Doctor Vikatan: வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிடுவது சரியானதா... என்னென்ன பழங்கள் சாப்பிடலாம்?
-என்.ரவி, விகடன் இணையத்திலிருந்து.
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர்.
உண்மையில், வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது. அப்படிச் சாப்பிடும்போது, பழங்களின் மூலம் கிடைக்கும் எனர்ஜி முழுமையாக அப்படியே கிடைக்கும்.
வொர்க் அவுட் செய்யப் போகிறீர்கள் என்றால் அதற்கு முன் வாழைப்பழம் சாப்பிடலாம். எல்லாவகையான வாழைப்பழங்களும் நல்லவைதான். சிட்ரஸ் வகை பழங்கள் தவிர்த்து எல்லாப் பழங்களுமே சாப்பிடலாம். ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் பழங்கள் அசிடிட்டியை அதிகரிப்பவை. வெறும் வயிற்றில் இவற்றை எடுக்கும்போது அமிலம் சுரக்கும் பிரச்னை அதிகமாகி, அல்சர் வரலாம். கொய்யாப்பழம், சற்று அசிடிட்டியை தூண்டக்கூடியது என்பதால் அதையும் தவிர்க்கலாம்.
அதிக நார்ச்சத்துள்ள பழங்கள், நம் வளர்சிதை மாற்ற செயல்பாடுகளை தாமதமாக்கும் என்பதால், அவற்றை எடுப்பதற்கு முன்பு, பால், தானியங்கள் போன்று எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.
உதாரணத்துக்கு, ஓட்ஸ் கஞ்சியோடு, நார்ச்சத்துள்ள பழங்களையும் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம். மற்றபடி, டயட் செய்கிறவர்கள், எந்தப் பழத்தை வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆப்பிள், பப்பாளி, தர்பூசணி, கிர்ணி உள்ளிட்ட எல்லா பழங்களுமே ஓகேதான்.
காய்கறி சாலட்டுகளை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டாம். நார்ச்சத்து அதிகம் என்பதால், அது வயிற்றுக்குத் தொந்தரவு தரலாம். சிறிது பனீர் சேர்த்து சாப்பிடலாம்.
அதேபோல வெறும் வயிற்றில் இளநீர் குடிப்பதையும் தவிர்க்கவும். அதுவும் அசிடிட்டியை ஏற்படுத்தும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment