பிரிட்டனில் உள்ள தனியார் உணவகம் சார்பாக நடத்தப்பட்ட ஆய்வில் இன்றைய இளம்தலைமுறையினர் பலர் உணவு ஆர்டர் செய்யும்போது ஒருவித பதற்றத்தை உணர்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதனை 'மெனு ஆங்சைட்டி' (Menu anxiety) என்கின்றனர். உணவகத்துக்குச் சாப்பிடச் செல்லும்போது, என்ன சாப்பிடலாம் என்பதை முடிவு செய்வதற்கே குழப்பமடைந்து, ஒருவித பதற்றத்தை உணர்வதைத்தான் மெனு ஆங்சைட்டி என்கின்றனர்.
பிரிட்டனில் Prezzo என்ற உணவகத்தில் சாப்பிட வந்த 2000 நபர்களிடம் அவர்களின் உணவுப் பழக்கங்கள் குறித்துப் பல கேள்விகள் கேட்கப்பட்டன. அவர்கள் அளித்த முடிவுகளின் அடிப்படையில் நடைபெற்ற ஆய்வின் இறுதியில், 'Gen z' என்று அழைக்கப்படும் தற்போதைய இளம் தலைமுறையினரில் 87% பேர் இந்த மெனு ஆங்சைட்டியால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
Gen z நபர்களை ஒப்பிடும்போது, அவர்களின் முந்தைய தலைமுறையினருக்கு உணவு ஆர்டர் செய்யும்போது மனப்பதற்றம் குறைந்த அளவிலேயே ஏற்படுவதாகவும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தப் பதற்றத்தின் காரணமாக பெரும்பாலான இளைஞர்கள் தானே ஆர்டர் செய்வதற்கு பதிலாக பிறர் தமக்கும் சேர்த்து ஆர்டர் செய்வதை விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்விலும் மூன்றில் ஓர் அமெரிக்கருக்கு உணவு ஆர்டர் செய்யும்போது ஏற்படும் 'மெனு ஆங்சைட்டி' ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
உணவு ஆர்டர் செய்யும்போது ஏன் மனப்பதற்றம் ஏற்படுகிறது என்பதற்கான காரணங்கள் குறித்து மதுரையைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர் சிமோனாவிடம் கேட்டோம்:
“இன்றைய இளம் தலைமுறையினர் உணவு ஆர்டர் செய்யும்போது மட்டுமன்றி, பல சூழல்களில் இதுபோன்ற மனப்பதற்றத்துக்கு ஆளாகின்றனர். இதற்கு காரணம் ஒரு முடிவை எடுப்பதில் அவர்களுக்கு ஏற்படும் சிரமங்களே. இன்றைய உலகில் நாம் எது குறித்து யோசித்தாலும் எல்லாவற்றுக்கும் பல்வேறு தேர்வுகள் (Options) உள்ளன.
தேர்வுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது கூடவே குழப்பமும் அதிகமாகிறது. இன்றைய இளம்தலைமுறையினரில் பெரும்பாலானவர்கள் டிஜிட்டல் உலகிலேயே பெரும்பாலான நேரத்தைக் கழித்து ஒருவிதமான Comfort Zone-ல் குறுகிய வட்டத்துக்குள் இருக்கின்றனர். இந்த நிலை அவர்கள் புதிதாக எதையாவது முயற்சிசெய்து பார்ப்பதைத் தடுக்கிறது.
இதன் காரணமாகவே புதிதாக ஏதாவது ஆர்டர் செய்வோம் என பல நிமிடங்கள் மெனு கார்டில் தீர ஆராய்ந்தாலும் வழக்கமாக ஆர்டர் செய்யும் உணவையே ஆர்டர் செய்வார்கள். ஆர்டர் செய்யும் உணவு நன்றாக இல்லாமல் போய்விட்டால், 'எப்போதும் சாப்பிடுவதையே சாப்பிட்டிருக்கலாம்' என குற்றஉணர்ச்சியும் ஏற்படும். இதன் காரணமாகவும், இந்த நிலையைத் தவிர்க்க வேண்டும் என்பதிலேயே அவர்களுக்கு மனப்பதற்றம் உண்டாகலாம்.
உணவின் விலை பற்றிய ஆராய்ச்சியும் மனப்பதற்றத்தை அதிகரிக்கலாம். நண்பர்களுடன் சாப்பிடச் சென்றால் 'இதெல்லாம் சாப்பிடுவாயா?' 'இதைக்கூட சாப்பிட மாட்டியா?' போன்ற கேலி கிண்டல்களைத் தவிர்க்க வேண்டும் என்று அதிக கவனத்துடன் இருப்பார்கள். இதுவும் மனப்பதற்றத்துக்கு காரணமாக அமையலாம்.
இன்றைய தலைமுறையினர் சாப்பிடுவதற்கு நிறைய விதிமுறைகளைக் கடைப்பிடிக்கின்றனர். வீகன், குளூட்டன் ஃப்ரீ எனப் பல உணவுப்பழக்கங்களைப் பின்பற்றுகிறார்கள். அதுபோன்ற நிலையில் உணவகங்களுக்குச் சாப்பிடச் செல்லும் சூழலில் தாங்கள் விருப்பத் தேர்வாக இருக்கும் உணவு கிடைக்குமா, கிடைக்கும் உணவுகளில் எதெல்லாம் அவர்களின் விதிமுறைகளுக்கு சரியாக இருக்கும் என்று ஆராய்வதும் மனப்பதற்றத்தை அதிகரிக்கலாம்.
பொதுவாக முடிவெடுக்கும் திறன் (Decision making) குறைவாக இருப்பவர்களுக்கு மெனு ஆங்சைட்டி அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதுபோன்ற வாழ்வின் சிறிய விஷயங்களில்கூட இப்படி ஆகுமோ, அப்படி ஆகுமோ என அதிகம் யோசித்து குழப்பமடைகிறார்கள். அனைத்தையும் ஆராய்ந்து விட்டு கடைசியில் எப்போதும் சாப்பிடும் எதையாவது ஆர்டர் செய்வார்கள். சில சமயம் புதிதாக எதையாவது ருசிக்க வேண்டும் என்றால் ரிஸ்க் எடுக்கத் தயங்கக்கூடாது.
ஒருமுறை ஆர்டர் செய்து சாப்பிட்டது நன்றாக இல்லாமல் போனாலும் சரி புதிதாக எதையோ முயன்றோமே என்ற மனப்பக்குவத்துக்கு வர வேண்டும். உணவகத்தில் பதற்றத்தைத் தவிர்ப்பதற்கு வீட்டில் இருந்து புறப்படும்போதே அந்த உணவகத்தில் என்ன மாதிரியான உணவுகள் உள்ளன, அவற்றின் விலை என்ன என்பதைத் தெரிந்து வைத்துக் கொள்ளலாம். ஆன்லைனில் உணவின் தரம் மற்றும் சுவை பற்றிய ரெவ்யூக்களையும் பார்க்கலாம். இதுபோன்ற முன் ஆயத்தங்கள் பதற்றத்தைக் குறைக்க உதவும்" என்றார்.
மெனு கார்டை பார்த்தும் உங்களுக்கும் பதற்றம் ஏற்பட்டிருக்கிறதா... கமென்ட்ஸில் சொல்லலாமே!
Comments
Post a Comment