Bad Breath பிரச்னைக்கான தீர்வுகள்
வாய் துர்நாற்றத்துக்கான காரணங்களை கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். அதற்கான தீர்வுகள் பற்றி இந்த அத்தியாயத்தில் பேசியிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த முக சீரமைப்பு அறுவை சிகிச்சை மருத்துவர் சுரேஷ் வீரமணி
வாய் துர்நாற்றம் இருப்பதைக் கண்டறிவதற்கென்று பிரத்யேக அறிகுறிகள் எதுவும் இருக்காது. நாம் சுயமாகவே உணர்ந்துகொண்டால்தான் தெரிய வரும். சில நேரங்களில் குடும்பத்தினர், நண்பர்கள் சொல்லக்கூடும். வாய் துர்நாற்றத்துக்கு மவுத் ஃபிரெஷ்னர், மவுத்வாஷ் போன்ற எதுவும் தீர்வாகாது.
Tooth Pick வேண்டாமே!
மவுத் வாஷ் தொடர்ச்சியாகப் பயன்படுத்துவதே துர்நாற்றத்துக்கு வழிவகுக்கலாம். அதில் சேர்க்கப்பட்டிருக்கும் ஆல்கஹால் வாயில் வறட்சியை ஏற்படுத்தும். இது தொடரும்போது துர்நாற்றம் (Bad Breath) ஏற்படும்.
அதேபோல சிலருக்கு உணவு உட்கொண்டதும் 'டூத் பிக்' (Tooth Pick) பயன்படுத்தி பற்களைச் சுத்தப்படுத்தும் பழக்கம் இருக்கும். இது முற்றிலும் தவறானது. 'டூத் பிக்' பயன்பாட்டை பல் மருத்துவர்கள் பரிந்துரைக்கமாட்டார்கள்.
'டூத் பிக்' பயன்படுத்தும்போது இரண்டு பற்களுக்கு நடுவில் கூடுதல் இடைவெளி ஏற்படும். அடுத்த முறை சாப்பிடும்போது அந்த இடைவெளியில் உணவுத்துணுக்குகள் சிக்கலாம். உணவுத் துணுக்குகள் தொடர்ந்து சிக்கும்போது வாயில் துர்நாற்றம் ஏற்படும். உணவு உட்கொண்டதும் வாய்க்கொப்பளித்தாலே போதுமானது. வாயில் சிக்கியிருக்கும் உணவுத் துணுக்குகளை வெளியேற்ற ஃபிளாசிங் (Flossing) செய்வது பயனளிக்கும். ஆனால் நமது நாட்டில் அது அவ்வளவு பிரபலமடையவில்லை.
காரணம் கண்டறிக!
வாய் துர்நாற்றத்துக்கான காரணத்தை முதலில் கண்டறிய வேண்டும். சர்க்கரை நோய், சொத்தைப் பல், குறட்டை, அஜீரணப் பிரச்னை உள்ளிட்ட உடல்நலப் பிரச்னைகளால் வாய் துர்நாற்றம் ஏற்பட்டிருந்தால் அந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டாலே வாய் துர்நாற்றம் சரியாகிவிடும்.
புகைப்பழக்கம், மதுப்பழக்கம், கார்பனேட்டடு குளிர்பானங்கள் அடிக்கடி குடிப்பது போன்ற காரணங்களால் வாய் துர்நாற்றம் ஏற்பட்டிருந்தால், அந்தப் பழக்கத்தைக் கைவிட்டால்தான் பிரச்னை சரியாகும்.
3 எளிய விஷயங்கள்
பொதுவாக 80 சதவிகிதம் பேருக்கு வாய் சுகாதாரத்தைப் பேணாததால்தான் இந்தப் பிரச்னை ஏற்படும். வாய் துர்நாற்றத்தைப் போக்குவதற்கான எளிதான வழி என்னவென்றால் வாய் உலர்ந்து போகாமல் தடுக்க வேண்டும்.
அதற்கு அடிக்கடி போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ஏதாவது சாப்பிட்டால் உடனே வாய்க் கொப்பளிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறை பிரஷ் செய்ய வேண்டும். இந்த மூன்று பழக்கங்களைப் பின்பற்றினாலே பல் சுகாதாரத்தினால் ஏற்பட்ட வாய் துர்நாற்றத்துக்கு தீர்வு கண்டுவிடலாம்.
இருக்கு.. ஆனா இல்ல!
சிலருக்கு வாய் துர்நாற்றம் இல்லாவிட்டாலும் தனக்கு பிரச்னை இருப்பதாகத் தோன்றலாம். அப்படிப்பட்டவர்களும் மருத்துவரை அணுகி சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ளலாம். வாய் சுகாதாரம் நன்றாகப் பேணினாலும் வாய் துர்நாற்றம் இருந்தால் மருத்துவரை அணுகி பிரச்னைக்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும். வாய் துர்நாற்றம் இருந்தால் முதலில் பல் மருத்துவரை அணுக வேண்டும். மருத்துவக் காரணங்களை ஆராய்ந்துவிட்டு தேவைப்பட்டால் அவர் வேறு மருத்துவருக்குப் பரிந்துரைப்பார்" என்றார் அவர்.
பற்கள் பாதுகாப்பு, சிகிச்சை, வாய் சுகாதாரம் தொடர்பான சந்தேகங்களுக்கு விடைகளையும் ஆலோசனைகளையும் அளிக்கும் Happy Teeth தொடர் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வெளியாகும்.
பற்கள் பராமரிப்பு பற்றி உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், கமென்ட்ஸில் தெரிவிக்கவும். உங்கள் கேள்விகளுக்கு பல் மருத்துவர்கள் பதில் அளிப்பார்கள்.
Comments
Post a Comment