வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
நவம்பர் மாதம் பிறக்கும் முன்பே அதைப்பற்றியே பேச ஆரம்பித்து விட்டார் நண்பர் நாராயணன்! எங்கள் அடுக்ககத்தில், அருகாமை வீட்டு சொந்தக்காரர். சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்றவர். எனக்கு இன்னும் நான்கு ஆண்டுகள்: அவ்வளவுதான். நாராயணன் சாருக்கு நவம்பர் மாதத்தைப் பற்றி எதிர்நோக்கு, எண்ணச்சுழற்சி. வயோதிகமோ அல்லது பாதுகாப்பின்மை உணர்வோ என்னவென்று தெரியவில்லை. வேறொன்றுமில்லை. வங்கிக்கு சென்று ஓய்வூதியம் பெறுவோர் வருடம் ஒருமுறை சமர்ப்பிக்கும் வாழ்நாள் சான்றிதழ் கொடுக்கவேண்டும் என்பது பற்றிதான். சில மாதங்களுக்குமுன் அவர் உடல்நலத்தில் பின்னடைவு. துணையில்லாமல் வெளியே அனுப்ப அவர் மனைவிக்கு அச்சம். நான் அழைத்து செல்கிறேன் என்று உறுதி அளித்திருந்தேன்.
அன்று நாராயணன் சாரை என் பைக்கில் அழைத்துக்கொண்டு அவர் வங்கிக்கிளைக்கு சென்றேன். கௌண்டரில் பெற்ற விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தார். அருகில் நின்றிருந்த என்னிடம், என்ன வேண்டும் என்று அந்த இளம்பெண் கேட்க, நான் அவருக்கு உதவியாக வந்திருக்கிறேன் என்றேன். "சார், இந்த படிவத்தில் பிபிஓ எண் எழுதிக்கொண்டு வாருங்கள்" என்றார் அந்த ஊழியர். நான், "சார் இதே அலுவலகத்திலும் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். மற்ற விவரங்களிலிருந்து, அவர் ஃபைலைப்பார்த்து நீங்களே எழுதிக்கொள்ளலாமே " என்றேன். அவர் மறுத்து, "இதை இம்மாத கடைசிக்குள் சமர்ப்பிக்க இன்னும் நாட்கள் இருக்கின்றன. முழுமையாக பூர்த்தி செய்து பின்னர் எடுத்து வாருங்கள்" என்றார். நான் அந்த பெண்ணிடம் பேசியது எடுபடவில்லை. நாங்கள் வாடிக்கையாளர் இருக்கைக்கு சென்று அமர்ந்தோம்.
எனக்கு சமீபத்தில் வாட்ஸ் ஆப்பில் வந்த ஜோக் நினைவுக்கு வந்தது. வங்கியிலிருந்து, ஓர் ஓய்வூதியருக்கு வந்த கடிதம்.'தாங்கள் இந்த ஆண்டிற்கான வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பித்து உள்ளீர்கள். ஆனால் சென்ற ஆண்டு சான்றிதழ் கொடுக்காததால், எங்கள் ஃபைலில் இல்லை, தாங்கள் சென்ற ஆண்டு உயிரோடு இருந்ததற்கான ஆதாரம், அந்த சான்றிதழ் மட்டும்தான். அதனை உடனடியாக சமர்ப்பிக்கவும்' இது ஜோக்கென்றாலும், பல நடைமுறைகள் இப்படித்தானே இருக்கின்றன. வேலைப்பளு காரணமென்றாலும் வேலையில் மனம் ஒன்றிய ஈடுபாடு குறைவாக இருக்கிறது என்று நாம் சொன்னால், பெருசுகளுக்கு அந்த காலம் என்ற நினைப்பு என்று காதில் வாங்கிக்கொள்ள மாட்டார்கள்.
சரி, புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் ஊழியருக்கு எல்லா நடைமுறைகளும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. நேரில் வரும் வயதானவரை திருப்பி அனுப்பிவிட்டு, ஒருவேளை உடல்நலக்கோளாறினால் மாத இறுதிவரை அவர் வராமல் போனால், வங்கி அதிகாரி அவர் இருப்பிடத்திற்கே நேரில் சென்று, உறுதி செய்து பின்னர் கணினியில் பதிவேற்றம் செய்யவேண்டும். வீட்டிலிருந்த படியே வீடியோ மூலம் சமர்ப்பிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், சில சமயம் நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டுவிடுவதால் முதியவர்களுக்கு அதில் முழுமையான நம்பிக்கை இன்னும் ஏற்படவில்லை.
அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது, சில வாடிக்கையாளர்கள் நாராயணன் சாரை நினைவு கூர்ந்து வணங்கி நலம் விசாரித்து சென்றனர். ஒருவர் அவர் காலைத்தொட்டு வணங்கி, "சார், சௌக்கியமா? எப்படி வந்தீர்கள்? என் காரில் உங்கள் வீட்டில் கொண்டு விட்டு வருகிறேன்" என்றார். என்னுடன் வந்திருப்பதாகச்சொல்ல, அவர் என்னிடம் வந்து, பேசிவிட்டு, "சார் காலத்தினால் செய்த பேருதவியினால்தான் நான் இன்று தலைநிமிர்ந்து நிற்கிறேன்" என்று நன்றிபெருக்குடன் சொன்னார். படிப்படியாக மனிதர்கள் நீக்கப்படுவார்கள் என்று எப்போதோ படித்தது: அறுபது வயதில் பணியிடம் உங்களை நீக்கும்: எழுபதில் சுற்றத்தார்: எண்பதில் பெற்ற குழந்தைகள்: தொண்ணூறுக்குப்பிறகு இவ்வுலகம்.ஆனால் பணியிடத்தில் அவருடன் தொடர்பு கொண்டவர்கள் மனதில் இருந்து இன்னும் நீக்கப்படவில்லை என்பது அவர் மீது கொண்டிருந்த மதிப்பை மேலும் கூட்டியது.
இப்படியே வீட்டிற்குத்திரும்புவதைவிட தலைமை மேலாளரை சந்தித்துவிட்டு செல்லலாம் என்று நாராயணன் சாரிடம் சொன்னேன். ஒப்புக்கொண்டார். கூட்டமாக இருந்ததால், பின் வரிசை இருக்கையில் அமர்ந்தோம். நீண்ட காத்திருப்புதான். எங்கள்முறை வந்ததும் அறை உள்ளே சென்றோம். வேறு மாநிலத்துக்காரர். நடுத்தர வயது. காதில் அலைபேசி அல்லது தொலைபேசியில் மாறிமாறி பேசிக்கொண்டு சுறுசுறுப்பாகவும், நல்ல சிவப்பு நிறத்தில் மிடுக்காகவும் இருந்தார்.
ஆங்கிலத்தில் பரஸ்பர அறிமுகத்திற்குப் பிறகு, அவர் இந்த அலுவலகத்திற்கு பணியிடமாற்றம் பெற்று சிலமாதங்கள் ஆகிவிட்டன என்றும், ஆனால் ஒருமுறைகூட நாராயணன் சாரை பார்க்கவில்லை என்றும் சொன்னார்.
நான் அவருடைய உடல்நலமின்மை யையும், அவர் ஓய்வூதிய விவரங்கள் வைத்த இடம் உடனடியாக அவர் நினைவுக்கு வரவில்லையென்றும், வாழ்நாள் சான்றிதழ் கொடுக்க வந்திருப்பதாகவும், பிபிஓ எண் குறிப்பிடாமல் படிவத்தை எடுத்து வந்திருப்பதாகவும் கூறினேன். இதே அலுவலகத்தில் அவரது அதே இருக்கையில் நாராயணன் சார் சில ஆண்டுகள் வேலை பார்த்திருந்தாலும், திருப்பி அனுப்பப்பட்டதை சொன்னேன். அவர் புன்முறுவலுடன், பெரியமனது வைத்து படிவத்தைப் பெற்றுக்கொண்டார்.என்ன இருந்தாலும் தொழில் திறன், அனுபவம் மிக்க அதிகாரி என்பதை அவர் செய்கை நிரூபிக்கிறது அல்லவா.
அவருக்கு தொலைபேசி அழைப்புகள் வந்தவண்ணம் இருந்ததாலும், அறைக்கு வெளியே சந்திப்புக்காக பலர் காத்திருந்ததாலும், கிளம்ப ஆயத்தமானோம். சைகை மூலம் சற்று காத்திருக்க சொன்னார். பின்னர் நாராயணன் சாரிடம் ஓய்வு பெற்று எத்தனை ஆண்டுகள் என்று விசாரித்தார். வயதை கணக்கிட்டுவிட்டு பின்னர் சொன்னார், "நான் அறுபது வயது வரைகூட உயிரோட இருப்பேனா என்று தெரியவில்லை" நாராயணன் சார், "ஏன் அப்படி சொல்கிறீர்கள்? ஏதாவது உடல்நலக்கோளாறா?" என்று கேட்டார். அவர், அதெல்லாம் ஒன்றும் இல்லை. பணிச்சுமை பலி வாங்கிவிடும் போலிருக்கிறது" என்றார்.
நாராயணன் சார் அமைதியாக, "நாம் எத்தனை வயதுவரை இருக்க வேண்டும் என்பது நம் கையில் இல்லை. நம்பிக்கை இழக்காதீர்கள். நமக்கு மேலே உள்ளவன் பார்த்துக்கொள்வான். அந்தந்த காலகட்டத்தில், அப்போதைக்கான பணிச்சுமை, அழுத்தம், பதற்றம், இறுக்கம் எல்லாம் இருக்கத்தான் செய்தன. உங்கள் மனசாட்சிக்கு விரோதமில்லாமல், கடமையை நேர்மையாக செய்யுங்கள். அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். இன்றும், என்றும் தங்கள் மகிழ்ச்சியான வாழ்விற்கு, வாழ்த்துகள். அடுத்தமுறை சாவகாசமாக பேசுவோம்" என்று கைகூப்பி கிளம்பினார் . நான் பின்தொடர்ந்தேன்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
Comments
Post a Comment