அகமதாபாத்தில் அமைந்துள்ள இந்திய பன்னாட்டு மருந்து நிறுவனமான காடிலா ஃபார்மாசூட்டிகல்ஸ் (Cadila Pharmaceuticals), வைட்டமின் டியின் முதல் ஏக்வியஸ் இன்ஜெக்ஷனை (Aqueous injection) அறிமுகப்படுத்தியுள்ளது. cholecalciferol-ன் கலவையில் இந்த மருந்து உருவாக்கப்பட்டுள்ளது.
சாதாரணமாக சில மருந்துகளை குளுக்கோஸில் கலந்து வழங்குவார்கள். அது போல இந்த மருந்தும் நீர் போன்ற கரைசலில் கரைக்கப்பட்டு நரம்பு, தசைக்குள் அல்லது தோலுக்கு அடியில் ஊசியின் மூலம் செலுத்தப்படும். இதன் மூலம் நோயாளிக்கு விரைவாக சிகிச்சை அளிக்கப்படும்.
இந்த மருந்து வைட்டமின் டி சிகிச்சையில் புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மருந்து விரைவாக வைட்டமின் டி பற்றாகுறையை சரிசெய்வதோடு, எளிமையான மற்றும் வலியற்ற சிகிச்சைக்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது.
வைட்டமின் டி மற்றும் அதன் முக்கியத்துவம்
சூரிய ஒளி மூலம் வைட்டமின் டி பெறலாம். காலை 10.30 முதல் 12 மணி வரையிலான வெயிலில் அதிகளவு வைட்டமின்-டி கிடைக்கும். பால், சிக்கன், மீன், முட்டை போன்ற உணவுகளையும் அன்றாடம் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால், உணவு மூலமாக குறைவான அளவு வைட்டமின் டிதான் கிடைக்கும். வைட்டமின் டி குறைபாட்டினால் உலகம் முழுவதிலும் 1 பில்லியன் மக்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர் என க்ளீவ்லேண்ட் கிளினிக் அறிக்கை கூறுகிறது.
வைட்டமின் டி குறைபாட்டை கவனிக்காவிட்டால் பல்வேறு உடல்நல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். எலும்புகளில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு குழந்தைகளில் எலும்புகளை மென்மையாக்கும் ரிக்கெட்ஸ் பாதிப்பையும் ஏற்படுத்தும். எலும்பு முறிவு அபாயத்தை உண்டாக்கும் ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பையும் ஏற்படுத்தும்.
கேன்சர், இதய நோய்கள் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துவதோடு, மன ஆரோக்கியத்தையும் பாதிக்கும். அதோடு நோயெதிர்ப்பு மண்டலத்தையும் பாதிக்க வாய்ப்புள்ளது.
வைட்டமின் டி மருந்து கண்டுபிடிப்பு குறித்து காடிலா ஃபார்மாசூட்டிகல்ஸின் சிஓஓ டாக்டர் விஜயேஷ் குப்தா, கூறுகையில், ``உலகின் முதல் ஏக்வியஸ் வைட்டமின் டி இன்ஜெக்ஷனை அறிமுகப்படுத்தியதன் மூலம், அதிநவீன சுகாதார தீர்வுகளை வழங்குவதில் காடிலா பார்மாசூட்டிகல்ஸ் அதன் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
இந்தக் கண்டுபிடிப்பு மருத்துவர்களுக்கு வைட்டமின் டி குறைபாடுள்ள நோயாளிகளுக்கு அவர்களின் சிகிச்சை நெறிமுறைகளை சிறப்பாக வடிவமைக்க உதவும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும், ஏராளமான அடுத்த தலைமுறை நோயாளிகள் உலகின் முதல் ஏக்வியஸ் இன்ஜெக்டபிள் வைட்டமின் டி மூலம் பயனடைவார்கள்’’ என்று கூறியுள்ளார்.
Comments
Post a Comment