Doctor Vikatan: பிசிஓடி பாதிப்பு உள்ளவர்கள், கருத்தரிக்க முடியுமா.... கருத்தரித்தாலும் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்குமா?
prabu, விகடன் இணையத்திலிருந்து...
பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி.
நீர்க்கட்டிகளை மருத்துவர்கள் 'ஒவேரியன் சிஸ்ட்' என்று சொல்வோம். ஆனால், இங்கே நீங்கள் குறிப்பிட்டிருப்பது 'பாலிசிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோம்' (Polycystic Ovarian Syndrome) அல்லது 'பாலிசிஸ்டிக் ஓவேரியன் டிசீஸ்' (Polycystic Ovarian Disease) என்று சொல்லப்படும் நீர்க்கட்டிகள் என்று நான் யூகிக்கிறேன். ஏனெனில், அந்த நீர்க்கட்டிகள்தான் குழந்தையின்மைக்கு முக்கிய காரணங்களாக அமைபவை.
நீர்க்கட்டிகள் இருந்தால் கருத்தரிக்க முடியுமா என தெரிந்துகொள்வதற்கு முன், நீர்க்கட்டிகள் என்றால் என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டும். பெண்ணின் சினைப்பைகளில் இயல்பாக உள்ள முதிர்ச்சியடையாத முட்டைகளையே நாம் நீர்க்கட்டிகள் என்று சொல்கிறோம். எல்லா பெண்களுக்கும் பிறக்கும்போதே சினைப்பையில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் முட்டைகள் இருக்கும். அதை `ஒவேரியன் ரிசர்வ்' என்று சொல்வோம்.
இந்த எண்ணிக்கையானது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். வயதாக, ஆக இந்த முட்டைகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வரும். சினைமுட்டைகளின் இருப்பிலிருந்து ஒன்று அல்லது இரண்டு முட்டைகள் முதிர்ந்து, வெடித்து அதன் உள்ளிருந்து ஓவம் எனப்படும் கருமுட்டை வெளியே வரும். அந்த நிகழ்வைத்தான் 'ஓவுஷன்' எனப்படும் 'அண்டவிடுப்பு' என்று சொல்கிறோம். இது நிகழ்ந்தால்தான் கருத்தரிக்க முடியும்.
பிசிஓஎஸ் பாதிப்பு உள்ளவர்களில் முட்டைகளின் இருப்பு நிறையவே இருக்கும். ஆனால், ஒவ்வொன்றும் வெவ்வேறு கட்ட முதிர்ச்சி நிலையில் இருக்கும். எதுவுமே முழுமையாக முதிர்ச்சியடைந்திருக்காது. பெரிதாகி, முதிர்ச்சியடையாததால் அந்த முட்டைகள் ஸ்கேன் பரிசோதனையின்போது சின்னச் சின்ன கட்டிகள் போன்று தெரியும். அவற்றையே நாம் நீர்க்கட்டிகள் என்று சொல்கிறோம்.
இந்தக் கட்டிகளை அறுவைசிகிச்சை செய்து அகற்றத் தேவையில்லை. ஒருவருக்கு சினைப்பை நீர்க்கட்டிகள் இருப்பதை ஸ்கேன் பரிசோதனையை மட்டும் பார்த்து உறுதிசெய்ய முடியாது. அத்துடன் அவர்களுக்கு வேறு சில அறிகுறிகளும் இருக்க வேண்டும். அதை 'ஹைப்பர் ஆண்ட்ரோஜெனிசம்' (Hyperandrogenism) என்று சொல்வோம். அதாவது, அவர்களுக்கு ஆண் ஹார்மோன்கள் அதிகமிருப்பதற்கான அறிகுறிகள் காணப்படும்.
இந்த பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு பருக்கள், உடல் முழுவதும் ரோம வளர்ச்சி போன்றவை தென்படும். இந்த அறிகுறிகளுடன், பீரியட்ஸ் சுழற்சி முறைதவறிப் போவது, ஸ்கேனில் நீர்க்கட்டிகள் தெரிவது என இந்த மூன்றில் இரண்டு அறிகுறிகள் இருந்தால்தான் பிசிஓடி பாதிப்பு இருப்பதாக உறுதிசெய்யப்படும்.
பிசிஓடி பாதிப்புக்கான முதல் சிகிச்சையே, வாழ்வியல் மாற்றங்கள்தான். உணவுக்கட்டுப்பாடு, எடைக்குறைப்பு, உடற்பயிற்சி போன்றவற்றின் மூலம் இந்தப் பிரச்னையை ரிவர்ஸ் செய்ய முடியும்.
சிலருக்கு மருத்துவ சிகிச்சைகளும் தேவைப்படும். கருத்தரிப்புக்கான சிகிச்சைகளும் தேவைப்படும். எனவே, பிசிஓடி பாதிப்பு உள்ளவர்கள் கருத்தரிக்க முடியாது என்பது தவறான நம்பிக்கை. அப்படியே கருத்தரித்தாலும் குழந்தைக்கு ஏதாவது பாதிப்பு வருமா என்ற பயமும் தேவையில்லை. அப்படி எந்த பாதிப்பும் வராது. எனவே, பிசிஓடி பாதிப்புக்கு சரியான நேரத்தில் முறையான சிகிச்சை எடுப்பது நல்லது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment