Doctor Vikatan: சர்க்கரை நோயாளிகள் பேரீச்சம்பழம் சாப்பிடலாமா... உலர் திராட்சை, அத்திப்பழம் சாப்பிடலாமா?
பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்
எந்த உணவையும் சாப்பிட்ட பிறகு ரத்தச் சர்க்கரை அளவு எவ்வளவு அதிகரிக்கிறது என்பதைக் குறிப்பது 'கிளைசெமிக் இண்டெக்ஸ்' (Glycemic Index ). இந்த கிளைசெமிக் இண்டெக்ஸானது, டிரை ஃப்ரூட்ஸில் சிறப்பாக இருப்பதாக பல ஆய்வுகள் சொல்கின்றன.
உலர் பழங்களில், குறிப்பாக பேரீச்சம் பழத்தில் மக்னீசியம், பொட்டாசியம், இரும்புச் சத்துகள் இருப்பதால் இவை ஆரோக்கியமானவைதான். பேரீச்சம் பழத்தில் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவுதான். ஹெச்பிஏ1சி (HbA1c) எனப்படும் மூன்று மாத சராசரி ரத்தச் சர்க்கரை அளவானது கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் பேரீச்சம் பழம் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், எத்தனை எடுத்துக்கொள்கிறோம் என்பது மிக மிக முக்கியம்.
பழ ஜூஸ் அல்லது பிரெட் சாப்பிடுவதைவிட, உலர் பழங்கள் சாப்பிடுவது சிறந்தது என பல ஆய்வுகள் சொல்கின்றன். அந்த வகையில் 2 பேரீச்சம்பழம் சாப்பிடலாம். 100 கிராம் ஃப்ரெஷ் பேரீச்சம்பழத்தில் 75 கிராம் அளவு கார்போஹைட்ரேட் இருக்கிறது. ஆனாலும், அதைச் சாப்பிடுவதால் கிளெசெமிக் இண்டெக்ஸ் அளவு அதிகம் கூடுவதில்லை.
2 பேரீச்சம் பழம் என்பதும் நீரிழிவு கட்டுப்பாட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமே என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மூன்றுமாத ரத்தச் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டை மீறி இருப்பவர்கள் எடுக்கக்கூடாது. உலர் திராட்சையைப் பொறுத்தவரை அதில் 60 சதவிகிதம் சர்க்கரைச்சத்து இருக்கிறது. அதனால், அதை அப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக, தண்ணீரில் ஊறவைத்துச் சாப்பிடலாம்.
அதை தயிரில், ஓட்ஸ் கஞ்சியில், சாலட் தயாரிப்பில் என எப்படி வேண்டுமானாலும் சேர்க்கலாம். அதுவும் உங்கள் மூன்றுமாத சராசரி சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருப்பதைப் பொறுத்தே முடிவு செய்யப்பட வேண்டும்.
அத்திப்பழத்தைப் பொறுத்தவரை ஃப்ரெஷ்ஷான பழத்தில் கிளெசெமிக் இண்டெக்ஸ் ரொம்பவே குறைவு. அதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் அதிகம் என்பதால் எடுத்துக்கொள்ளலாம். உலர் அத்திப்பழத்தோடு ஒப்பிடுகையில், ஃப்ரெஷ்ஷான பழம் சிறந்தது. உலர் அத்திப்பழத்தை ரத்தச் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment