Doctor Vikatan: கல்லூரி செல்லும் என் மகள் தினமும் காலை உணவு சாப்பிடுவதில்லை. அதற்கு பதில் எனர்ஜி டிரிங்க், ஸ்மூத்தி, ஜூஸ் என ஏதேனும் ஒன்றை குடித்துவிட்டுச் செல்கிறாள். இந்தப் பழக்கம் ஆரோக்கியமானதா... இவற்றைக் குடிப்பதால் பாதிப்பு வருமா?
பதில் சொல்கிறார் கோயம்புத்தூரைச் சேர்ந்த டயட்டீஷியன் கற்பகம்
மாணவர்கள், வேலைக்குச் செல்லும் பெண்கள் மற்றும் ஆண்கள் என எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பவர்களுக்கும், லைட்டான உணவோடு தங்கள் நாளைத் தொடங்க விரும்புபவர்களுக்கும், எனர்ஜி டிரிங்க் மற்றும் ஸ்மூத்திகள் இன்று விருப்பமான காலை உணவாக மாறிவிட்டன.
ஸ்மூத்திகள் நிச்சயமாக ஆரோக்கியமான தேர்வுதான், ஆனால் ஸ்மூத்தியில் சேர்க்கப்படும் பொருள்கள் மற்றும் அவற்றின் ஊட்டச்சத்து மதிப்பை கருத்தில் கொள்வது அவசியம். ஸ்மூத்தியில் பொதுவாக சர்க்கரைச்சத்து அதிகமாகவும், புரோட்டீன் சத்து குறைவாகவும் இருக்கும்.
எனவே, இதைக் குடித்ததும் உங்கள் ரத்தச் சர்க்கரை உயர்ந்து, அடுத்த ஒன்றிரண்டு மணிநேரத்தில் பசி உணர்வை ஏற்படுத்தும் அல்லது மதிய உணவு நேரத்தில் அதிக பசியை ஏற்படுத்தும். காலை உணவுக்கு ஸ்மூத்தி எடுத்துக்கொள்வதென முடிவெடுக்கும் முன், ஒரு தனிநபரின் உயரம், எடை, உடல்நல பாதிப்புகளைக் கருத்தில் கொள்வது அவசியம்.
காலை உணவுக்கு ஸ்மூத்தி எடுத்துக்கொள்ள விரும்புவோர், அதை சுவையாகவும் ஆரோக்கியமாகவும் மாற்றிக்கொள்ளலாம். பாதாம் பால், தேங்காய்ப் பால், சோயா பால், சாதாரண பால், தயிர் அல்லது இளநீர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை அடிப்படையாக வைத்து ஸ்மூத்தி தயாரிக்கலாம். ஸ்மூத்தியில் பல்வேறு வகையான பழங்களைச் சேர்த்து சுவையையும் நார்ச்சத்தையும் அதிகரிக்கலாம்.
ஸ்மூத்தியில் புரோட்டீன் பவுடர், தயிர், நட்ஸ் அல்லது நட்ஸ் பட்டர் சேர்ப்பது அதை இன்னும் சத்தானதாக மாற்றும். நட்ஸ், ஆளி விதை, சியா விதை, சப்ஜா விதை ஆகியவற்றைச் சேர்க்கலாம். சர்க்கரையோ, சுவையை அதிகரிக்க தேன், நாட்டுச் சர்க்கரை அல்லது கருப்பட்டியோ சேர்க்க வேண்டாம்.
300 முதல் 400 மில்லி அளவு ஸ்மூத்தி குடிப்பது நல்லது. அதைவிட அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். வாரத்தின் எல்லா நாள்களிலும் ஒரே மாதிரியான காலை உணவை சாப்பிடாமல் மாற்றி மாற்றிச் சாப்பிடுங்கள். அது உங்களுக்கு அனைத்துவிதமான சத்துகளும் கிடைக்க உதவும்.
சினைப்பை நீர்க்கட்டிகள், ஹார்மோன் பாதிப்புகள், நீரிழிவு, முறைதவறும் மாதவிடாய், வயிற்றுப் புண், அமிலம் எதுக்களிக்கும் பிரச்னை, வயிற்று உப்புசம் போன்ற பிரச்னைகள் இருந்தால், மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து ஆலோசகரிடம் ஆலோசனை பெற்று, ஸ்மூத்தி எடுத்துக்கொள்வது பற்றி முடிவெடுங்கள்.
உடலளவில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பவர்கள், சுறுசுறுப்புடன் இயங்குபவர்கள், விளையாட்டில் ஈடுபடுவோர் போன்றோர் ஸ்போர்ட்ஸ் டிரிங்க் அல்லது எனர்ஜி டிரிங்க் எடுத்துக்கொள்ளலாம். அது ஆற்றலைக் கொடுக்கும். களைப்பின்றி வைக்கும். ஆனால் அதை உணவுக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம். மற்றபடி, நல்ல கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்புள்ள இட்லி, தோசை, ஆம்லெட் போன்றவற்றையும், கஞ்சி, ஸ்மூத்தி போன்றவற்றையும் காலை உணவுக்கு மாற்றி மாற்றி எடுத்துக்கொள்ளலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment