Doctor Vikatan: காலையில் வாக்கிங் செல்லும்போது, பூங்காக்களின் வெளியே வாழைத்தண்டு, பாகற்காய், முள்ளங்கி, கற்றாழை என பலவிதமான ஜூஸ் விற்பதைப் பார்க்கிறோம். இவை உண்மையிலேயே ஆரோக்கியமானவைதானா... யார், எந்த ஜூஸையும் குடிக்கலாமா?
பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார்
மாத்திரைகளின் ஆதரவின்றி, தொற்றாநோய்களின் தாக்கமின்றி ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால், தினமும் நடைப்பயிற்சி செய்வது இனி கட்டாயம். . மைதானங்களில், சாலையோர நடைப்பாதைகளில் உற்சாகமாக நடைபோடுபவர்களை அதிகமாகப் பார்க்க முடிகிறது.
நடைப்பயிற்சி செய்யும் இடங்களில், வாழைத்தண்டு சாறு, அறுகம்புல் ஜூஸ், முள்ளங்கி ஜூஸ், கற்றாழை ஜூஸ், கீரை சூப் என இயற்கை பானங்களை விற்பனை செய்யும் பல கடைகளையும் பார்க்கிறோம். இயற்கையான மூலிகைகளிலிருந்தும் உணவுப் பொருள்களிலிருந்தும் தயாரிக்கப்பட்ட பானங்கள் ஆரோக்கியமானவை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய சில விஷயங்களும் இருக்கின்றன.
மனித உடலின் தன்மையோ உள் உறுப்புகளின் செயல்பாடுகள், காலச்சூழல், பணிச்சூழல், வாதம், பித்தம், கபம் போன்ற உடல் தத்துவ அமைப்பிற்கேற்ப மாறுபடும் என்பதால் சில விஷயங்களைக் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக, கப உடல் தன்மை கொண்டவர்கள் குளிர், பனி நாள்களில் கற்றாழை பானங்களைப் பருகினால், கபம் அதிகரித்து கப நோய்கள் வரலாம். வெப்பம் சார்ந்த பகுதிகளில் தொடர்ந்து பணிபுரிகிறவர்களுக்கு குளிர்ச்சியான இயற்கை பொருள்கள் தேவை.
இருபத்தி நான்கு மணிநேரமும் குளிர்சூழ் அறைகளில் தொடர்ந்து பணிபுரியும் நபர்களுக்கு குளிர்காலங்களில் அவை ஏற்றுக்கொள்ளாது. கற்றாழை பானத்தை கோடைக்காலங்களில் தாராளமாக எடுத்துக்கொள்ளலாம். உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுப்பதோடு, ஆன்டி ஆக்ஸிடன்ட் பொருள்களையும் அதிகமாக வைத்திருக்கிறது கற்றாழை. ஆனால் குளிர்காலங்களிலும், மழைக்காலங்களிலும் அதைத் தவிர்ப்பது நல்லது.
'வாழைத்தண்டு சாறு, முள்ளங்கி சாறு மற்றும் அறுகம்புல் சாறுகளை மட்டும் குடித்தால் போதும்… உடல் எடையைக் குறைத்துவிடலாம்…’ என்ற எண்ணத்தை அறவே தவிர்க்க வேண்டும். நடைப்பயிற்சியோடு சேர்த்து இயற்கை பானங்களை அவ்வப்போது எடுத்துக்கொள்வதில் தவறில்லை. குறிப்பாக வாழைத்தண்டு சாறு, கோடைக்காலங்களில் உண்டாகும் சிறுநீர் எரிச்சலைக் குறைக்கப் பேருதவி புரியும். வாழைத்தண்டு சாறு சிறுநீரக உறுப்புகளின் செயல்திறனை அதிகரிக்கவும், சிறுநீரக கற்களை வெளியேற்றவும் உதவும். அறுகம்புல் சாற்றுக்கோ கழிவுகளை வெளியேற்றும் தன்மை இருக்கிறது. முள்ளங்கி சாறும் சிறுநீரை வெளியேற்றி பல்வேறு நன்மைகளைக் கொடுக்கும்.
பாகற்காய் ரத்தச் சர்க்கரை அளவைக் குறைக்கும் உணவுப் பொருள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதற்காகப் பாகற்காய் சாற்றை மட்டும் குடித்தால் ரத்தச் சர்க்கரை கட்டுக்குள் வரும் என்ற தவறான எண்ணத்தில் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான வாழ்வியல் முறைகளையோ, உணவியல் முறைகளையோ கடைப்பிடிக்காமல் இருப்பது உங்கள் உடலுக்கு நீங்கள் செய்யும் நம்பிக்கை துரோகம்.
நடைப்பயிற்சி செய்யாமல், இயற்கை பானங்களைப் பருகுவதற்காக மட்டும் மைதானங்களுக்கு செல்வோர் பலர். பானங்களின் நன்மைகள் நிச்சயம் கிடைக்கும், ஆனால் பானங்களால் மட்டுமே உடல் எடை குறையாது. உடல் உழைப்பும் முக்கியம். இன்னும் சிலர் தீவிரமாக நடைப்பயிற்சி செய்தபின்பு ஏற்படும் பசியைப் போக்க, கடைகளில் உள்ள சமோசா, போண்டா, பஜ்ஜி போன்ற நொறுக்குத்தீனிகளை எடுத்துக்கொள்வதை மாலைநேர மைதானங்களில் பார்க்க முடியும். நடைப்பயிற்சியால் கிடைத்த பலன்கள் அனைத்தும் இப்படிச் சாப்பிடப்படும் எண்ணெய்ப் பலகாரங்களால் சில நிமிடங்களில் காணாமல் போகும்.
ஆவாரம்பூ சாறு, கரும்புச்சாறு, இளநீர், பதநீர் போன்ற பானங்களை சூழலுக்கு ஏற்ப பயன்படுத்துவது முக்கியம். நாள்பட்ட இதய நோய்களுக்காக மருந்துகளை எடுப்பவராக இருப்பின் கீரை ரகங்களை எடுக்கும்போது மருத்துவரின் ஆலோனையைப் பெறுவது நல்லது.
இயற்கை பானங்களைத் தயாரிப்பவர்கள், குறிப்பிடப்பட்டுள்ள மூலிகைகளைத் தான் பயன்படுத்துகின்றனரா என்பதையும் அறிந்துகொள்வது முக்கியம். உதாரணத்துக்கு ‘முடக்கறுத்தான் சூப்பில்’ முடக்கறுத்தான் தான் அங்கம் வகிக்கிறதா என்பதை உறுதிசெய்யவும். குளிர்காலங்களில் விற்பனை செய்யப்படும். முடக்கறுத்தான் சூப், முசுமுசுக்கை சூப், பிரண்டைத் துவையல் போன்றவற்றை எடுத்துக்கொள்வதில் தவறில்லை. அனைத்திற்கும் மேலாக, தயாரிக்கப்படும் பானங்கள் சுகாதாரமான முறையில் இருக்கின்றனவா என்பதையும் கருத்தில் கொள்ளவும்.
மொத்தத்தில்… நடைப்பயிற்சி செய்யும் இடங்களில் விற்பனை செய்யப்படும் இயற்கை பானங்களைத் தாராளமாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால் எதற்காக எடுக்கிறோம்… காலச்சூழல் என்ன… உடலுக்கான தேவை என்ன… ஆகிய விஷயங்களைப் புரிந்துகொண்டு எடுப்பதே முறையானது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment