பாலியல் வன்கொடுமையில் இருந்து மீண்ட பெண் கர்ப்பத்தைக் கலைக்க விரும்பும் பட்சத்தில், அப்பெண்ணின் உடல்நிலையை ஆய்வு செய்ய மருத்துவக் குழுவை அமைக்க வேண்டும் என மேற்கு வங்க அரசுக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
பாலியல் வன்கொடுமையில் இருந்து மீண்ட 27 வயது பெண் தனது கர்ப்பத்தைக் கலைக்க உத்தரவு கோரி மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சப்யசாசி பட்டாச்சார்யா விசாரித்தார்.
பொதுவாகவே 1971 மருத்துவக் கருக்கலைப்பு சட்டப் பிரிவு (Medical Termination of Pregnancy Act, 1971) 3-ன் படி, 20 வாரங்களுக்கு மேற்பட்ட கர்ப்பத்தைக் கலைப்பதற்குத் தடை உள்ளது. மனுதாரர் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், பாதிக்கப்பட்ட பெண் கடுமையான மன அதிர்ச்சியில் இருந்ததார் எனவும் மருத்துவக் கருக்கலைப்பு சட்டத்தின் விதியில் உள்ள சில நிபந்தனைகளின் கீழ் 20 முதல் 24 வாரங்களுக்கு இடைப்பட்ட கர்ப்பத்தை மருத்துவ ரீதியாக கலைக்க முடியும் என்றும் தெரிவித்தார். எனவே, பெண்ணின் கர்ப்பத்தைக் கலைக்க அனுமதி அளிக்கும்படி கேட்டு இருந்தார்.
இது குறித்து நீதிபதி பட்டாச்சார்யா அளித்த தீர்ப்பில், ``நீதிமன்றம் இந்தத் துறையில் நிபுணத்துவம் வாய்ந்தது அல்ல. 27 வயதான மனுதாரரின் உடல்நிலையை ஆய்வுசெய்ய மாநில அரசு மருத்துவ வாரியத்தை (Medical Board) அமைக்க வேண்டும்.
மருத்துவக் குழுவில் குறைந்தது இரண்டு உறுப்பினர்களாவது இருக்க வேண்டும். அவர்கள் இருவரும் அவர்களின் துறையில் நன்கு பயிற்சி பெற்ற மருத்துவர்களாக இருக்க வேண்டும். அவர்களில் ஒருவர் பெண்களுக்கான மருத்துவத் துறையையும் , மற்றொருவர் குழந்தைகளுக்கான மருத்துவத் துறையையும் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
மனுதாரரின் கர்ப்பத்தை மருத்துவ ரீதியாக கலைப்பதற்கான சாதக பாதகங்களைத் தெளிவாகக் குறிப்பிட்டு, பிப்ரவரி 2-ம் தேதி இது தொடர்பாக மருத்துவக் குழுவின் அறிக்கையை மாநில அரசு தாக்கல் செய்ய வேண்டும். மருத்துவக் குழுவை விரைவில் அமைத்து மனுதாரரை இங்குள்ள எம்ஆர் பங்கூர் மருத்துவமனையில் பரிசோதிக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.
இந்த வழக்கு மீண்டும் பிப்ரவரி 2-ம் தேதி விசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment