Doctor Vikatan: பலவிதமான மூச்சுப் பயிற்சிகள் பற்றி நிறைய சொல்கிறார்கள். நாம் அறியாமலேயே எப்போதும் நடைபெற்று வரும் இந்தச் செயலை நம் கவனம் இல்லாமலேயே நெறிப்படுத்த முடியுமா? நாம் சரியாகத்தான் சுவாசிக்கிறோமா என்பதை எப்படிக் கண்டறிவது?
-meenakshi mohan, விகடன் இணையத்திலிருந்து
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த யோகா மற்றும் இயற்கை மருத்துவர் யோ. தீபா
ஓர் உயிர் பிறக்கும்போது அழுகை மூலமாக சுவாசிக்க ஆரம்பிக்கிறது. அதே சுவாசம் நிற்கும்போதுதான் உயிர் பிரிவதாகச் சொல்கிறோம். இடைப்பட்ட நேரத்திலும் நம் சுவாசத்தை நாம் கவனிப்பதே இல்லை. நம்முடைய சுவாசத்துக்கும் நம் உணர்வுகளுக்கும் நிறைய தொடர்பு உண்டு. நம் மனநிலையைப் பொறுத்து சுவாசமும் மாறும் என்பதற்கான ஆய்வுகள் நிறைய உள்ளன.
உதாரணத்துக்கு, நாம் கோபப்படும்போது வேகமாக மூச்சு விடுவதையும், ரிலாக்ஸ்டாக இருக்கும்போது நிதானமாக, ஆழ்ந்து மூச்சு விடுவதையும் கவனிக்கலாம். அதுவே எதையாவது பார்த்து பயப்படும்போது சுவாசத்தை இறுக்கி, சில நொடிகளுக்கு மூச்சை அப்படியே இழுத்துப் பிடித்துக் கொள்வோம்.
திடீரென ஒரு பாம்பை பார்க்கிறோம் என வைத்துக்கொள்வோம். பயத்தில் மூச்சை இழுத்துப் பிடித்துக்கொள்வோம். அதுவே பாம்பு போனதும் நம் மூச்சு இயல்பாக மாறிவிடும். ஆனால், நாம் அந்தப் பாம்பை பற்றியே பலமணி நேரத்துக்கு, பல நாள்களுக்கு யோசித்துக்கொண்டிருப்போம். இப்படி ஒவ்வோர் உணர்வுக்கும் மூச்சுவிடும் தன்மை மாறுபடும். இப்படி மாறும்போது, சுவாசத்தால் நம் செல்களுக்கு போக வேண்டிய ஆக்ஸிஜனை குறைத்துவிடும்.
இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லா வயதினருக்கும் மன அழுத்தம் அதிகமாக இருக்கிறது. எந்த விஷயத்தையும் உடனுக்குடன் சமாளித்து, கடந்து செல்லாமல், அதையே மனதில் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்கிறோம். அந்த இறுக்கம் அப்படியே தொடர்கிறது. மன அழுத்தம் இருக்கும் நேரத்தில் நம் உடலில் கார்ட்டிசால் என்கிற ஹார்மோன் சுரக்கும்.
அது நம் தசைகளை இறுக்கமாக்கி, ரத்த நாளங்கள் சுருங்கி, ஆக்ஸிஜன் அளவு குறைந்து, நம் சுவாசமே மாறுபடுகிறது.
மூச்சை உள்ளிழுக்கும்போது நம் வயிற்றுப்பகுதி வெளியே வர வேண்டும். மூச்சை விடும்போது வயிற்றுப்பகுதி உள்ளே போக வேண்டும். இதுதான் நாம் சரியாக மூச்சுவிடுகிறோம் என்பதற்கான இலக்கணம். கண்களை மூடி சுவாசத்தை கவனித்தால், நாம் சரியாகத்தான் மூச்சு விடுகிறோமா என்று உணர முடியும். தவறாக மூச்சு விடுகிறோம் என்றாலே மன அழுத்தத்தில் இருக்கிறோம் என்பதையும் புரிந்துகொள்ளலாம். இதை முறையான பயிற்சிகளின் மூலம்தான் சரிப்படுத்த முடியும்.
தொடர்ந்து மூச்சுப் பயிற்சிகளைச் செய்துவரும்போது, நம் கவனமே இல்லாமல் முறைதவறிப் போனதுபோலவே, நம்மையும் அறியாமலேயே நம் சுவாசம் முறைப்படும். அதன் மூலம் செல்களுக்கான ஆக்ஸிஜன் சரியாகப் போகும். பாதிப்புகளிலிருந்து மீண்டு செல்கள் புதுப்பிக்கப்படும். ரத்த ஓட்டம் சீராகும். அதனால் நம் தூக்கம், வளர்சிதை மாற்றம், உடல் வெப்பநிலை என எல்லா செயல்களும் சரியாகும்.
மூச்சுப் பயிற்சியில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொருவித நோயை குணப்படுத்த உதவும். யோகா, இயற்கை மருத்துவத்தில் அப்படித்தான் நோய்க்கான பயிற்சிகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
தூக்கமின்மை, மன அழுத்தம், உடல் வலி, உடல் மந்தம் நீங்க, பதற்றம் தணிய, எதிர்ப்பாற்றலை அதிகரிக்க.... இப்படி ஒவ்வொரு பிரச்னைக்கும் ஒவ்வொரு வகையான மூச்சுப் பயிற்சி பரிந்துரைக்கப்படும். உதாரணத்துக்கு, வீஸிங் பிரச்னை உள்ளவர்கள், உடலைக் குளிர்ச்சியாக்கும் 'கூலிங் பிராணாயாமம்' செய்யக்கூடாது. இந்த விஷயம் தெரியாமல், யோகா பயிற்சி மையங்களை அணுகும்போது அவர்கள் பொதுவான பயிற்சிகளையே கற்றுத் தருவார்கள். இயற்கை மருத்துவரை அணுகும்போதுதான் அவரவர் பிரச்னைகளைக் கேட்டறிந்து சரியான மூச்சுப் பயிற்சிகளைப் பரிந்துரைப்பார்.
இந்த விஷயம் தெரியாமல் பலரும், 'நான் பல காலமாக மூச்சுப் பயிற்சி செய்கிறேன்.... ஒரு பலனும் இல்லை' என புலம்புவதைக் கேட்கலாம். தவறான மூச்சுப் பயிற்சி, தவறான விளைவுகளைத்தான் கொடுக்கும். யாருக்கு, எந்தப் பயிற்சி என தெரிந்து, முறைப்படி கற்றுக்கொண்டு செய்வதன் மூலம் முழுமையான பலன்களைப் பெற முடியும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment