Doctor Vikatan: எனக்கு தினமும் ஏதேனும் ஸ்வீட் சாப்பிடும் வழக்கம் உண்டு. சர்க்கரைநோய் இல்லை. தினமும் ஏதேனும் ஒரு வேளை உணவுடன் இனிப்பு சாப்பிட்டால்தான் உணவு உண்ட முழுமையான உணர்வே கிடைக்கிறது. இதைத் தவிர்க்க முடியவில்லை. என்ன செய்வது?
பதில் சொல்கிறார் கோயம்புத்தூரைச் சேர்ந்த டயட்டீஷியன் கற்பகம்
ஒருவருக்கு அடிக்கடி இனிப்பு சாப்பிட வேண்டும் எனத் தோன்ற பல காரணங்கள் இருக்கலாம். அவற்றில் சில உடல்ரீதியான காரணங்களாகவும், சில மனரீதியான காரணங்களாகவும் இருக்கலாம்.
பெரும்பாலும் இனிப்புத்தேடல் என்பது ரத்தத்தில் குளுக்கோஸ் சமநிலையின்மையின் அறிகுறியாகவே வெளிப்படும். ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்போது, ஏதேனும் இனிப்பாகச் சாப்பிட வேண்டும் போலத் தோன்றும். அடுத்து இந்த விஷயத்தில் உங்கள் தூக்கமும் கவனிக்கப்பட வேண்டும். நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள், எத்தனை மணி நேரம் தூங்குகிறீர்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்.
ஒரு மனிதருக்கு தினமும் 8 மணி நேரத் தூக்கம் முக்கியம். அந்தத் தூக்கம் கிடைக்காதபோது, காலையில் எழுந்ததும் எதையாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றும். அந்த உணவுத்தேடல், சிலருக்கு இனிப்பு சாப்பிட வேண்டும் போலவும், சிலருக்கு உப்பான உணவுகள் சாப்பிட வேண்டும் போலவும், வேறு சிலருக்கு கார்போஹைட்ரேட் உணவுகள் சாப்பிட வேண்டும் போலவும் தோன்றலாம்.
பெண்களுக்கு மாதவிடாய்க்கு முன்பு, உடலில் நிகழும் ஹார்மோன் மாற்றங்களின் விளைவாக இனிப்புத் தேடல் இருப்பது இயல்பு. தினமும் மதிய உணவுக்குப் பிறகு இனிப்பு சாப்பிடுவது, இரவு உணவுக்குப் பிறகு இனிப்பு சாப்பிடுவது என பலகாலமாக நீங்கள் பின்பற்றும் பழக்கம், உங்கள் நினைவில் பதிந்து, அதை தினமும் செய்யவைத்துவிடும் என்று ஆய்வுகள் சொல்கின்றன.
இனிப்பு உணவுகளின் மீதான அடிக்ஷன் காரணமாகவும் இப்படி தினமும் ஸ்வீட் சாப்பிடும் பழக்கம் தொடரலாம். அதேபோல, மக்னீசியம் குறைபாடு காரணமாகவும் இனிப்புத் தேடல் ஏற்படலாம். உடலுக்கு ஏதோ சத்து தேவைப்படுகிறது, ஆனால் அது குறைவாக இருக்கிறது என்ற நிலையில், அது இப்படி இனிப்புத் தேடலாக வெளிப்படும்.
இந்தப் பழக்கத்தை எளிதாகச் சமாளிக்கலாம். நீங்கள் தினமும் சாப்பிடும் உணவில் கார்போஹைட்ரேட், புரோட்டீன் இருக்க வேண்டும். புரோட்டீன் என்பது பால், முட்டை, நட்ஸ், சீட்ஸ், பருப்பு வகைகள், முளைகட்டிய பயறுகள், அசைவ உணவுகள் என பல வழிகளில் நமக்குக் கிடைக்கும். புரோட்டீன் அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிடும்போது நமக்கு வயிறு நிறைந்த உணர்வு ஏற்படும். அதனால் உணவுத் தேடல் இருக்காது.
தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்கிறீர்களா என்பதும் முக்கியம். உடலில் நீர்ச்சத்து குறையும்போதும் இனிப்பான உணவுகளைச் சாப்பிடும் உணர்வோ, உப்பான உணவுகளின் மீது ஈர்ப்போ ஏற்படலாம். நட்ஸ், சீட்ஸ், வாழைப்பழம் போன்றவற்றில் மக்னீசியம் உள்ளதால், அதுவும் இந்த வகை இனிப்புத் தேடலைத் தடுக்கும். தினமும் இனிப்பு சாப்பிடுவது என்பது உங்கள் கலோரி அளவுகளை அதிகரித்து, உடல் பருமனுக்கு வழி வகுக்கும். பல் சொத்தைக்கும் காரணமாகும். உடல் பருமன் அதிகரித்தால் நீரிழிவு உள்ளிட்ட பல பிரச்னைகளும் வரும் என்பதால் இந்தப் பழக்கத்தைக் கட்டுப்படுத்துவதுதான் சரியானது. அதையும் மீறி கட்டுப்படுத்த முடியாத பட்சத்தில் மருத்துவ உதவியை நாடுங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment