Doctor Vikatan: என்னுடைய நண்பன் வாரத்துக்கு மூன்று நாள்களுக்கு பீஃப் (மாட்டிறைச்சி) சாப்பிடுகிறான். மற்ற அசைவ உணவுகளைவிட, மாட்டிறைச்சியில் ஏராளமான சத்துகள் உள்ளன என்று, வெறும் பீஃப் மட்டுமே சாப்பிடுகிறான். இப்படிச் சாப்பிடுவது சரியானதா....? மாட்டிறைச்சியில் மற்ற அசைவ உணவுகளைவிட அதிக சத்துகள் உள்ளனவா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.
சீனர்கள் ஒலிம்பிக் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளில் ஏராளமான பதக்கங்களை வெல்வதைத் தொடர்ந்து பார்க்கிறோம். அதன் ரகசியம் என அவர்கள் குறிப்பிடுவது மாட்டிறைச்சி உணவுகள். குறிப்பாக, பீஃப் சூப் எடுத்துக்கொள்வார்கள்.
விளையாட்டுப் பயிற்சியின்போதுகூட நிறைய பீஃப் சூப் குடித்துக்கொண்டே இருப்பார்கள். அதில் இயற்கையான க்ரியாட்டின் ( Creatine ) இருப்பதால், தசைகளின் அடர்த்திக்குப் பெரிய அளவில் உதவுகிறது. தவிர, அந்த உணவு உடல் வலிமையைக் கூட்டி, உடலில் இரும்புச்சத்தின் அளவையும் அதிகரிக்கக்கூடியது. அப்படியானால், விளையாட்டு வீரர்களுக்குத்தான் பீஃப் உணவுகள் ஏற்றவையா என்ற கேள்வி வரலாம்.
எல்லோருமே பீஃப் உணவுகள் சாப்பிடலாம். அதில் மிகச் சிறந்த புரதச்சத்து இருக்கிறது. மக்னீசியம், செலீனியம், மாங்கனீஸ், குரோமியம் போன்ற சத்துகளும் அபரிமிதமாக உள்ளன. அதனால் சருமம், நகங்கள் மற்றும் கூந்தல் ஆரோக்கியம் மேம்படும்.
சருமத்தின் எலாஸ்டிக் தன்மையைக் காத்து, இளமையோடு வைத்திருக்க கொலாஜென் மிகவும் அவசியம். வயதாக, ஆக இது குறையத் தொடங்கும். சிலர் அதை ஈடுகட்ட, சப்ளிமென்ட்டாக எடுத்துக்கொள்வார்கள். அதற்கு பதிலாக பீஃப் உணவுகளை எடுத்துக்கொள்வது இயற்கையாகவே உடலில் கொலாஜென் உற்பத்தியை அதிகரிக்க உதவும்.
மூட்டுகளின் ஆரோக்கியத்துக்கும் மாட்டிறைச்சி மிகவும் நல்லது. இத்தனை நல்ல விஷயங்கள் இருந்தாலும், பீஃப் உணவுகளோடு நார்ச்சத்து மிகுந்த காய்கறிகள், பழங்கள், முளைகட்டிய தானியங்கள், சுண்டல், பாலிஷ் செய்யாத அரிசி போன்றவற்றை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதைத் தவிர்த்து உங்கள் நண்பரைப் போல வெறும் பீஃப் உணவுகள் மட்டுமே சாப்பிட்டால், பெருங்குடல் புற்றுநோய் (Colon cancer) தாக்கும் அபாயம் மிக அதிகம் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment