Doctor Vikatan: வயிற்று உப்புசம், சோர்வு, தூக்கம், வாந்தி என இருந்த என் 10 வயது மகனுக்கு மஞ்சள் காமாலை (jaundice) வந்ததைக் கண்டுபிடிக்காமல் மாத்திரை மேல் மாத்திரைகளாகக் கொடுத்து நோய் அதிகமாகி சீரியஸ் ஆகிவிட்டது. மஞ்சள் காமாலை பாதிப்பை ஓரிரு நாள்களிலேயே தெரிந்துகொள்ள முடியாதா?
பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார்
நீங்கள் உங்கள் மகனுக்கு இருந்ததாகக் குறிப்பிட்டுள்ள வயிற்று உப்புசம், சோர்வு, தூக்கம் போன்ற பிரச்னைகள் தனித்தனியே இருந்தால் அது சாதாரண பிரச்னையின் அறிகுறியாக இருக்கலாம். ஆனால், நீங்கள் குறிப்பிட்டுள்ள அத்தனை குறிகுணங்களும் வாந்தியோடு சேர்ந்து இருக்கும்பட்சத்தில், அது கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்னையாக இருக்கலாம் என்றே சந்தேகிக்க வேண்டும். சாமானியருக்கு அதை அப்படிப் பொருத்திப் பார்க்கத் தோன்றாதுதான்.
இத்தகைய அறிகுறிகள் சேர்ந்துவரும்போது தாமதிக்காமல் மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை எடுப்பதுதான் நல்லது. 10 வயதுச் சிறுவனுக்கு வயிற்று உப்புசம் வருவது தவறான விஷயம். அது எப்போதாவது வரலாமே தவிர, அடிக்கடி ஏற்பட்டால் நிச்சயம் வேறு ஏதோ பாதிப்பு இருப்பதாகவே அர்த்தம். கண்களில் நிற மாற்றம், சருமத்தில் நிற மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும். அதன் மூலம் மஞ்சள் காமாலையாக இருக்குமோ என சந்தேகிக்கலாம்.
எந்த அறிகுறியாக இருந்தாலும் மருத்துவ ஆலோசனையும் அவரது பரிந்துரையின் பேரில் சிகிச்சையும் எடுப்பதுதான் சரி. குழந்தைகள் விஷயத்தில் இதில் இன்னும் கவனமாக இருக்க வேண்டும். நீங்களாக மருந்துக் கடைகளில் மருந்து வாங்கிப் பயன்படுத்துவது தவறு. எந்தப் பிரச்னையானாலும் மருந்துக் கடையில் கேட்டு மாத்திரைகள் சாப்பிடும் வழக்கம் பலரிடமும் இருக்கிறது. அதுவேகூட கல்லீரலை பாதிக்கக்கூடியது.
இப்போதும் ஒன்றும் பிரச்னையில்லை. உங்கள் மகனை முறையான மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். சரியான சிகிச்சையின் மூலம் கல்லீரல் நோய்களை சரிசெய்ய முடியும். மற்ற நோய்களைப் போல கல்லீரல் நோய்களை உடனடியாகக் கண்டுபிடிக்க முடியாது. நிறைய பேருக்கு புற்றுநோய் பாதித்த பிறகுதான் கல்லீரல் பாதிப்பே தெரியவரும்.
இப்போதைய தலைமுறையில், கல்லீரலில் கொழுப்பு படியும் 'ஃபேட்டி லிவர்' பிரச்னை அதிகம் இருப்பதைப் பார்க்க முடிகிறது. அந்த விஷயத்திலும் கவனம் தேவை. குழந்தைகளுக்கு சுகாதாரத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டியது மிக முக்கியம். சுகாதாரமற்ற நீர்நிலைகளில் குளிப்பது, சுகாதாரமற்ற நீரைக் குடிப்பது போன்றவற்றைத் தவிர்க்கச் சொல்லித் தர வேண்டும். தண்ணீர் மூலமும் ஆரோக்கிய குறைபாடுகள் வரலாம் என்பதால் அதிலும் கவனம் வேண்டும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment