பரவிவரும் புதிய வகை JN 1 கொரோனாவை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
கடந்த 2019-ம் ஆண்டு உலகையே முடக்கிப் போட்ட கோவிட் 19 வைரஸ் பல்வேறு உருமாற்றங்களை அடைந்து, அதன் பரவல் ஒருவழியாக கட்டுக்குள் வந்தது. இது மீண்டும் தற்போது ஜே.என்.1 என்ற உருமாற்றத்தை அடைந்துள்ளது.
இந்தப் புதுவகை கொரோனா தனித்துவமான அறிகுறிகள் ஏதுமின்றி இருப்பதால், எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென டெல்லியைச் சேர்ந்த மருத்துவ ஆய்வக இயக்குநர் டாக்டர் சோகினி சென்குப்தா எச்சரித்துள்ளார்.
`ஜே.என்.1 கொரோனா உருமாற்றம் புதிய சவாலாக உருவாகியுள்ளது. தனித்துவமான அறிகுறி ஏதும் இல்லாமல் இருப்பதால் எச்சரிக்கையாக நடந்துகொள்ள வேண்டியது அவசியமாகியுள்ளது. தனிப்பட்ட முறையில் அறிகுறிகளை உணர்ந்தால், தானாகவே தனிமைப்படுத்திக் கொண்டு மற்றவருக்குப் பரவாமல் தடுக்கும் பொறுப்பும் நமக்கு உள்ளது. நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு போன்ற இணை நோய்கள் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று அபாயம் அதிகம் என்பதால் அவர்கள் இன்னும் கூடுதல் கவனமுடன் இருப்பது கட்டாயம்’ என்று கூறியுள்ளார்.
கடந்த புதன்கிழமை நிலவரப்படி இந்தியாவில் 109 பேருக்கும் மேல் புதிய வகை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதன் பரவல் குறித்து கணிக்க இயலாத நிலையிருப்பதால் வேறு பல மருத்துவ நிபுணர்களும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.
கொரோனா முதல் அலையின்போது, உலகுக்கே அதுதான் முதல் அனுபவம் என்பதால் அது குறித்து அச்சமும், பீதியும் பெருமளவில் இருந்தது. இரண்டாம் அலை இந்தியாவில் பெரும்பாலானோரை காவு வாங்கியது. ஆனால், அதன் பிறகு மூன்றாம் அலையின்போது தாக்கம் பெரிதாக இல்லாததாலும், கொரோனா குறித்த விழிப்புணர்வாலும் பலருக்கும் அச்சம் நீங்கியிருப்பது நல்ல விஷயம்தான். ஆனால், அது அலட்சியமாக மாறிவிடக் கூடாது.
நிலைமையின் தீவிரம் கருதி மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளன. முதல் மற்றும் இரண்டாம் அலையின்போது பின்பற்றிய விதிமுறைகளை இப்போதும் பின்பற்றுவது அவசியம். முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, கைகளை சுத்தமாகக் கழுவுவது, ஆரோக்கியமான உணவுமுறையைப் பின்பற்றுவது போன்ற வழக்கமான நடவடிக்கைகளை இப்போதும் பின்பற்றுவது அவசியம்.
பண்டிகை காலம், தொடர் விடுமுறைகள் போன்ற காரணங்களால் இடம்பெயர்வது, கூட்டம் கூடுவது போன்றவற்றை தற்போது முடிந்தவரைத் தவிர்க்க முடியாத நிலை உள்ளது. எனவே, வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவது அவசியம். கொரோனா தடுப்பூசிகளை இதுவரை போட்டுக் கொள்ளாதவர்கள் இப்போதேனும் போட்டுக் கொள்ள வேண்டும். சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவ ஆலோசனை அவசியம் என்றும் நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
எனவே, அக்கறை காட்டுங்கள்... அலட்சியம் வேண்டாம் !
- ஜி.ஸ்ரீவித்யா
Comments
Post a Comment