தமிழ்நாட்டில் கடந்த 29 நாள்களில் 30 நபர்கள் மூலம், 189 உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டுள்ளதாக தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் TRANSTAN தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி விபத்து, புற்றுநோய், பிறவிக் குறைபாடு மற்றும் தீக்காயம் உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல் உறுப்புகள், அவர்களின் குடும்பத்தினரின் முழு சம்மதத்தோடு, அறுவை சிகிச்சையின் மூலம் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. அந்த வகையில், ஒவ்வோர் ஆண்டும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்பவர்களுக்கு மாற்று உறுப்புகள் தேவைப்படுவதன் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
அத்துடன் பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு விதிகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் நாள்தோறும் ஏராளமான சாலை விபத்துகள் ஏற்படுகிறது. போக்குவரத்துக் காவல்துறையினரின் அறிவிப்புகள், போக்குவரத்து விதிகள் என எவற்றையும் மதியாது சரியான பாதுகாப்பு வசதிகள் இல்லாது (ஹெல்மட், சீட் பெல்ட் போடாமல்), பலர் வாகனங்களில் பயணம் செய்கின்றனர்.
இதனால் பெரிய அளவிலான ஆபத்துகளும், சில நேரங்களில் மூளைச்சாவு ஏற்படும் அபாயமும் இருக்கிறது. இதையடுத்து, விபத்துகளில் மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகள் யாருக்கும் பலனில்லாமல் வீணாய் மண்ணுக்குத்தான் செல்கிறது. உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு இல்லாததும் இதற்கான முக்கியக் காரணமாக விளங்குகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களுக்கு, அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார்.
அதன்படி, மூளைச்சாவு அடைந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், உடல் உறுப்பு தானம் அளிக்க ஒப்புதல் அளித்தவுடன்தான், உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்படுகின்றன. இதனைத் தொடர்ந்து அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் உடல் உறுப்பு தானம் செய்தவரின் இல்லத்தில் நடைபெறும் இறுதிச்சடங்கில், மாவட்ட ஆட்சியர் நேரடியாகப் பங்கேற்பதோடு இறந்தவருக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செய்யப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முதல்வர் சட்டமன்றத்தில் வெளியிட்ட இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருவதோடு, உடல் உறுப்பு தானம் குறித்து சாமானிய மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாகவும், அதிகப்படியான நபர்கள் தற்போது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 29 நாள்களில், 30 பேர் தங்களின் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர் என்று, தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் (TRANSTAN) தகவல் தெரிவித்துள்ளது. இதன்படி 2024 ஜனவரி 1-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, 2008 - ஆண்டுக்குப் பிறகு ஒரு மாதத்தில் பதிவான அதிகபட்ச எண்ணிக்கை இதுவாகும்.
தற்போதைய நிலவரப்படி, சிறுநீரகம் 48 பேர், கல்லீரல் 27 பேர், இதயம் 10 பேர், நுரையீரல் 13 பேர் என மொத்தம் 30 நபர்களிடமிருந்து 189 உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டுள்ளதாகவும், இதனால் உடல் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை செய்யும் பலருக்கு இது பயன்படும் எனவும் TRANSTAN தெரிவித்துள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY
Comments
Post a Comment