்தத் தருணமே எனது உடல்நிலையில் கவனம் செலுத்த உந்தியது.
உடல் எடையைக் குறைப்பதிலுள்ள சிறந்த அம்சம் என்னவென்றால், எனது அலமாரியை பலமுறை மாற்றி, இறுதியாக நான் விரும்பும் ஆடைகளை எப்போதும் என்னால் அணிய முடிகிறது. நான் என்னை பற்றி நன்றாக உணர்கிறேன். எனது உடற்பயிற்சி நிலைகளின் இலக்குகளை உயர்த்துவதன் மூலம் எடை இழப்பைத் தக்க வைத்துக் கொண்டேன், நான் என் இலக்குகளை அடைந்துவிட்டதாக ஒருபோதும் நம்பமாட்டேன்’’ என்றார்.
Comments
Post a Comment