ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலை வந்த பிறகும், திருமணம் தாண்டிய உறவுகள் இருந்துகொண்டே தான் இருக்கின்றன. அதிலும், சமீப சில வருடங்களாக இத்தகைய உறவுகள் சற்று அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கிற செக்ஸாலஜிஸ்ட் காமராஜ், இதுதொடர்பான கேஸ் ஹிஸ்டரி ஒன்றையும் பகிர்ந்துகொள்கிறார்.
''நடுத்தர வயது ஆண் ஒருவர், மிகுந்த படபடப்புடன் என்னைச் சந்திக்க வந்திருந்தார். 'நான் திருமணம் தாண்டிய உறவுல இருக்கேன் டாக்டர். எனக்கு ஏதாவது பால்வினை நோய் வந்திருக்குமோன்னு பயமா இருக்கு. செக் பண்ணி சொல்லுங்களேன்' என்றார். அவருடைய படபடப்புக்கான காரணம் எனக்கும் புரிந்தது. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். திருமண பந்தத்தில் இருந்துகொண்டு ஏன் இப்படி நடந்து கொண்டீர்கள் என்றேன். 'அந்தப் பொண்ணுதான் என்னைக் கூப்பிட்டாங்க' என்றார். நீங்கள் சொல்வது உண்மையாகவே இருந்தாலும் நீங்கள் ஏன் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டீர்கள் என்றேன். 'அவங்களுக்கு வேற யாரும் ஆதரவில்ல... அதனாலதான்...' என்று இழுத்தார்.
திருமணம் என்பதே ஒருவருக்கொருவர் உண்மையாக இருப்போம் என்று எடுத்துக்கொள்கிற உறுதிமொழிதான். நீங்கள் அதை மீறியிருக்கிறீர்கள். இது சரியல்ல. உங்கள் மனைவி உங்கள் மீது வைத்த நம்பிக்கையை உடைத்திருக்கிறீர்கள். நீங்கள் திருமணம் தாண்டி உறவு வைத்திருக்கும் அந்தப் பெண்ணுக்கு வேறு யாரும் ஆதரவு இல்லை என்றெல்லாம் காரணம் சொல்லாதீர்கள். நீங்கள் செய்ததைப் போலவே உங்கள் மனைவியும் திருமணம் தாண்டிய உறவில் இருந்துகொண்டு, 'அந்த ஆணுக்கு யாருமில்ல... அதனாலதான் அவர்கூட செக்ஸ் வெச்சுக்கிட்டேன்' என்று சொன்னால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா என்றேன். 'நான் செஞ்ச தப்பு நல்லா புரியுது டாக்டர்' என்று கண்கலங்கினார். அதன்பிறகு அவர் கேட்டுக்கொண்டபடி, ஹெச்.ஐ.வி உள்ளிட்ட பால்வினை நோய்கள் தொடர்பான பரிசோதனைகளை செய்யும்படி அறிவுறுத்தினேன். நல்லவேளை, பரிசோதனைகளின் முடிவில் அவருக்கு எந்த நோயும் இல்லையென்பது உறுதியானது.
எல்லோருக்கும் ஒரு வார்த்தை. திருமண உறுதிமொழியை மீறுவது தவறு என்பதில் இரண்டாவது கருத்தில்லை. அதே நேரம், 'தன் துணையைத் தவிர்த்து, வேறொரு நபருடன் பாதுகாப்பில்லாமல் உறவில் ஈடுபட்டவர்கள், உடனடியாக அந்தரங்க உறுப்பை 2 அல்லது 3 முறை சோப்பை பயன்படுத்தி நன்கு சுத்தமாக்க வேண்டும். இதனால், ஹெச்.ஐ.வி உள்ளிட்ட கிருமிகள் உடலுக்குள் நுழைவதை ஓரளவுக்குத் தடுக்க முடியும். இந்த 'ஓரளவு' வாய்ப்பும் ஆண்களுக்கு மட்டுமே... பெண்களுடைய அந்தரங்க உறுப்பின் அமைப்பின்படி, உறவுகொண்ட உடனே வாஷ் செய்தாலும் பலன் கிடைக்காது.
பால்வினை நோய்களே வராமல் இருக்க வேண்டுமென்றால், தன்னுடைய துணையைத் தவிர்த்து வேறு யாருடனும் உறவுகொள்ளக்கூடாது'' என்கிறார் டாக்டர் காமராஜ்.
Comments
Post a Comment