`48 மணி நேரத்திற்குள் நீரிழிவு நோயைக் குணப்படுத்தக்கூடிய மருந்து உள்ளது' என்று மூத்த நீரிழிவு மருத்துவர் வி மோகன் உத்தரவாதம் அளிக்கும் வீடியோ ஒன்று வைரலாகி பலரின் கண்டனங்களைப் பெற்றுள்ளது. இந்த வீடியோ செயற்கை நுண்ணறிவால் (AI) உருவாக்கப்பட்டது என மருத்துவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.
திருநெல்வேலி இந்திய மருத்துவ சங்கத்தின் முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோவில், அம்மருத்துவர் ஹிந்தியில் பேசுகிறார். அந்த மருந்து விளம்பரத்தில், மருத்துவர் மோகனின் உண்மையான காணொளியையும் அவரது குரலில் மாற்றப்பட்ட பதிப்பையும் இணைத்துள்ளனர். வல்லுநர்கள் ஏஐ உடன் இணைத்து இந்த வீடியோ (Deepfake videos) உருவாக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறியுள்ளனர்.
இது குறித்து மோகன் நவம்பர் 2023-ல் தமிழ்நாடு காவல்துறை சைபர் செக்யூரிட்டி பிரிவில் புகார் அளித்துள்ளார். அதனை தொடர்ந்து அதிகாரிகள் அந்த வீடியோவை நீக்கினர். ஆனால், மீண்டும் அந்த வீடியோ சோஷியல் மீடியாவில் பரவத்தொடங்கி இருக்கிறது என்கிறார் மருத்துவர்.
மருத்துவர் மோகன் இது குறித்து கூறுகையில், ``குரல் என்னைப் போலவே ஒலிக்கிறது; ஆனால், உதடு ஒத்திசைவு மோசமாக உள்ளது. இது போலியானது என்று நான் ஒரு செய்தியைப் பதிவிட்டேன். ஆனால், நான் மருத்துவம் பார்க்கும் நோயாளிகள் உட்பட எனக்குத் தெரிந்த பலர் அவர்களுக்கு மருந்தைப் பரிந்துரைக்க முடியுமா என்று என்னிடம் கேட்டனர்.
நீரிழிவு நோயிலிருந்து குணமடைவது சாத்தியம். ஆனால், அது மருந்துகள், உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி மூலம் மட்டுமே சாத்தியமாகுமே தவிர, வேறு எந்த மந்திர நிவாரணமும் சாத்தியமில்லை’’ என்று கூறியுள்ளார்.
இதுபோன்ற போலி வீடியோக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவ சங்கங்கள் கூறுகின்றன. சில சந்தர்ப்பங்களில், வீடியோக்களில் வருவது உண்மையான மருத்துவர்கள் இல்லை என்றும் கூறியுள்ளனர்.
``வெள்ளை நிற கோட் அணிந்தவர்கள் பெரும்பாலும் AI-ஆல் உருவாக்கப்பட்ட பாட்கள் (Bot). `சர்க்கரை மிட்டாய் மற்றும் பெருஞ்சீரகம் கலந்த பாலுடன் கூடிய பாதாம், மூளை நோய்களை குணப்படுத்தும்'… `தாவர செல்களில் இருந்து உருவாக்கப்படும் மாயாஜால மாத்திரைகள் எடை இழப்பைத் தூண்டும்'… போன்ற போலி வீடியோக்கள் வலம் வருகின்றன.
இந்தப் போலி வீடியோக்களை உருவாக்குவது எளிதானது. இப்போது இலவசமாக ஸ்மார்ட்போன் ஆப்களில் கூட அவற்றை எளிதாக உருவாக்குவதற்கான கருவிகள் உள்ளன. ஆனால், இதுபோன்ற போலிச் செய்திகள் ஆபத்தை விளைவிக்கும். சம்பவம் குறித்து உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கும்படி நாங்கள் அரசுக்குக் கடிதம் எழுதுவோம்.
இது குறித்து மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய நேரம் இது என்று நாங்கள் உணர்கிறோம்’’ என்று ஐஎம்ஏ தமிழ்நாட்டின் தலைவர் டாக்டர் கே எம் அப்துல் ஹசன் கூறியுள்ளார்.
Comments
Post a Comment