Doctor Vikatan: நம் எல்லோருக்கும் ஏதோ ஒரு சத்துக் குறைபாடு இருப்பதைப் பார்க்கிறோம். ஏதேனும் பிரச்னைக்காக மருத்துவர்களிடம் செல்லும்போது அவர்கள், சத்து மாத்திரைகளைப் பரிந்துரைக்கிறார்கள். எல்லோருக்கும் சத்து மாத்திரைகள் அவசியமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்
தினமும் சரிவிகித உணவு உட்கொள்வோருக்கு சத்து மாத்திரைகள் தேவையே இல்லை.
சரிவிகித உணவு உட்கொள்ளும் பட்சத்திலும் சில ஊட்டச்சத்துகள் தேவைப்படலாம். அதில் மிக முக்கியமானது வைட்டமின் டி. குறிப்பாக இந்தியாவில் வைட்டமின் டி செறிவூட்டப்பட்ட உணவுகள் பெரிதாகக் கிடைப்பதில்லை. சூரிய ஒளியிலிருந்து மட்டுமே கிடைக்கக்கூடியது வைட்டமின் டி. வெயில் காலத்தில் சருமத்தைக் காக்கவும் சருமப் புற்றுநோய் வராமல் தடுக்கவும் சன் ஸ்கிரீன் உபயோகிக்கிறோம். அதனால் நமக்குப் போதுமான வைட்டமின் டி கிடைப்பதில்லை.
இந்தியாவை பொறுத்தவரை வைட்டமின் டி குறைபாடு மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. 1000 முதல் 2000 இன்டர்நேஷனல் யூனிட் அளவுள்ள வைட்டமின் டி சப்ளிமென்ட் அல்லது குறைந்தபட்சமாக 800 இன்டர்நேஷனல் யூனிட் அளவுள்ள மல்டி வைட்டமின் சப்ளிமென்ட் தினமும் எடுத்துக்கொள்ளலாம். வைட்டமின் டி-க்கு இணையான இன்னொரு முக்கிய சப்ளிமென்ட் வைட்டமின் பி 12. சைவ உணவுக்காரர்களுக்கு, குறிப்பாக வீகன் உணவுப்பழக்கம் உள்ளவர்களுக்கு இந்தச் சத்து மிக முக்கியமானது.
ஏனென்றால் வைட்டமின் பி 12 சத்தானது பெரும்பாலும் அசைவ உணவுகளில் இருந்தே கிடைக்கக்கூடியது. பால், முட்டை போன்றவற்றைக்கூட சாப்பிடாத கறார் சைவ உணவுப்பழக்கம் உள்ளவர்களுக்கு தீவிரமான வைட்டமின் பி 12 குறைபாடு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இவர்களும் வைட்டமின் பி 12 அளவுகளைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு, மருத்துவரின் பரிந்துரையோடு அதற்கான சப்ளிமென்ட் எடுத்துக்கொள்ளலாம். புளிக்கவைக்கப்பட்ட உணவுகள், கடல்பாசி போன்ற சில சைவ உணவுகளில்தான் வைட்டமின் பி 12 இருக்கிறது. சப்ளிமென்ட்டாக எடுக்க விருப்பமில்லாதவர்கள் மேற்குறிப்பிட்ட உணவுகளை தினமும் உங்கள் மெனுவில் இடம்பெறுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
இதற்கு அடுத்த இடத்தில் உள்ளது ஒமேகா 3 கொழுப்பு அமிலம். இது இதய நலனுக்கு மிக நல்லது. எனவே மருத்துவ ஆலோசனையோடு ஒமேகா 3 சப்ளிமென்ட் எடுத்துக்கொள்வதில் தவறில்லை. அடுத்த முக்கிய சத்தான ஆன்டி ஆக்ஸிடன்ட் பழங்கள் மற்றும் காய்கறிகளில்தான் பிரதானமாக இருக்கும். அந்த உணவுகள் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்போதுதான் அவற்றின் முழுப் பலன்களையும் பெற முடியும்.
புரோபயாடிக் எனப்படும் நல்ல பாக்டீரியா உள்ள தயிர், யோகர்ட் போன்றவை உங்கள் குடலின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும். ரெஸ்வெரட்டால் என்பதும் மிக முக்கியமான ஒரு சப்ளிமென்ட். புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படக்கூடியது. ஆன்டி ஆக்ஸிடன்ட்டாகவும் செயல்படும். இதயத்துக்கும் நல்லது. திராட்சை, பெர்ரி போன்றவற்றில் இந்தச் சத்து அதிகம் உள்ளது.
எனவே எந்த சப்ளிமென்ட்டையும் மருத்துவ ஆலோசனையின்றி நீங்களாகப் பின்பற்ற வேண்டாம். தேவை இருப்பின் மருத்துவர் பரிந்துரைக்கும் அளவு, பரிந்துரைக்கும் நாள்களுக்கு மட்டும் எடுத்துக்கொண்டால் போதுமானது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment